இந்த சிறிய உதாரணங்களை முன்வைத்ததன்மூலம், இரண்டு கேள்விகளை நான் கேட்க விரும்புகிறேன் :
- பகுப்புகளும் அவற்றுக்கான அடிப்படைகளும்
- பிரதிநிதித்துவம்.
பல்வேறு தளங்களில் இந்த மசோதா மற்றும் விதிமுறைகளில் இருக்கும் சிக்கல்களைத் திரும்பத் திரும்பப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்த இரு அடிப்படை விஷயங்களையே நான் பேசவிரும்புகிறேன். எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் எந்த கேள்வியையும் இந்த இரு விஷயங்களின்மூலமாகவே அணுக விரும்புகிறேன். என்னை நீங்கள் இலட்சியவாதி என்று கூட சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலம் என்பது, இந்த சட்டம் இல்லாத ஒரு எதிர்காலம்தான். எங்கள் மீது எந்தப் போலியான பகுப்புகளும் திணிக்கப்படாத ஒரு எதிர்காலம், சுய நிர்ணயம், முழு பிரதிநித்துவத்துவம் தொடர்பான எங்களது உரிமைகள் முழுவதுமாக மதிப்பிடும் ஒரு எதிர்காலம் அது. NALSAவுக்கு வெறுமனே திரும்புவது மட்டுமே நோக்கமல்ல. NALSA ஒரு உபயோகமான படியாகத்தான் இருந்தது, ஆனால் அது எல்லாருக்கும் போதுமானதாக இருக்கவில்லை. சில விதிமுறைகளையும் பாதுகாப்புக்கான சில சாத்தியக்கூறுகளையும் மட்டுமே அது வழங்கியது, முழுமையான தீர்வை அல்ல.
மையத்தின் அதிகாரத்தைக் குறைப்பது அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. இந்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்வது அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. மையத்தின் பங்களிப்பை இரண்டு மூன்று செயல்பாடுகளாக சுருக்குவதை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும் – உதாரணமாக, பாலின அடையாளம் சுய நிர்ணயத்தால் மட்டுமே வருவது என்பதாக மீள் வரையறை செய்வது – இதைப் பற்றி நான் முன்பே பேசியிருக்கிறேன். குறிப்பாக வரையறை பற்றிய கூக்குரல்கள் எழுந்தபோது பேசியிருக்கிறேன். தில்லியோ அல்லது ஏதாவது ஒரு மாநிலச்சட்டமோ திருநர் மற்றும்பன்முகப் பால்பண்பு கொண்டவர்கள் என்றால் என்ன என்று வரையறுத்தால் சுய நிர்ணயத்துக்கு அது எதிரானது என்று சொல்லியிருக்கிறேன். “மூன்றாம் பாலினம்” என்ற மோசமான சொல்லாடலிலிருந்து நாம் விடுபடவேண்டும் என்றால், ஆதிக்க பாலின கருத்தியலை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றால் பிராந்திய சிக்கல்களையும் பூர்வீக (indigenous) திருநர் அடையாளங்களையும் அழிக்கும் வரையறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக, பாலின அடையாளம் எப்படி வரையறுக்கப்படுகிறது என்ற அடிப்படையையே நாம் கேள்வி கேட்டாக வேண்டும். பாலின அடையாளம் என்பது சுய நிர்ணயத்துக்கு உட்பட்டது என்று சட்டம் வரையறுக்கவேண்டும், இதுவே மற்ற சட்டங்களுக்குள்ளும் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்படவேண்டும். அடுத்ததாக மையத்தின் செயல்பாடு என்பது இட ஒதுக்கீட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக இருக்கவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு தேவை. மூன்றாவதாக இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்களைத்தலைமையாகக் கொண்டு புதிய சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இங்கே நான் அதை சற்றே வேறு விதத்தில் சொல்லியிருந்தாலும், திருநர் வரலாற்றைப் பார்க்கும்போது, உலகின் மிகச்சிறப்பான சட்டங்கள், திருநர்களைத் தலைமைப்பொறுப்பில் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்கள் – அர்ஜெண்டினாவிலும் மால்டாவிலும் இருக்கின்றன. இவை திருநர் பாதுகாப்பு சட்டம் என்று அழைக்கப்படுவதில்லை. பாலின அடையாளம்/பாலின வெளிப்பாடு, பால் பண்பு சட்டங்களான இவை உலகெங்கிலும் சட்டத்தின் மொழியையே மாற்ற விழைபவை.
இந்த சட்டத்தை நாம் முழுமையாக நிராகரிக்க வேண்டுமென்றால் திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர்கள், எந்த ஆதிக்க பாலினத்தவரின் குறுக்கீடும் இல்லாமல் சில அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி யோசிக்கவேண்டும். நமது சமூகத்தில் உள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடிகிற கொள்கைகள், சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் விரிவுபடுத்தத்தக்க கொள்கைகள், எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுகிற கொள்கைகள் இவற்றைப் பற்றி யோசிக்க வேண்டும். நம் சட்டங்கள் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கவேண்டும். இந்தக் கொள்கைகளை முன்வைத்தே நாம் பயணிக்கவேண்டும். நம் சட்டங்களையும் கொள்கைகளையும் நாமே வகுத்துக்கொள்ளமுடியும் என்ற உறுதியான முடிவொடு நாம் இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும். மாநில அளவிலான ஆதரவு (advocacy) மற்றும் தலையீடுகளால் நமக்குக் கிடைத்த முன்னேற்றங்களை நினைத்துப் பார்ப்போம், அதிலிருந்து நமக்கான உத்வேகத்தை எடுத்துக்கொள்வோம்.
அதே சமயம் இந்த சூழ்நிலையில் நம் திருநர் சமூகம் எத்தனை சோர்ந்து போயிருக்கும் என்பதையும் உணர்கிறேன், அங்கீகரிக்கிறேன். 2012-13ல் அதிகார மைய (state) தலையீடுகள் ஆரம்பித்ததிலிருந்தே எல்லாம் சிதறத் தொடங்கிவிட்டது.கடந்த 7,8 வருடங்கள் நமது திருநர் தலைவர்கள், பிரதிநிதிகள், உறுப்பினர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும், அங்கீகரிக்கவேண்டும். சம்மதமில்லாத, ஒழுங்கற்ற, மரியாதைக்குறைவான, ஏன் பழிவாங்கும் நோக்கில் நடந்த நிகழ்வு இது. நமது கோணத்தை, திசையை நாம் மீண்டும் ஒரு முறை சரியாகப் பொருத்திக்கொள்ளவேண்டும். அதிகார மையம் எந்த மாதிரியான ஒரு அழுத்தத்தை நம் மீது விதித்தாலும் அதையும் மீறி நாம் இதை செயல்படுத்த வேண்டும். ஆதிக்க பாலின கருத்தியல், “இந்த சட்டமே இறுதி முடிவு” என்று நம்மை பயமுறுத்துகிறது. நமது கொள்கைகளை நோக்கி நாம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் இந்த பயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். ஒரு வகையில் இந்த ஆதிக்க பாலின தலைமையிலிருந்து நம்முடைய விடுதலையை நாம் அறிவித்துக்கொள்ளவேண்டும். ஆதிக்க பாலினர்களால் தலைமை தாங்கப்படும் வெளிகளில் நாம் பிரதிநிதிகளாக மட்டுமே சுருங்கிவிடுவதிலிருந்து நாம் விடுபடவேண்டும். இல்லாவிட்டால் “தனிச்சையான பெண்கள் இயக்கம்” என்ற பெயரோடு, அதிகார மையங்களோடு எந்தவித பலனோ அர்த்தமோ இல்லாத, மீளாச்சுழற்சியை உடைய ஒரு உரையாடலைக் கொண்ட ஒரு இயக்கமாகத் திருநர் இயக்கம் மாறிவிடும். அதை நாமே நம் கண்ணால் பார்க்க நேரிடும். நம் பக்கம் ஜனநாயகக் கொள்கைகள் இருக்கின்றன, நீதிக் கொள்கைகள் இருக்கின்றன. இந்த சட்டத்தை எதிர்க்கும், இந்த சட்டத்தோடு ஒத்துழைக்க மறுக்கும் திருநர் மற்றும் பன்முகப் பால்பண்பு கொண்டவர் எவராயினும் அவரை ஆதரிக்கவேண்டும், ஊக்குவிக்க வேண்டும். அதற்கான வெளியையும் மொழியையும் உருவாக்க வேண்டும். இந்த சட்டம் தவறானது என்று திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும், அதை நிறுத்தக்கூடாது. வேறு வழியில்லை என்றோ வேறு விதமாகவோ யாரும் நம்மை இதை ஒத்துக்கொள்ள வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது, நாமும் நமக்குள்ளேயே சட்டத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. இந்த சட்டம் நம்மிடமிருந்து கோருகிற எதையும் தராமல் ஒத்துழைக்காமல் இருக்க நம்மாலான வரையில் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நமது தலைமையிடமிருந்து தெளிவான திட்டங்களை, வெளிப்படையான தகவல்களை, நம்பகத்தன்மையைக் கேட்போம். இந்த சட்டம் எப்படிப் போனாலும், இட ஒதுக்கீடு பற்றிய நமது அழுத்தங்களைத் தொடர்ந்து முன்னிறுத்துவோம். எல்லாவற்றையும் நம்மிடமிருந்து பறித்துவிட்டபிறகு குறைந்தபட்சம் இதையாவது நம் அதிகார மையங்கள் தரவேண்டும். நேர்மறையான பாகுபாடுகள் சமநிலையிலாவது இருக்கும் ஒரு சமூகத்தில் தான் எதிர்மறையான பாகுபாடு வேண்டாம் என்பதையே பேசவேண்டும். இது 2020ம் ஆண்டு. நேர்மறையான பாகுபாடுகளுக்காக ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எல்லாம் சிதைக்கப்படுகின்றன. நாம் நமது கோரிக்கைகளை வலுக்கட்டாயமாக முன்வைப்பதற்கு முன்பே இவை சிதைக்கப்படுகின்றன. ஒரு வகையில் திருநர் சமூகத்துக்குள்ளேயே இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணம் எனலாம். இதனால் நாம் தீவிரமாக பாதிக்கப்படுவோம். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும், அதை முன்னிட்டு நமது கோரிக்கைகளையும் திட்டங்களையும் மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். இந்த சட்டத்தைப் பொருத்தமற்றதாக நாம் மாற்றவேண்டும்.
இந்த கட்டுரை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க…
மொழிபெயர்ப்பு எழுத்தாளரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு எழுத்தாளரால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. மொழிபெயர்ப்பு - நாராயணி