குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் குழுவிற்கும், நிறுவனத்தாருக்கும் கண்டனங்கள்

இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் தொங்கும் உங்கள் போஸ்டர்களில், “கொரோனா திகில், சென்னைக்கு குட்பை” என்ற உங்கள் கட்டுரையை விளம்பரப்படுத்த, என் Is it too much to ask படத்தின் ஃபிரேமை எந்த முன் அனுமதியின்றி அவ்வளவு அலட்சியமாகப் பயன்படுத்தியிருப்பதை அந்தப்படத்தின் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அந்தப் படம் தமிழின் மிக முக்கியமான நாடகக் கலைஞர்களான லிவிங் ஸ்மைல் வித்யாவும், ஏஞ்சல் க்ளாடியும் அவர்கள் திருநங்கைகளாக இருப்பதாலேயே சென்னையில் பாதுகாப்பான வீடொன்று வாடகைக்கு கிடைக்காமல் போராடுவதை ஆவணப்படுத்தியிருக்கும். அவர்கள் இருவரும் இடம்பெற்றிருக்கும் என் படத்தின் போஸ்டர் இமேஜை உங்கள் கட்டுரைக்குப் பயன்படுத்தியது பத்திரிகை அறமல்ல.  ஒரு கட்டுரைக்கான புகைப்படத்தை ஒரிஜனலாக எடுத்து பயன்படுத்துவதற்கான வசதி இல்லாததுமல்ல குமுதம் நிறுவனம். 

சுயாதீனக் கலைஞர்களைக் கிள்ளுக்கீரையாக நினைப்பதையும் அவர்களின் படைப்புகளைப் பொறுப்பற்றுப் பயன்படுத்தி அவமதிப்புள்ளாக்குவதையும் குழுதம் நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

 2017 -ல் ஜப்பான் அரசாங்கத்தின் பாரம்ப்ர்யம் மிகுந்த NHK தொலைக்காட்சி ஊடகத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி, உலகமெங்கும் இதுவரை எண்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகரிக்கப்பட்டு சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவின் தங்க விருதும், கத்மண்டுவின் தெற்காசிய திரைப்பட விழாவின் ஜூரி விருதும், ஜெர்மனியின் ஃபெமினிஸ்ட் திரைப்பட வாரத்தின் பார்வையாளர் விருதும் பெற்ற படம் Is it too much to ask

தமிழ் ஊடகம் படத்தையும் குழுவையும் பெருமைப்படுத்த வேண்டும் என்று சத்தியமாக எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எங்கள் அடிப்படை உரிமை.

மேலும், இது மிக மோசமான அறிவுசார் சொத்துரிமை சட்ட (Intellectual property rights) மீறலாகும். குமுதம் நிறுவனம் இதற்கான நிவாரண நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டரீதியான வழக்குகளை சந்திக்க வேண்டி வரும்.

– லீனா மணிமேகலை