பால்புது சுயமரியாதை மாதம் – 2023

பால்புதுமையினர் சுயமரியாதை மாதமாக கொண்டாடப்பட்டு வரும் ஜூன் மாதத்தை இன்கிளூஸிவ் நியூஸ்ரூம்ஸ் இந்த வருடம் பால்புது வரலாற்று மாதமாக அனுசரிக்கிறது.

அதன் ஒரு பகுதியாக கிறிஸ்டி மற்றும் ருக்மணியை நாங்கள் இன்று நினைவுகூர்கிறோம். 

மே மாதம் 2008-ம் ஆண்டு, தாங்கள் காதலிப்பதற்கும் இணைந்து வாழ்வதற்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு பால்புது பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அதற்கு பிறகான பதினைந்து வருடங்களில் பலவிதங்களில் பால்புதுமையினர் குறித்த உரையாடல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான விழிப்புணர்வும் ஆதரவும் பால்புதுமையினருக்கு கிடைத்திருக்கிறது. இருந்த போதும் கிறிஸ்டி மற்றும் ருக்மணியைப் போன்ற பலரும் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் அறியாமைக்கும் பலியாகி இருக்கின்றனர்.

நமது கதைகள் குடும்பங்களாலும் சமூக அமைப்புகளாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் நமது குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நமது இருப்பை மறுக்கும் சமூகத்தின் முன்னால் நம் இருப்பை பிரகாசமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். நமது மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமைக்கான போராட்டத்தை நாம் முன்னோக்கி எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். 

நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களை நினைவுகூர்வதோடு, அவர்களது வாழ்வும் போராட்டமும் பொது வெளியில் இருந்து மறக்கப்படாமல் இருப்பதற்கான முன்னெடுப்பையும் மேற்கொள்கிறோம். நமது வாழ்க்கையை நாம் வாழ்வதோடு இந்த உலகம் நமக்கானது என்பதனை உரக்கச் சொல்வதுமே உண்மையான விடுதலை எனும் நோக்கில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

அழிக்கப்பட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்ட நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதன் மூலமாகவே நமது வரலாற்றை உருவாக்க முடியும் என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

எத்தனை தடைகள் வந்தாலும் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வோம் என்பதையும் ஒருவருக்கொருவர் எல்லா நேரத்திலும் ஆதரவாக நிற்போம் என்பதையும் இந்த உலகத்துக்கு பறைசாற்றுவோம். நம்முடையை மூதாதையருக்கும் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம்.

மேலும் விவரங்களுக்கு: news-inq.com

https://www.instagram.com/p/CtG5eJ7PYyY/