திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

Alternative Law Forumன் ஒரு வெபினாருக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஜுன் 12, 2020 அன்று “திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?” என்ற தலைப்பில் நானும் திருநர் செயற்பாட்டாளர் ரச்சனா முத்ராபோயினாவும் பேசுவதாக இருந்தது. இணையம்  செயலிழந்தததால் என்னால் வெபினாரில் பேச முடியவில்லை. நான் பேசுவதாக இருந்த உரையை இங்கே தந்திருக்கிறேன்.

பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. என் பேச்சைத் தொடங்குவதற்கு முன்னதாக இந்த வெபினாரில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆதிக்க பாலினத்தைச் (cisgender, சிஸ் பாலினம்) சேர்ந்த, எதிர்பாலீர்ப்பு கொண்ட நபருக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்: நாங்கள் எந்த திருநர் சமூகத்தின் பிரதிநிதிகளாக இங்கே வந்திருக்கிறோமோ அவர்களுக்குச் சேரவேண்டியவற்றைத் திருப்பிக் கொடுங்கள், கோவிட்-19 சூழலை முன்னிட்டு திருநர்கள் முன் நின்று நடத்தும் எல்லா நிதி சேகரிப்பு முயற்சிகளுக்கும் நிதியுதவி அளியுங்கள்.

திருநர் சட்டம், விதிமுறைகள் குறித்து பல்வேறு பணிகள் நடந்திருக்கின்றன. சென்ற வருடத்தைய நிகழ்வுகள் தொடங்கி இப்போது அச்சுறுத்தலாக இருக்கும் கொள்ளை நோய் சூழல் உட்பட நாம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துவந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை இந்த சட்டமும் விதிமுறைகளும் இயற்றப்பட்ட விதம் எந்த அளவுக்கு ஜனநாயக விரோதமானதாக இருக்கிறது என்பதைக் குறித்து பேசப்பட்டன. இந்தச் சட்டத்தில் உள்ள தனிப்பட்ட சிக்கல்கள் பற்றிய நிறைய பேசியாகிவிட்டது, எழுதியாகிவிட்டது. ஆனால் இன்றைய விவாதம் எதிர்காலத்தைப் பற்றியது, பேசுவதற்கான கால அவகாசமும் குறைவு. ஆகவே நான் தனிப்பட்ட விவரங்களைப் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. சில உதாரணங்களை எடுத்துக்கொண்டு சில வாதங்களை முன்வைக்கலாம் என்றிருக்கிறேன். இங்கே ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு சாத்தியம் உண்டு. ஆனால் நான் இங்கே அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புவது என்னவென்றால் உங்களிடம் உரையாற்றவோ உங்களை ஒரு விவாதத்தைக் குறித்து சம்மதிக்க வைக்கவோ எனக்குப் பெரிய அளவில் விருப்பமில்லை. நான் சொல்லவிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும், நமது திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கானது – அவர்கள் இங்கே இருக்கலாம், அல்லது அவர்கள் பிற்பாடு இந்த உரையைக் கேட்கக்கூடும்.

திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்கள் (intersex persons, இண்டர்செக்ஸ் நபர்கள்) அனைவருக்கும் மரியாதை செலுத்துவதன் மூலம் உரையைத் தொடங்க விரும்புகிறேன். எல்லா இடங்களிலும் நீங்கள் இருந்து, தடைகளை மீறி நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணிகள் மட்டுமே நான் நானாக இருப்பதற்கான உரிமை எனக்கு இருக்கிறது என்பதை எனக்குச் சொல்கின்றன. நமது மூதாதையர்களான நிஜமான திருநர்கள், பன்முகப் பால்பண்புகொண்டவர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். பார்ப்பனீய ஆதிக்கபாலினத்தைச் சேர்ந்த வரலாற்றாளர்களால் அவர்கள் முழுக்க அழிக்கப்பட்டுவிட்டார்கள். வரலாற்றில் இடம்பிடிக்க நமக்க்கு இருக்கும் உரிமையை மறுக்க விரும்புவதன்மூலம் நமது நிகழ்காலத்தின் உரிமைகளையும் அவர்கள் மறுக்கப்பார்க்கிறார்கள். எப்போதும் எல்லா மக்கள் இயக்கங்களிலும் பங்கேற்பாளர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கிற,இயற்கைப் பேரிடர்களின்போது நிவாரணப்பணிகளில் முன்வரிசையில் நின்று வேலை செய்கிற திருநர்கள் மற்றும் பன்முகப்பால்பண்பு கொண்டவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்த விரும்புகிறேன். இப்போது நடந்த CAA-NRC- NPR போராட்டங்கள், ஏன் இந்தக் கொள்ளை நோயால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவும் அவர்கள் முன் நின்று வேலை செய்துகொண்டேயிருக்கிறார்கள். எந்த திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களின் உடல் மூலமாகவும் உழைப்பு மூலமாகவும் இந்தியாவின், மற்ற இடங்களின் பால்புதுமையினர் இயக்கம் (queer movement) நிறுவப்பட்டதோ, அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். இன்றுவரை அவர்களுக்கு உரிய எதுவும் அவர்களைச் சென்று சேரவில்லை. ஆதாரங்களும் பிரதிநிதித்துவமும் இல்லாததால் உயிரிழந்த திருநர் மற்றும் பன்முகப் பால்பண்புகொண்டவர்களுக்குத் தலைவணங்குகிறேன். தற்காலப் பிரச்சனைகளைப் பேசுவதைப் போலக் காட்டிக்கொள்வதற்காகஆதிக்க பாலினம்சார்ந்த பால்புதுமையினர் இயக்கம் எளிதாக 377லிருந்து திருநர் மசோதாவுக்கு மாறிவிட்டது. திருநர் மற்றும்பன்முகப் பால்பண்பு கொண்டவர்களின் வாழ்விலிருந்தும் உழைப்பிலிருந்தும், அவர்களின் பெயராலும் தன்னை மென்மேலும் வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு, குறிப்பாக, திருநம்பிகள், பன்முகப் பால்பண்பு கொண்டவர்கள், பால் ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்களுக்கு (non-binary people) என் மரியாதையை தனிப்பட்டு செலுத்த விரும்புகிறேன். இயக்கத்துக்குள்ளேயே இவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களைப் போல நடத்தப்படுகிறார்கள்.

சமீபத்தில் திருநம்பிகளுக்கும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கொள்ளை நோயின் மத்தியில் 5 கோடி நிதி ஒதுக்கீட்டோடு மகாராஷ்டிராவில் திருநர் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் திருநம்பிகளோ, பன்முகப் பால்பண்பு கொண்டவர்களோ, பால் ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்களோ யாருமே இல்லை. அது மட்டுமின்றி இந்த அநீதிக்கு அரசாங்கத்திலோ அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிலோ, ஏன் திருநர் தலைவர்களிலோ கூட யாரும் பொறுப்பு எடுத்துக்கொள்ள முன்வரவில்லை.

திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களின் உரிமைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் “எதிர்காலம் எப்படிப்பட்டது?” என்று ஒவ்வொரு முறையும் நாம் பேசும்போதெல்லாம் நான் ஒன்றை வலியுறுத்துவேன். சமூகத்திலிருந்தும், சமூகத்தின் வெளிகளிலிருந்தும் நாம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறோம், தவறாகப் பிரதிநிதுத்துவப்படுத்தப்பட்டிருக்கிறோம். இது ஒரு நீண்ட வரலாறு. உரிமைகளின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இந்த நீண்ட வரலாற்றை நாம் நினைத்துப் பார்த்துவிட்டே ஆரம்பிக்கவேண்டும். நமது வரலாற்றை முழுக்கப் புரிந்துகொள்ளாமல் நாம் எப்படி நமது எதிர்காலதத்தை வடிவமைக்க முடியும்? வரலாறு இல்லாத இயக்கம் இல்லை, வரலாற்றைப் புரிந்துகொள்ளாத இயக்கத்தால் தாக்குப்பிடிக்கவும் முடியாது. கண்ணியத்துக்காகவும் சம உரிமைக்காகவும் நாம் நடத்தும் போராட்டத்தில் இந்தத் திருநர் சட்டம் என்பது ஆரம்பமும் அல்ல, முடிவும் அல்ல – இதை நான் அழுத்திக் கூற விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், சில வருடங்கள் கழித்து, இந்த சட்டத்துக்குள் பயணிக்கும் முழு வழித்தடங்களை நாம் மீளாய்வு செய்வோம். அப்போது நாம் நான்கு முடிவுகளுக்கு வரலாம்: 

  1. தேசிய இயக்கம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை இது ஏற்படுத்தியது, அவ்வளவே. தில்லியை மையமாகக் கொண்ட ஒரு சிறு குழு – திருநர்களைத் தலைமையாகக் கொண்டது, அதிகாரத்தை அவர்களால் அணுக முடியுமே தவிர அவர்கள் கையில் அதிகாரம் இருக்கவில்லை 
  2. தனித்தனியாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்த சிறு குழுக்களிடமிருந்து வளங்களும், அதிகாரமும் தகவல்களும் இடம்பெயர்ந்தன! ஏனென்றால் எல்லாரும் தில்லியில் என்ன நடக்கிறது என்பதையும், எந்தக் குழுவால் தில்லிக்கு ஆள் அனுப்ப முடியும் என்பதையுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள்! 
  3. திருநர் சமூகத்துக்குள்ளேயே இருந்துகொண்டிருந்த, இயங்கிக்கொண்டிருந்த படிநிலைகளை அது வெளிச்சம்போட்டுக் காட்டியது 
  4. “சட்டம்” என்ற ஒரு பெயருக்குள் அது வந்துவிட்டதால் திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களின் சிக்கலான வாழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த, திருநர் உரிமைகளைப் பற்றி அறிந்த சட்ட மற்றும் அறிவுப்புல வல்லுநர்கள் மேலெழுந்தார்கள். நமக்குப் பணம் எதுவும் தராமலேயே பணிமனைகள் நடத்தினார்கள்.அரசியல் பிரதிநிதித்துவம்  தராமலேயே நம்மை சந்தைப்பொருளாக்க நினைக்கிற அரசியல் கட்சிகளுக்கு நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குழுவினரைப் போல மாறினோம். இதைத் தவிர எதுவும் மாறவில்லை. தனிப்பட்டு முடிவுகள் எடுக்கும் சுய நிர்ணய உரிமை, குடியுரிமை, வாழ்வதற்கான, முழு வாழ்நாளை வாழ்ந்து முடிப்பதற்கான உரிமை, நம் மீது எந்த சமூக இடர்ப்பாடுகளும் செலுத்தப்படாத ஒரு வாழ்வுக்கான உரிமை, பாகுபாடு, குற்றமயமாக்கல், சமூக/தனி வாழ்விலிருந்து நாம் விலக்கப்படுவது, செய்தி/தகவலறிதலிலிருந்து நாம் விலக்கப்படுவது, சரியான பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீட்டு உரிமை -எதுவுமே மாறவில்லை, எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. ஒரு அடி கூட எதுவும் முன்னேறிவிடவில்லை. ஆகவே, சில வழித்தடங்களில் இயக்கத்துக்கான, ஒன்றுகூடுவதற்கான உத்வேகத்தை இது தந்திருக்கிறது என்றாலும், சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கத்துக்கு ஒரு அளவுக்கு மேல் நான் மதிப்பு தர மாட்டேன், அதில் கவனமாகவே இருப்பேன்.