திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

இந்த வெபினாருக்கான சில அடிப்படைக் குறிப்புகள் என்னோடு பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதில் ஒரு வரியுடன் தொடங்கலாம்: 

“இந்த சட்டம் உரிமைகளின் அடிப்படையில் அல்லாமல் நல்வாழ்வின் (welfare) அடிப்படையில் அணுகுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது”. 

இந்த மொழி வேறு ஒரு பொருளைத் தருவதாக இருக்கிறது, நாம் இதை ஒத்துக்கொள்ளக்கூடாது. சாதியத்தின் கட்டமைப்பிலும் இயங்கியலிலும்தான் இந்த சட்டத்தின் வேர் இருக்கிறது. சாதியத்தை நிறுவுவதோடு சம்பந்தப்பட்ட எல்லாபிரதிகளும் – மனுஸ்ம்ருதி உட்பட, திருநர் வெறுப்பு சட்டங்களுக்கான ஆரம்பப் புள்ளிகளாகவும் இருந்திருக்கின்றன. இதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த சட்டத்துக்கு ஒரே ஒரு நோக்கம்தான், ஒரே ஒரு அணுகுமுறைதான் – திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களைக் கீழ்மைப்படுத்துவது, கட்டுப்படுத்துவது, தாக்குவது, புறக்கணிப்பது, கொன்றுவிடுவது. சமூகம் ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. இந்த சட்டம் அதற்கு நிறுவனரீதியான அங்கீகாரத்தைத் தரப்போகிறது. திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களை அது இன்னும் பிளவுபடுத்தும். அரசு ஒரு பக்கம் “சமூகத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறோம்”, “பரிந்துரைகளைப் பரிசீலிக்கிறோம்” போன்ற பொய்யான கற்பிதங்களையும் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும். சமீபத்தில், இது உண்மையாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடனே திருநர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பி.பி.ஈக்கள் (PPE) மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்ய முடியாத ஒரு அரசு, பாலின உறுதிப்படுத்தல் அறுவைசிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்யும் என்பதுதான் அது. இந்த செய்தியை உறுதி செய்ய எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்தன. 2018ல் மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது இது ஆரம்பித்தது. வரையறைகள் மாற்றப்பட்டுவிட்டன, மருத்துவ பரிசோதனை கிடையாது என்பதுபோன்ற சிறு சிறு செய்திகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்தன. எதுவுமே உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல.வெளிப்படையான தகவல் பரிமாற்றங்கள் இல்லாமை, மாற்றுக்கருத்துக்கள் என திருநர்சமூகத்துக்குள்ளாகவே இருக்கும் சிக்கல்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தவறான தகவல்கள் பரவின.  2019ன் மத்தியில் வரையறையில் எந்த மாற்றமும் இல்லாமல், மொழிநடையில் சிறு மாற்றங்களோடு அந்த மசோதா அப்படியே நிறைவேற்றப்பட்டது. நாம் நியாயமாக இருக்கவேண்டுமென்றால் நாம் நமது மொழியை மாற்றிக்கொள்ளக்கூடாது. நல்வாழ்வு, உரிமை எதைப்பற்றியும் புரிதலற்ற, ஜனநாயக விரோதமான, நியாயமற்ற ஒரு சட்டம் என்றே இந்த சட்டத்தை நாம் புரிந்துகொண்டு பேசவேண்டும். குற்ற விலக்கு, மருத்துவ வசதி, வீட்டுவசதிம் சமூகப் பாதுகாப்பு ஆகியவையே நல்வாழ்வின் அடிப்படைகள். இந்த சட்டம் இவை எது குறித்தும் பேசவில்லை. உரிமைகள் இல்லை, நல்வாழ்வும் இல்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த நாள் வரப்போகிறது- ஆகஸ்ட் 5. நமது திருநர் தலைவர்களில் ஒருவரான கிரேஸ் பானு 2019ம் ஆண்டுஆகஸ்ட் ஐந்தாம் தேதியை பாலின நீதி இறந்த தினம் என்று அறிவித்தார். அது காரணமின்றி செய்யபப்ட்ட அறிவிப்பு அல்ல. அன்றிலிருந்து இன்றுவரை நடந்த எல்லாவற்றையும் பார்த்தபின்பு, சில தாராளவாத நோக்கங்களுக்காக நமது மொழியை நாம் மாற்றிக்கொள்ளவோ மென்மைப்படுத்தவோ வேண்டியதில்லை. சட்டத்தைப் படிக்க, சோதனை செய்ய, சட்டத்தின் விரிவுகளையும் எல்லைகளையும் விவாதிக்க சட்ட மேதைகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த நேரமாக இருக்கலாம். ஆனால அவர்கள் அதைத் தங்களது சொந்த நேரத்தில் செய்து கொள்ளட்டும், திருநர்களின் வாழ்க்கையை அதற்கு விலையாகக் கொடுக்க முடியாது.

சட்டத்திலேயே உபயோகமானதாகவோ உண்மையாகவோ எதுவும் இல்லை எனும்போது, விதிமுறைகளிலும் உபயோகமானதாகவோ உண்மையானதாகவோ எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் நமக்கு சில வாய்ப்புகள் உண்டு, நாம் ஜனநாயகத்தின் கொள்கைகளை நம்புகிறோம், ஆகவே விதிமுறைகளுக்கான கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க முயற்சித்தோம். ஆனால் ஏற்கனவே அமலில் இருந்த சட்டங்கள் நமக்கான எல்லைகளை வகுத்தன. ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் இந்த செயல்பாடுகளை நடத்தியதும் நம்மைக் கட்டுப்படுத்தியது. ஆகவே மொழியை சற்றே மாற்றுவது என்ற முயற்சியில் இறங்கினோம் – ஆதிக்க பாலினத்தின் அடிப்படை கொள்கைகள் இந்த சட்டத்தின் தத்துவத்தோடு ஒத்துப்போவது என்பதும் இதற்கு சாட்சி. 

இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம்:

4(1) விதி மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டிடம் விண்ணப்பிப்பது குறித்துப் பேசுகிறது. இந்த ஒட்டுமொத்த செயல்பாடும் சட்ட விரோதமானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது, நிர்வாகப் பிரிவில் வருகிற ஒரு செயல்பாட்டை சட்டச் செயல்பாடாக மாற்றுகிறது. ஆனால் ஒரு வாதத்துக்காக அதை நாம் ஏற்கிறோம் என்று வைத்துக்கொண்டால் கூட, விண்ணப்பம் மருத்துவப் பரிசோதனையோடு சேர்ந்தது அல்ல. முதலில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் எதுவுமே “இதற்கு மனநலம் சார்ந்த சான்றிதழ் வேண்டும்” என்பதை மாற்றவே இல்லை, ஏனென்றால் ஆதிக்க பாலின மனநிலைக்கு, சித்தாந்தத்துக்கு, இது ஒரு அத்துமீறல் என்பதே புரியவில்லை.

இரண்டாவது உதாரணம். விதிமுறை 7. பால் ஈர்மறை உள்ள திருநர், பால் ஈர்மறைக்கு அப்பாற்பட்ட திருநர் இருவருக்குமான போலியான பிளவை இந்த விதி இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு சித்தாந்த ரீதியான பிளவு. இதை உருவாக்கி, சமூகத்திலும் அதை அமல்படுத்தியிருக்கிறார்கள். பிறகு ஒரு சட்டத்தை உருவாக்குகிறார்கள். ஆண்/பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு அறுவைசிகிச்சை தேவை என்று சொல்கிற சட்டம் இது. இந்த விதிமுறையில் இரு வகையான விண்ணப்பங்களை உருவாக்குகிறார்கள். முதலாவது திருநர் என்கிற அடையாளத்துக்கான விண்ணப்பம், இரண்டாவது திருநரிலிருந்து ஆண்/பெண் என்று தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கான விண்ணப்பம். திருநர் கருத்தியல் எதையெல்லாம் நம்புகிறதோ அவை எல்லாவற்றுக்கும் எதிரானது இந்த விதிமுறை; பாலினம் என்பது சுய நிர்ணய உரிமைக்கான ஒரு பயணம் என்று திருநர் கருத்தியல் நம்புகிறது. இந்த விதிமுறை அறுவைசிகிச்சையைத் திணிக்கிறது, பன்முகப் பால்பண்பு கொண்டவர்களை எப்படி அணுக்கப்போகிறார்கள் என்பதை இந்த விதிமுறை தெளிவுபடுத்தவில்லை. திருநர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு ஆண்/பெண் என்ற ஒரு அடையாளச்சீட்டு/சான்றிதழ் வாங்கிக்கொண்டீர்கள் என்றால் என்ன நடக்கும்? ஒருவேளை நலத்திட்ட உதவிகள் எதுவும் இருந்தால் அது உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா? இவர்கள் இந்தப் போலியான ஒரு பிரிவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் யாராவது ஏன் இந்தப் பகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றோ, திருநர் வாழ்வு, திருநர் அடையாளம், திருநர் சேவைகளை அவர்கள் அணுகுவது ஆகியவற்றில் என்ன மாற்றங்கள் இதனால் நடக்கும் என்றோ நம்மிடம் விளக்கினார்களா? இல்லை. ஏன்? ஏனென்றால் ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த ஒரு சாதிய சமூகமாக இருப்பதால் இதுபோன்ற போலியான, பகுத்தறிவற்ற, திணிக்கப்பட்ட பகுப்புகள் இயல்பானவை என்றே நினைக்கிறோம். இந்தப் பிரிவினைகளை எதிர்ப்பவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறோம். அவர்களை பகுத்தறிவற்ற, முடிவற்ற இடர்ப்பாடுகளைத் தரக்கூடிய சட்ட- அதிகாரத்துவ சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறோம்.

பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி அடிப்படையானது. பிரதிநிதித்துவம் பற்றிய இன்னும் இரு உதாரணங்களைத் தருகிறேன். திருநர் சமூகத்தின் கோரிக்கைகளில் ஒன்று, ஒரு கமிஷன் அமைப்பது – SC/ST கமிஷனைப் போல இதற்கான அதிகாரங்கள் பலதரப்பட்டவையாக இருக்கவேண்டும் எனவும், பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால் நமக்குத் தரப்பட்டதோ ஒரு தேசிய கவுன்சில் – அது ஒரு ஆலோசனை அமைப்பு மட்டுமே. மாவட்ட அளவிலான நிர்வாகத் துறைகளில் தொடங்கி இன்னும் பல நிலைகளில் இது மேல்நோக்கிச் செல்லவேண்டும். ஆனால் மாநில கவுன்சில்களும், மாநில நலத்துறை வாரியங்கள் அமைக்கப்படுவதற்கான வாய்ப்பும் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அணுகுதல், அதிகாரம், பிரதிநிதித்துவம் என எல்லாவற்றிலும் பன்முகப்படுத்துதல் வேண்டும். ஆனால் கிடைத்ததென்னவோ மையப்படுத்தப்பட்ட, உள்ளீடுகளற்ற, அதிகாரம் எதுவுமற்ற நிறுவனங்களும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளை ஓடி ஓடி சந்திப்பதுதான். இதிலும் கூட, இப்படிப்பட்ட கவுன்சில்கள் எத்தனை அமைக்கப்படும் என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. மஹாராஷ்டிராவில் நலத்துறை வாரியம் எப்படி அமைக்கப்பட்டது என்பதற்கும் எந்தத் தெளிவான விளக்கங்களும் இல்லை. இந்தக் கவுன்சில்களை எப்படி அமைக்கப்போகிறார்கள் என்பது பற்றிய உறுதிப்படுத்தும் கொள்கையும் இல்லை. திருநர்சிறுவர்கள், பன்முகப் பால்பண்பு கொண்ட சிறுவர்கள், பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாத சிறுவர்கள் (Gender nonconforming children) ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் கேள்விகள் இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, மாநில நிதி ஒதுக்கப்பட்ட வளர்ந்த திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களின் பிரதிநிதித்துவம் தேவை. ஆனால் இந்த சட்டத்திலோ விதிமுறைகளிலோ அதற்கான ஒரு சுதந்திரமான வழிமுறை இல்லை. அதற்கு பதிலாக, குழந்தைகள் நலவாரியத்தின் வரம்புகளுக்குள் நாம் திணிக்கப்படுகிறோம் – திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டகுழந்தைகளின் உரிமை எப்படிப் பாதுகாக்கப்படும் என்பதற்கு எந்தத் தெளிவும் இல்லை.

Support paalputhumai.com - பால்புது பக்கங்களை ஆதரியுங்கள்