கன்வெர்ஷன் தெரப்பி என்றால் என்ன? – Conversion Therapy


கன்வெர்ஷன் தெரப்பி

பால்புதுமையினரின் (LGBTQIA+) பாலீர்ப்பையோ அல்லது பாலினத்தையோ திருத்த முடியும் என்று செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் பொதுவாக  ‘கன்வெர்ஷன் தெரப்பி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இத்தகைய நடைமுறைகளின் நோக்கமாக இருப்பது அல்லது நோக்கம் என்று சொல்லிக்கொள்வது – ஒருபாலீர்ப்புடைய ஆண், ஒருபாலீர்ப்புடைய பெண் அல்லது இருபாலீர்ப்புடையவர்களை எதிர்பால் ஈர்ப்பு உடையவர்களாக மாற்றுவது. திருநர்கள் அல்லது பன்முகப் பாலின அடையாளம் கொண்டவர்களின் பாலின அடையாளத்தைத் திருத்துவது.

கன்வெர்ஷன் தெரப்பியைப் பொறுத்தவரை, இவ்வார்த்தை போலி சிகிச்சைகளைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த போலிசிகிச்சையின் நடைமுறைகளில் சில ரகசியமாக இருப்பதால் அவை குறைவாகவே ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. இந்த போலிசிகிச்சைகளைச் செய்பவர்கள் பால்புதுமையினரை உணர்வுரீதியாகவோ உடல் ரீதியாகவோ வதைப்பதோடு அவர்களது பாலீர்ப்பு/ பாலினம் குறித்த எதிர்மறையானக் கருத்துக்களைப் புகுத்தி அவர்களை மூளைச்சலவையும் செய்கின்றனர். 

பால்புது வெறுப்பு காரணமாகவும், பிற்போக்கான மனநிலை காரணமாகவும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் மூலமாக பால்புதுமையினர் இந்த போலி சிகிச்சையை எடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். 

ஆதிக்கப்பாலின மற்றும் எதிர்பாலீர்ப்பு எதிர்பார்ப்புக்குள் அடங்காதவர்கள், சமூகத்தில் என்ன மாதிரியான வன்முறைக்கு ஆளாகவேண்டும் என்று பால்புதுமையினருக்கு நன்றாகவேத் தெரியும். அந்த நிலையில் இருப்பவர்கள் வேறுவழியில்லாமல் அணுகும்போது, ஆதிக்கப்பாலின மற்றும் எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களோடு ஒத்துப்போகக் கூடிய வாழ்க்கையை வாழ தாங்களே முடிவெடுத்து வருவதாக இந்த போலி சிகிச்சையை வழங்குபவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

கலாச்சாரம் மற்றும் மதத்தின் அடிப்படையில் போலிச் சாமியார்களும் மதகுருமார்களும் பால்புதுமையினரை சரிசெய்ய முடியும் என்று வதந்திகளைப் பரப்புகின்றனர். பால்புதுமையினரின் பாலினத்தையும் பாலீர்ப்பையும் மனநல பாதிப்பு என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் பெற்றோர் மற்றும் பால்புதுமையினரின் அச்சத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். அலோபதியோடு சேர்த்து ஹோமியோபதி, ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகள், யோகா மூலமாக பால்புதுமையினரை சரி செய்ய முடியும் என ஒரு சாரார் சொல்லி வருகின்றனர். சட்டத்துக்கும் இவர்கள் பயப்படுவதில்லை. 

கன்வெர்ஷன் தெரப்பியின் நம்பகத்தன்மை

பால்புதுமையினருக்கு ஏற்பட்டிருப்பது ஒரு மனநோய் என்ற தவறான புரிதல் தான் இம்மாதிரியான போலி சிகிச்சைகளுக்கெல்லாம் அடிப்படை. ஆனால் பால்புதுமையினரின் அடையாளங்கள்  இயல்பானதே என்று பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய மனநல அமைப்புகளும், சங்கங்களும் ஒத்துக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. அமெரிக்கன் சைக்கியாட்ரிஸ்ட் அசோசியேஷன் 1973 ஆம் ஆண்டு மற்றும் உலக சுகாதார மையம் 1993 ஆம் ஆண்டு ஒருபாலீர்ப்பு என்பது ஒரு மனநோய் அல்ல என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்திய சைக்கியாட்ரிஸ்ட் அசோசியேஷனும் ஜூன்  2018 மற்றும் ஜூன் 2020 யில் கன்வெர்ஷன் தெரப்பிக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கன்வெர்ஷன் தெரப்பிக்கு எதிராக குரல் கொடுத்த மேலும் சில அமைப்புகள்:

  • இந்திய சைக்கியாட்ரிஸ்ட் சங்கம் (கேரளா பிரிவு) (Branch Indian Psychiatrist Association).
  • இந்திய மருத்துவ உளவியலாளர்கள் சங்கம் (The Indian Association of Clinical Psychologists – AICP)
  • மனநல சமூகப் பணி வல்லுநர்கள் சங்கம் (The Association of Psychiatric Social Work Professionals – APSWP)
  • மனநல சட்டம் மற்றும் கொள்கை மையம் (Centre of Mental Health Law and Policy)

பால்புதுமையினருக்கு தவறான மருத்துவரீதியில் வழங்கப்படும் இந்த தெரப்பி கடுமையான உடல்வலி மற்றும் மனரீதியான துன்பத்தை ஏற்படுத்தும். இது நீண்டகாலம் நீடிப்பதற்கான வாய்ய்பும் அதிகம். இருந்த போதும் உலகின் பல பகுதிகளில் இன்னமும் கன்வெர்ஷன் தெரப்பி நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனை நடைமுறைப்படுத்துவதில் மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவர்கள் என பல குற்றவாளிகள் இருக்கின்றனர். குடும்பங்களும், சமூக அமைப்பும் இதனை ஊக்குவிக்கின்றன.

கன்வெர்ஷன் தெரப்பியின் விளைவுகள்

பால்புதுமையினருக்கு எதிராக சமூக காழ்ப்புணர்ச்சி கொண்ட தெரப்பிஸ்டுகளால் வழங்கப்படும் இந்த கன்வெர்ஷன் தெரப்பி பால்புதுமையினர் ஏற்கனவே அனுபவித்த அவமானத்தையும், களங்கத்தையும், சுயவெறுப்பையும் மேலும் அதிகரிக்கும். மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட வேண்டாத விளைவுகளையும் ஏற்படும்.

பெற்றோர் மூலமாக தெரப்பிக்கு அழைத்துச் செல்லப்படுவதால் குடும்பத்தின் மூலம் நிராகரிக்கப்படுவதாக உணர்வதோடு ஏமாற்றத்தையும் ஆபத்தையும் பால்புதுமையினர் எதிர்கொள்கிறார்கள். சொந்த குடும்பத்திலேயே பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்.

கன்வெர்ஷன் தெரப்பியின் சட்ட நிலைப்பாடு

இந்தியாவில், கன்வெர்ஷன் தெரப்பிக்கு என்று எந்த சட்டமும் இல்லாத நிலையில் இந்த தெரப்பியில் பயன்படுத்தப்படும் பல சிகிச்சைகள் மற்றும் வழிமுறைகள்  இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. 

இந்த தெரப்பியில் மின்சார அதிர்ச்சி (electroshock therapy), பாலினம் மற்றும் பாலீர்ப்பை சரி செய்ய நடக்கும் வன்புணர்வு (corrective rape), கவுன்சிலிங் (counselling),  தேவையற்ற  தீங்கு விளைவிக்கும் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவ சிகிச்சைகள், கட்டாயக் கல்யாணம் மற்றும் கட்டாய அறுவை சிகிச்சை உட்பட அனைத்தும் மனநல சிகிச்சைகள் (psychiatric therapies) என்னும் பெயரில் நடைபெறுகிறது.

இன்னமும், தாங்கள் அனுபவிக்கும் வன்முறைகளுக்கு எந்தத் தீர்வும் வழங்காத சட்டத்தையும் நீதி அமைப்புகளையுமே பால்புதுமையினர் நம்பியிருக்க வேண்டி இருக்கிறது.
கன்வெர்ஷன் தெரப்பிகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து எந்த வித சட்ட வரைமுறைகளும் இல்லாததால் தனிநபர்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது மிக கடினம்.

இதுவரை பால்புதுமையினர் சார்ந்து வழங்கப்பட்டிருக்கும் சில தீர்ப்புகளும் பால்புதுமையினரின் பாலீர்ப்பு அல்லது பாலின அடையாளத்தை குணப்படுத்த கூடாது என்று பரிந்துரைக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த NALSA தீர்ப்பில், “எந்த  ஒரு நபருக்கும் அவர்களது பாலினத்தையோ பாலீர்ப்பையோ சரிசெய்ய எந்த சிகிச்சையும் அளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளது.

மனநல சுகாதார சட்டம் (The Mental Healthcare Act), 2017, செக்ஷன் 106 , “எந்தவொரு மனநல நிபுணரும் மருத்துவ பயிற்சியாளரும், இந்த சட்டத்தால் மற்றும் அவர்களுடைய தொழில் வரைமுறையால் அங்கீகரிக்கப்படாத சிகிச்சைகளையும் மருந்துகளையும் பரிந்துரைக்கக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 2018-ல் செக்ஷன் 377-இன் மீதான உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு: “கவுன்சிலிங்(counselling) நடைமுறைகள், ஒருபாலீர்ப்பை சரிசெய்ய ஊக்குவிப்பதை விட்டு, அவர்கள் அடையாளத்தோடு மகிழ்ச்சியாக இருக்கவும் , இயல்பு வாழ்க்கையை பெறவும் ஆதரவாக இருப்பதில் கவனம் செலுத்தவேண்டும். ஒரு நோயோ அல்லது சுகமின்மையோ கூட இல்லாத ஒன்றை குணப்படுத்த முயலாமல் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும்.”

மனநல சுகாதார சட்டம் (The Mental Healthcare Act), 2017 இல் சொல்லப்பட்டவாறே, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் அரசாங்க உத்தரவு, 2019, பால்புதுமையினரை உள்ளடக்கிய ஆதரவான மனநல சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 2019-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், பன்முகப்பால்பண்பு கொண்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு (intersex infants and children) பால்மாற்று அறுவை சிகிச்சை செய்வது தடைசெய்யப்படவேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்கிற அறிவுரை வழங்கியது.

இதுவரையிலும் ஜெர்மனி, பிரேசில், தைவான், மால்டா மற்றும் ஈக்வெடார் நாடுகளிலும் USA-ல் உள்ள இருபது மாகாணங்களிலும் கன்வெர்ஷன் தெரப்பி தடை செய்யப்பட்டிருக்கிறது.

உங்களது பணியிடத்திலோ, குடும்பங்களிலோ, நண்பர்களுக்குள்ளேயோ பால்புதுமையினர் இருந்தால் அவர்களுக்கு நல்ல ஆதரவாளராக எப்படி இருப்பது எனத் தெரிந்து கொள்வதற்கான கையேடு.

கன்வெர்ஷன் தெரப்பி குறித்த ஐ.நா அறிக்கை