நண்பர்களுக்கு – Ally sheet


ஒரு நல்ல ஆதரவாளராகவும் (ally) நண்பராகவும் இருப்பது எப்படி

‘நான் ஆதரிக்கிறேன்’ என்று சொல்வது மட்டும் போதாது.

ஒரு நல்ல ஆதரவாளராக இருக்க நீங்கள் உங்களது பழக்கங்கள், உரையாடல்கள், குணநலன்கள், பேச்சு முறை போன்றவற்றை மாற்றிக்கொள்ளவேண்டும். “ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மற்றவர்களின் அளவு சம உரிமைகள் கொடுக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொல்வது மட்டும் போதாது. ஒரு நல்ல ஆதரவாளராக இருப்பதென்பது உள்ளேயும் சுற்றியுள்ள வெளி உலகிலும் நிறைய மாற்றப் பணிகளை செய்வதிலிருந்தே தொடங்குவது.

உங்களது சிறப்புரிமைகளைப் (privileges) புரிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு சிறப்புரிமை இருக்கிறது என்றால் நீங்கள் பணக்காரரெனவோ உங்கள் வாழ்க்கை எந்த துன்பங்களுமின்றி இருந்ததெனவோ அர்த்தமாகாது. வெறுமனே நீங்களாக இருக்கிறீர்கள் என்பதால் வாழ்க்கையில் சில விசயங்களை அனுபவித்திருக்கவோ அனுபவிக்கவோ அவற்றைப் பற்றி எப்போதும் யோசிக்கவோ போவதில்லை என்பது பற்றியது. ஒரு நல்ல ஆதரவாளாராகும் எவரும் முதலில் இந்த விசயங்களைப் பற்றி யோசித்து, அவை ஒடுக்கப்பட்ட ஒரு மனிதரின் அனுபவங்களிலிருந்து – ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது தொடங்கி வேலை திருமணம் வரை – எப்படி வேறுபடுகிறதென புரிந்துகொள்ளவேண்டும்.

வாழ்வனுபவங்களைக் கேட்டு ஆமோதியுங்கள்

ஒருவர் தம் வாழ்வனுவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, அவர் சொல்வதை கேட்டு அவர் சொல்வது கேட்கப்படுகிறது என்று அவருக்கு உணர்த்துங்கள். அவர் மீதுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துங்கள். ஒரு சூழலையோ வார்த்தையையோ அவர் எப்படிப் புரிந்துகொண்டார் என்பதைக் கேள்விகேட்காதீர்கள், எந்த வாழ்வனுபவத்தையும் குறைபடுத்தவோ முக்கியமற்றதாகவோ எண்ணாதீர்கள்.

உங்கள் மொழிப் பயன்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் மொழியையும்  வார்த்தைகளையும் பற்றி சிந்தியுங்கள், முடிந்த இடங்களிலெல்லாம் மேலும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியைப் (inclusive language) பயன்படுத்தவும்.

ஒருவர் ஒடுக்குமுறையின் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அது ஏன் காயப்படுத்துவதாக, ஒடுக்குமுறையைத் தொடர்வதாக இருக்கிறதென நீங்கள் விளக்குவது முக்கியம். ஒருவர் இத்தகைய வார்த்தைகளின் மூலம் ஒரு தனிநபரைக் காயப்படுத்துவது மட்டுமின்றி, ஒடுக்குமுறையின் வரலாற்றை இன்னொரு தலைமுறைக்கு நீட்டிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட குழுவுக்கும் ஒரு வரலாறும், வன்முறையின் வெளிப்படையான மற்றும் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விலக்கிவைப்பின் வரலாறும் இருக்கிறது. இத்தகைய மொழியைப் பயன்படுத்தும் ஒருவர் அந்த வரலாற்றையும் அனுபவங்களையும் மேலும் நீட்டிக்கிறார்.

மொழி உதாரணங்கள்

விலக்கிவைப்பவை (non-inclusive, exclusive): அந்தப் பசங்களப் பாரேன் 

ஒருங்கிணைப்பவை (inclusive): அவங்களப் பாரேன்

வி: யாருக்கு பணிவுயர்வு கிடைக்குதோ அவளுக்கு/அவனுக்கு சம்பளமும் அதிகமாகும்

ஒ: பணிவுயர்வு கிடைக்குறவங்களுக்கு சம்பளமும் அதிகமாகும்

வி: யாராவது பையன/பொண்ண விரும்புறியா?

ஒ: யாரையாவது விரும்புறியா?

ஒடுக்குமுறையான சொல்லாடல்களுக்கு பதிலளிக்கும் உதாரணங்கள்:

கருத்து: இந்த ட்ரஸ்ஸெல்லாம் என்னால போட்டுக்க முடியாது. இதெல்லாம் பொண்ணுங்க போடுறது போல இருக்கு.

பதில்: என்ன சொல்ல வர்ற இப்போ? பசங்க பொண்ணுங்க போடுற மாதிரி ஆடைகள போட்டுக்கறது தப்புன்னு சொல்ல வர்றியா? அப்போ பொண்ணுங்க பேண்ட் ஷர்ட் போடறது பத்தி என்ன நினைக்கிற? இல்ல நீ அந்த மாதிரி ஆடை எல்லாம் போட மாட்டேன், அவ்வளவு ஸ்டைலிஷ்ஷா எல்லாம் உன்னால போடமுடியாதுன்னு சொல்றியா?

தன்னடக்கத்தோடிருக்கப் பழகுங்கள்

தவறுகள் செய்தால் எதிர்கொள்ளத் தயாராயிருங்கள். தவறுகள் செய்வது இயல்பே, அப்படி நிகழ்ந்தால், மன்னிப்பு கோரவும் அதன்பின் அதைவிட நல்முறையில் நடந்துகொள்ளவும் முயற்சிசெய்யுங்கள். காரணங்கள், பழிபோடுதல், பந்தா இல்லாமல் மன்னிப்பு கேளுங்கள்.

சொல்லக்கூடாதவை சில

  • உன்னத் தெரியாம (டா/டி) அவ(ன்/ள்) மாத்தி சொல்லிட்டேன், ஆனா உன்ன எனக்கு ரொம்ப நாளாத் தெரியும்ன்றதால மாத்திக்கக் கஷ்டமா இருக்கு.
  • நா சொன்னது உன்னக் காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கா, நா ஆனா அந்த அர்த்தத்தில சொல்லல

சொல்லவேண்டியவை சில

  • நா தவறான பெயர (மறுபெயரை) சொன்னதுக்கு மன்னிச்சுக்கோ. இனிமே சரியா சொல்ல நிச்சயமா ஞாபகம் வெச்சு முயற்சிப்பேன்.
  • உன்னக் காயப்படுத்தினதுக்கு மன்னிச்சுக்கோ.

உங்களது ஆய்வை நீங்களே செய்யவேண்டும்

உங்களுக்குத் தெரிந்த/நண்பர்களான ஒடுக்கப்பட்டோரே எப்போதும் உங்களுக்குப் பாடமெடுக்கவேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். தனது அடையாளத்தையும் அனுபவங்களையும் பற்றி எப்போதும் பல கேள்விகளுக்கு பதில்சொல்லிக்கொண்டிருப்பது மனச்சோர்வூட்டுவது, அதுவும் நமது காலத்தில் இணையத்தில், புத்தகங்களில் இவ்வளவு படிக்கக் கிடைக்கின்றது. எனவே நல்ல முறை என்னவென்றால்: பதில்களைக் கேட்காமல் எங்கே பதில்கள் கிடைக்குமெனக் கேட்பது; அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள், கட்டுரைகள், வலைத்தளங்களைக் கேட்டுப் படியுங்கள்.

மற்ற ஆதரவாளர்களோடு அறிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

தாங்கள் தெரிந்துகொண்டவற்றை மற்ற ஆதரவாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஒருவர் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டோ அல்லது வேண்டுமென்றே மரியாதைக்குறைவாகவோ தவறாகவோ நடந்துகொள்ளும்போது விளக்கமளியுங்கள். ஒடுக்குமுறையாக எவரேனும் எதையேனும் சொல்வதைக் கேட்டால் திருத்துங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் யார் சொல்வதையாவது திருத்தும்போது ஒடுக்கப்பட்ட ஒரு நபர் அதை செய்ய வேண்டிய பாரத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்.

உங்களைப் பற்றி மேலும் சிந்தியுங்கள்

உங்களது ஆழ்மனதில் பதிந்திருக்கும் ஊகங்கள், செயல்கள், கருத்துகள், ஸ்டீரியோடைப்புகள், வகைமாதிரிகள் குறித்து மேலும் நேரமெடுத்து சிந்தியுங்கள். நீங்கள் கவனிக்காமல் ஒரு நபரை ஒதுக்கிவைக்கும் அல்லது பார்க்கப்படாததாக உணரச்செய்யும் எதையேனும் சொல்லக்கூடும்.

ஒரு நல்ல ஆதரவளாரக இருப்பதற்கு நன்றியும் வாழ்த்துகளும் எதிர்பார்க்காதீர்கள்

சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கும், உணர்வோடும் தெளிவோடும் இருப்பதற்கும், பிறரது தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பாராட்டுகளையும் நன்றிகளையும் எதிர்பார்க்காதீர்கள். யாரேனும் உங்களை பாராட்டக்கூடும், ஆனால் அதை நீங்கள் எதிர்பார்க்கலாகாது. அடுத்தவர்களை இவ்வுலகம் மரியாதையாக நடத்தாத பட்சத்திலும் மரியாதையோடு நடத்துவதற்காக அவர்கள் உங்களுக்கு கடன்பட்டவர்களாகார்.

மற்ற ஆதரவாளர்களோடு இணைந்து செயல்படுங்கள்

உங்கள் வாழ்விலிருக்கும் ஒரு நபரை புரிந்துகொள்வதிலோ, முழுக்க ஏற்றுக்கொள்வதிலோ கடினமான சூழல் வருகையில் அந்நபரையே நாடுவதை விட மற்ற ஆதரவாளர்களை நாடுங்கள். அவர்களும் அத்தகைய அல்லது அதைவிட கடினமானதொரு சூழலை வேறொரு உறவில் சந்தித்திருக்கவோ சந்தித்துக்கொண்டிருக்கவோ செய்யலாம், எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாம். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிவோர் அல்லது சமூக ஆதரவுக் குழுக்கள் போன்றோரை சந்தித்து உங்களுக்கு உதவக்கூடிய ஆதரவாளர் தொடர்புகளை பெருக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு ஆதரவாளரை விடவும், நண்பராக இருங்கள்!

இவற்றை உங்கள் வாழ்வில் செயல்படுத்துவதோடு கூடவே, நிகழ்வுகள், போராட்டங்கள், பேரணிகளில் கலந்துகொள்ளவும் முயலுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு அவற்றிலும் தேவை!

ஆங்கிலத்தில்: ட்ராண்ஸ்*பாண்டர் | தமிழில்: எல் ஜே வயலட் | © QCC

தமிழில் பால்புது பதங்கள்

கன்வெர்ஷன் தெரப்பி என்றால் என்ன?