மத்திய அரசின் திருநர்களுக்கான தேசிய கவுன்சில்

மத்திய சமூக நீதி அமைச்சரின் தலைமையில் ‘திருநர்களுக்கான தேசிய கவுன்சில்’ மத்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கவுன்சிலில் மத்தியத் துறைகளின் பத்து பேரும், ஐந்து மண்டலங்களில் (தென்னிந்தியா, வட இந்தியா, கிழக்கிந்தியா, மேற்கிந்தியா, வடகிழக்கிந்தியா) மண்டலத்துக்கு ஒரு மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ ஐந்து பிரதிநிதிகளும், திருநர்களுக்காக செயல்படும் அமைப்புகளில் இருந்து ஐந்து பிரதிநிதிகளும், திருநர்களுக்காக செயல்படும் ஐந்து வல்லுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த முறை ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசப் பிரதிநிதியும், ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, திரிபுரா மாநிலப் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய பதவிக்காலம் மூன்று வருடம். அதன்பிறகு சுழற்சி முறையில் அடுத்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்தியத் துறைகளைப் பொறுத்தவரையில் சுகாதாரம்,  உள்துறை,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை,  மனிதவள மேம்பாட்டுத்துறை, சிறுபான்மையினர், கிராம வளர்ச்சி,  தொழில்துறை,  சட்டம் ஆகிய அமைச்சகங்களிலிருந்து உறுப்பினர்கள் இந்த கவுன்சிலின் கூட்டுச் செயலாளர் நிலை உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும்  ஓய்வூதியத் துறை, நிதி ஆயோக், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றிலிருந்தும் ஒவ்வொரு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

திருநர்கள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த கவுன்சில் குறித்த தகவல் ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

திருநர்களுக்கான தேசிய கவுன்சில் கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து முக்கியப் பணிகளை செய்யும்.

  • திருநர்களுக்கான கொள்கைகள்,  திட்டங்கள், சட்டம் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • திருநர்கள் சமத்துவம் மற்றும் முழு பங்களிப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
  • திருநர்களுக்காக செயல்படும் அரசுத் துறைகள், அரசு சாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
  • திருநர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல்;
  • மத்திய அரசு பரிந்துரைத்த மற்ற செயல்பாடுகளை செய்தல்.

“பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்ததில் வெளிப்படைத் தன்மை இல்லாதது கவலைப்படத்தக்கது.” என்று மணிப்பூரைச் சேர்ந்த நுப்பி மான்பி மற்றும் திருநர் உரிமை ஆர்வலருமான சாந்தா குராய் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைப் பேட்டியில் கூறியுள்ளார்.

திருநர்களுக்கான தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு அதன் முதல் மூன்று ஆண்டுகளுக்கான பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் ஒவ்வொரு மண்டலத்துக்கான பிரதிநிதிகளின் தேர்வும் வெளிப்படையாக இல்லாததால் எந்த அடிப்படையில் தேர்வு நடைபெற்றது என்கிற கேள்வியும் எழுகிறது.

திருநர்கள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019 பற்றி மேலும் அறிய

திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

திருநர்கள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) மசோதா 2019 குறித்த சம்பூர்ணா பணிக்குழுவின் அறிக்கை

திருநர்க்கு எதிரான மசோதாவைத் திரும்பப் பெறுக #StopTransBill2019