தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 1

2018 ஆம் ஆண்டு குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், பால்புது எழுத்தாளர்கள் மற்றும் பால்புது (குயர்) இலக்கிய வட்டத்தில் பரிச்சயமான சிஸ்-எதிர்பாலீர்ப்பு (cis-het) எழுத்தாளர்களின் தமிழ் நூல்களின் பட்டியலை தொகுத்தது. இந்த உலகில் எதுவும் சம்பந்தமற்றதாக உணரும் காலங்களில் நம்மில் பலருக்கு இந்த புத்தகங்கள் ஆறுதலாக இருந்திருக்கிறது. இந்தப் புத்தகங்கள் இறுகிய இலக்கிய வெளிக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளதோடு குயர் தன்மைக்கு தனித்துவமாக உள்ளது. ஒவ்வொன்றின் பின்னும் அதற்கான கதை ஒளிந்திருக்கிறது, அவைகள் நம் ஒவ்வொருவருக்கும் எதையேனும் தரத்தான் செய்யும் – பால்புதுமையினருக்கும் அல்லாதாருக்கும். இதோ அந்த தொடரிலிருந்து முதல் பட்டியல்:

ஊதா ஸ்கர்ட் கதைகள் 2016இல் எல் ஜே வயலட் எழுதி மோக்லி பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டது. மிகச் சிறிய கதைகளான இவை, எந்த குறிப்பிட்ட நிலப்பரப்புடனும் அடையாளப் படுத்திக் கொள்ளாதவை இக்குறுங்கதையாடல்கள். வழமையான பாலின பாலியல் பேசும் மொழியின் எல்லைக்கு வெளியிலிருந்து இவை கதை சொல்கின்றன. இவற்றை காதல் கதைகள் என்றோ இலக்கியமென்றோ கூறலாம். நல்வாய்ப்போ கெடுவாய்ப்போ இவை தமிழில் தனியொரு வகைமையாயாயே இருக்கின்றன.


திரைப்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பு “உலகின் அழகிய முதல்பெண்” (2010). ஈர்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணின் ஆசைகளைப் பேசும் இக்கவிதைத் தொகுப்பின் வாயிலாகவே லீனா மணிமேகலை தனது ஈர்பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டார். இந்த புத்தகம் ‘முற்போக்குவாதிகள்’, வலதுசாரிகளால் தாக்குதலுக்குள்ளானதோடு மத உணர்வுகளை புண்படுத்துவதாக காவல்துறையில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.


கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதி 1964-ல் வெளியான சிறுகதை “கோமதி”. பெண்தன்மை கொண்ட கோமதிநாயகம் எனும் கதாபாத்திரம் தனது உடலையும், ஒரு ஆணின் மீதான காதலையும் உணரும் இச்சிறுகதை கி.ராவின் சிறுகதைத்தொகுப்பில் வாசிக்கக்கிடைக்கிறது. பால்புதுமையினருக்கான ஆரம்பகால இலக்கியங்களில் கி.ராவின் “கோமதி” மிகமுக்கியமானது.

பால்புதுமையினரின் அடையாளங்கள் பற்றிய விவாதங்கள், புரிதல் ஏதும் பெரிய அளவில் இல்லாத அக்காலத்தில் பால் புதுமையினர் எனத்தன்னை அறிவித்துக்கொள்ளாத ஒருவரால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் வரும் கோமதி கதாபாத்திரத்தை இன்றளவிலும் ஓர்பாலீர்ப்புகொண்ட ஆண்களாலும் , திருநங்கைகளாலும் பெருமளவில் புரிந்துகொள்ளமுடிகிறது. இனையத்தில் கதையை படிக்க…


எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதி, அமரர் ஆதித்தனார் இலக்கிய விருது பெற்ற நாவல் வாடாமல்லி.மக்கள் தொடர்பு அதிகாரியாகப்பணியாற்றிய சு.சமுத்திரம் பணியின்போது கூவாகம் திருவிழாவில் தான் சந்தித்த திருநங்கைகளின் துயரங்களை சிறுகதையாக்கி ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அனுப்பியபோது அக்கதை தொலைந்துவிட்டதாகவும், பின்னர் வேறு வேறு காரணங்கள் கூறி அக்கதையை வெளியிட மறுத்துவிட்டதாகவும் இந்நாவலின் முன்னுரையில் கூறுகிறார்.

திருநங்கைகள் தொடர்பான பாலியல்கதைகளைத்தவிர்த்த வேறு எதிலும் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டாத நிலையில் சு.சமுத்திரம் பல திருநங்கைகளைச்சந்தித்து அவர்கள் கதைகளையும் இணைத்து வாடாமல்லி எனும் நாவலை எழுதினார். பரவலான வாசகர்களிடம் ஒரு நாவலைக்கொண்டுசேர்க்கமுடியாது என்பதால் ஆனந்தவிகடனில் ஒரு தொடர்கதையாக வாடாமல்லியை வெளியிட்டிருக்கிறார்.

மேகலை எனும் திருநங்கையின் வாழ்க்கை மற்றும் அவரது குடும்பம், அவர் சார்ந்த திருநங்கைகளின் வலி எனப்பேசும் இத்தொடரில் சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு 1994-ம் ஆண்டு நாவலாக வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.தற்போது வேறு வேறு பதிப்பகங்களால் 
மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

திருநங்கைகளைக்குறிக்க இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பால்புதுமையினர் சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட வார்த்தைகள் இப்போதைய காலகட்டத்தில் வாசிக்கும்போது நெருடலாக இருந்தாலும் நாவல் வெளியான காலகட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.


அரங்கக்கலைஞரும் திருநர்களுக்கான செயல்பாட்டாளருமான கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கவிதைத்தொகுப்பு “மரணம் மட்டுமா மரணம்”. திருநர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் இச்சமூகத்தில் அடிப்படைத்தேவைகளிலிருந்து அனைத்திற்குமான குரலாக ஒலிக்கிறது இந்தக்கவிதைத்தொகுப்பு. 

“நான் வித்யா” என்ற தலைப்பில் தனது வாழ்க்கையயும், “மெல்ல விலகும் பனித்திரை” எனும் தலைப்பில் திருநர்கள் பற்றிய சிறுகதைகளையும் தொகுத்திருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் இத்தொகுப்பு “கருப்புப்பிரதிகள்” பதிப்பகத்தால் 2018-ம் ஆண்டு சென்னை புத்தகத்திருவிழாவில் வெளியிடப்பட்டது.


கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் விடுபட்டவை புத்தகம், தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சித்தரிப்புகள் அதன் அரசியல் குறித்த ஒடுக்கப்பட்ட ஒரு குரலின் வெளிப்பாடாகவும், சாட்சியமாகவும் இப்பதிவுகள் திகழ்கின்றன. கூடவே, முகமூடிகள், ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் செயல்படும் சாதிப் படிநிலைகள், முந்திரி மணம் வீசும் காதல் பற்றிய எழுத்துகளையும் இப்புத்தகம் கொண்டிருக்கின்றது.

கருப்புப்பிரதிகள் பதிப்பகத்துடன் இணைந்து குயர் சென்னை க்ரானிக்கள்ஸ் தனது முதல் புத்தகமாக விடுபட்டவை நூலை 2018 புத்தகத்திருவிழாவில் வெளியிட்டது.