உரையாடலின் ஆரம்பம்

ஜனவரி 22, 2019-ல், கிருஷ்ண பிரபு என்பவர் கிரீஷின் விடுபட்டவை, புத்தகத்தை முன்வைத்து எழுதிய facebook பதிவிற்க்கு QCC-யின் நன்றியும் எண்ணங்களும்.
கிருஷ்ண பிரபு அவர்களின் பதிவு கீழே மேற்கோள் செய்யப்பட்டுள்ளது.

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் எண்ணங்கள்

பால்புதுமையினரின் எழுத்துக்களை பதிப்பிக்க எந்த பதிப்பகங்களும் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில் அந்த எழுத்துக்கள் பதிப்பிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் கருதியே குயர் சென்னை கிரானிக்கள்ஸ் பதிப்பகத்தை ஆரம்பித்தோம். எங்களின் முதல் புத்தகமாக கிரீஷ் எழுதிய விடுபட்டவை புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தபோது கதை, கட்டுரை, கவிதை என எந்த வரையறைக்குள்ளும் இப்புத்தகத்தை அடக்கமுடியாத நிலை இருப்பதாக நண்பர்களும் சில பதிப்பகத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இப்புத்தகத்தை வெளியிட்டால் விருதுகளின் எந்தப் பிரிவுக்குள்ளும் இப்புத்தகத்தை கொண்டுவரமுடியாது என்பதும், நூலக ஆர்டர்கள் கிடைக்காது என்பதும் அவர்களது விமர்சனமாக இருந்தது. புத்தகம் வெளியான பின்னரும் அந்த விமர்சனமே தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

இம்மாதிரியான சூழ்நிலையில் எதைப்பற்றியும் யோசிக்காமல் புத்தகத்தை குயர் சென்னை கிரானிக்கள்ஸுடன் இணைந்து பதிப்பிக்க உதவிய கருப்புப் பிரதிகள் பதிப்பகத்துக்கு நன்றி.

பால்புதுமையினரின் வாழ்க்கை என்பது எந்த கட்டமைக்கப்பட்ட வரைமுறைகளுக்கும் அடங்காததாகவே இருக்கிறது. அப்படியான வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் அடக்க முயல்வது என்பது அநீதியாகவே இருக்கும். எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள், திருநர் அல்லாதவர்கள் இயல்பானது எனக் கற்பித்திருக்கும் வாழ்க்கை முறையை உடைப்பதென்பது என்பது அவர்களின் இலக்கிய வரையறைகளையும் சேர்த்து உடைப்பதே. அம்மாதிரியான ‘இயல்பு’ எனும் நிலையில் இருந்து வந்த விமர்சனங்களே, விடுபட்டவை புத்தகம் எந்த வரைமுறைக்குள்ளும் அடங்கக் கூடாது என்கிற எங்கள் முடிவை இன்னமும் உறுதியாக்கியது.

விருதுகளைத் தாண்டி, விடுபட்டவை புத்தகம் வெளியான பிறகு பால்புதுமையினரால் எளிதாக நுழைந்து விட முடியாத இடங்களில் நடக்கும் வரைமுறைகளைக் கேள்வி கேட்கும் உரையாடல்களையே நாங்கள் இந்தப் புத்தகத்தின் வெற்றியாகப் பார்க்கிறோம்.

ஜனவரி 22 2019-ல்: கிருஷ்ண பிரபு அவர்களின் பதிவு

ஒலிக்க வேண்டிய குரல்

க.சீ.சிவகுமார் நினைவு விருதுக்காகச் சென்ற வருடம் மேக்லி பதிப்பகம் வெளியிட்ட லூசிஃபர் ஜே வயலட்டின் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ தொகுப்பைப் பரிந்துரைசெய்திருந்தேன். இவ்வருடம் ‘விடுபட்டவை’ பரிந்துரைக்காக. ஆனால், இது ஒரு கொலாஜ் வொர்க். எந்தக் கேட்டகிரியிலும் வராது.

எல்லாக் கதைகளும் ஒன்று போலவே இருக்கின்றன என லூசிஃபரின் தொகுப்பு சார்ந்து நம் ஆட்கள் விமர்சனம் வைத்தார்கள். போன வருடம், லிவ்விங் ஸ்மைல் வித்யா ‘மரணம் மட்டுமா மரணம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். திருநங்கைகளின் சுயசரிதை மற்றும் கட்டுரைகள் ஏற்கனவே தமிழில் வெளியீடு கண்டுள்ளன. ரேவதி, பிரியா பாபு, வித்யா எனச் சிலரை உதாரணமாகச் சுட்ட முடியும்.

ஆனால், புனைவு சார்ந்து தமிழில் மாற்றுப் பாலின நபர்கள் ஏதேனும் வெளியீடு செய்துள்ளார்களா என்று தெரியவில்லை. (ஒரு கதை அல்லது ஒரு கவிதை என எங்கேனும் பிரசுரம் கண்டிருக்கலாம். ஆனால், தொகுப்புகள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை).

மானிடவியல் ஆய்வாளரும், மொழிபெயர்ப்பாளருமான அனிருதன் வாசுதேவன் — தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு என — மொழியாக்கம் செய்கிறார். எனினும் தமிழில் அவர்களுடைய சுய குரல் ஒலிக்கிறதா!? அப்படியே ஒலித்தாலும் அதை நாம் அடையாளப்படுத்துகிறோமா என்று தெரியவில்லை.

திருநங்கைகளின் செயல்பாடாவது எழுத்து சார்ந்து — சுய சரிதை, கட்டுரை, கவிதை என — களம் விரிகிறது. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான வெளியை நாம் கொடுப்பதற்குத் தவறுகிறோம் என்றே நினைக்கிறேன். மாலினி ‘லேடீஸ் அண்ட் ஜெண்ட்டில்மேன்’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். இயக்குநர் பா. ரஞ்சித் இல்லையேல் அதுவும் கூட நடந்திருக்காது. இங்குதான் அறிவுஜீவி இலக்கியச் சூழலை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். இவர்களின் எழுத்து சார்ந்து நாம் ஏதாவது பேசுகிறோமா!? பேசி இருக்கிறோமா!?

ஒருபால் ஈர்ப்பாளரான கிரீஷ் அவர்களின் ‘விடுபட்டவை’ என்ற தொகுப்பைக் ‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டுள்ளார்கள். இதில் ‘கதை, கட்டுரை, இணையப் பதிவு, கவிதை’ என எல்லாமும் இருக்கிறது. இந்தப் புத்தகம் அவசியம் கவனப்பட வேண்டிய புத்தகம். கிரீஷ் போன்றவர்களின் குரல் ஒலிக்க ஒரு வெளியைக் கொடுக்க வேண்டியது நம் கடமை. ஆனால், இங்கு ‘கதைக்கு, கவிதைக்கு, நாவலுக்கு, இந்தப் பிரிவுகளின் முதல் தொகுப்புக்கு’ என விருதுகள் கொடுக்கப்படுகிறது. அவ்வாறான சட்டக விதிமுறைகளின் அடிப்படையில் ‘விடுபட்டவை’ தொகுப்பு அடிபட்டுப் போகிறது. என்றாலும் சிறுபான்மையினரின் குரலாக ஒலிக்கும் தொகுப்பை நாம் அவசியம் பரிந்துரை செய்யவேண்டும் அல்லவா!?

க.சீ.சிவகுமார் விருது அறிவிக்கப்படும் சமயங்களில் நான் ரமேஷ் வைத்யாவுக்கும், பாஸ்கர் சக்திக்கும் தொலைபேசுவேன். மின்னஞ்சலும் அனுப்புவேன். அவ்வாறுதான் இம்முறையும் அவர்களை அழைத்தேன்.

“விடுபட்டவை, தொகுப்பை கன்சிடர் பன்னுங்களேன். கிரீஷ்ன்னு யாரோ எழுதி இருக்காங்க”

“அவரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்…” என்றார் பாஸ்.

“ஒரு வாசகனா அவர ரெக்கமண்ட் செய்யறேன். கண்சிடர் பண்ணுங்க” என்றேன்.

“நம்ம சிறுகதைத் தொகுப்புக்கு மட்டும்தானே விருது கொடுக்குறோம்… இது அந்தக் கேட்டகிரியில வராதே…” என்றார் பாஸ்.

“கதை மற்றும் கவிதையும் அவர் எழுதுறாரு. எழுதவும் வருது. கதம்பமா தொகுப்பைக் கொண்டு வந்திருக்காரே என்ன செய்யறது!?” என்றேன்.

“வருத்தம்தான்…” என்றார் பாஸ்.

“இதை எல்லா விருதுக் குழுவும் சொல்லுவாங்களே. இதுக்குமேல ஒன்னும் சொல்றதுக்கு இல்ல” என்றேன்.

சமூக அவதானிப்புக்கும் கவனத்துக்கும் உள்ளாக வேண்டிய குரல்களை ஏதோ ஒரு காரணம்காட்டி அல்லது இயலாமையால் நாம் Ignore செய்கிறோம். மேலும், இவர்கள் எந்த இலக்கியக் குழுக்களிலும் இல்லாதவர்கள் அல்லது ஒதுங்கி வாழ்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது சட்டகத்திற்கு உட்பட்ட கறாரான விதிமுறைகளும், விதிகளின் வழி செல்லும் இயல்பும் உரத்து ஒலிக்கவேண்டிய குரலைத் தட்டையாகத் தேயச் செய்கிறது எனில் அது அவர்களில் contemporary fate-தான். வேறென்ன சொல்ல.

~~

விடுபட்டவை புத்தகத்தின் ஒரு கட்டுரையில் பின்வரும் கவிதை வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன:

கருப்பின ஒருபால் ஈர்ப்பாளரான மார்லன் ரிக்ஸ் (Marlon Rigges) 1989 இல் தயாரித்த கட்டவிழ்க்கப்பட்ட நாவுகள் (Tongues Untied) என்ற கட்டுரையில் பின்வரும் கவிதை ஒன்றை கிரீஷ் பதிவு செய்கிறார்.

“அமைதி என்னுடைய கேடயம்,
அது என்னை நசுக்குகிறது,
அமைதி என்னுடைய அங்கி,
அது என்னை மூச்சுத்திணறச் செய்கிறது,
அமைதி என்னுடைய ஆயுதம்,
அது இருபக்கமும் கூரானது.
ஆனால் அமைதியாக இருப்பது
தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” (P: 64)

நாம் அவர்களை அடையாளப் படுத்தாமல் அமைதியாகவே இருக்க விடுகிறோம் என்பதில் வருத்தமே!

~~

கவிதைத் தொகுப்புக்காக லிவ்விங் ஸ்மைல் வித்யாவுக்கும், ஒரு கொலாஜ் தொகுப்புக்காக கிரீஷூக்கும் வாழ்த்துகள்.

இத்தொகுப்புகள் ஏதேனும் ஒரு விதியின் காரணத்தால் நிராகரிக்கப்படும் என்பதை மனதில் இருத்தியே இத்தொகுப்புகளை ‘முதல் தொகுப்பு விருதுக் குழு’க்களுக்குக் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள இந்த இரண்டு புத்தகங்களையும் பரிந்துரை செய்கிறேன்.

இத்தொகுப்புகள் ஏதேனும் ஒரு விதியின் காரணத்தால் நிராகரிக்கப்படும் என்பதை மனதில் இருத்தியே இத்தொகுப்புகளை ‘முதல் தொகுப்பு விருதுக் குழு’க்களுக்குக் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள இந்த இரண்டு புத்தகங்களையும் பரிந்துரை செய்கிறேன்.

லிவ்விங் ஸ்மைல் வித்யாவுக்கும், கிரீஷூக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து புனைவாக்கத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

~*~