தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 3

பெண்களின் உடல், மனம், பாலீர்ப்பு மற்றும் பெண்ணரசியல் குறித்து எழுதப்பட்ட ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ சிறுகதைத்தொகுப்பிலுள்ள “பிங்க் வோட்கா” எனும் கதை ஈர்பாலீர்ப்பு கொண்ட இரண்டு பெண்களைப்பேசுகிறது. கவிஞரும், பாடலாசிரியருமான குட்டி ரேவதி எழுதிய இந்தப் புத்தகம் பாதரசம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.


“மாற்றுவெளி” பரிசல் புத்தக நிலையத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் ஆய்விதழ். 2011-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 6வது இதழ் மாற்றுப்பாலியல் சிறப்பிதழாக வெளியிடப் பட்டிருந்தது. பால்புதுமையினர் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், ஆவணங்கள், உரையாடல்கள், கலை ஆக்கங்கள் என இந்த சிறப்பிதழ் தொகுக்கப் பட்டிருந்தது. அ. பொன்னியும், அனிருத்தன் வாசுதேவனும் சிறப்பு தொகுப்பாளர்களாக இப்புத்தகத்தினைத் தொகுத்திருந்தனர்.


அரங்கக்கலைஞரும் திருநர்களுக்கான செயல்பாட்டாளருமான கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக “நான் வித்யா” எனும் பெயரில் எழுதியுள்ளார். ஒரு திருநங்கையின் போராட்டங்களையும், அதுகடந்த அவரது வாழ்க்கையையும் கூறும் இப்புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.இந்த புத்தகம் கன்னட மொழியில் “நானு அவனல்ல அவளு” என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. சிறந்த கதைக்கான கர்நாடக அரசின் மாநில விருது லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.


எழுத்தாளரும் கவிஞருமான கிரிஷ் எழுதிய சிறுகதை நந்தியார்வட்டம். சக வகுப்புத் தோழன் மீது இருக்கும் ஈர்ப்பை பற்றிய ஒரு டீனேஜ் சிறுவனைப் பற்றிய கதை. இக்கதை நம்முடைய டீனேஜ் ஆண்டுகளிலிருந்து நினைவுகளை மீண்டும் நிச்சயம் நினைவு கொள்ள செய்யும். இச்சிறுகதை பின்னர் விளக்கப்படக் கதையாக மாற்றப்பட்டது.

சிறுகதை மற்றும் படக்கதை ஆன்லைனில் படிக்க கிடைக்கிறது.


டி.தருமராஜ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “நான் ஏன் தலித்தும் அல்ல?” (2016). இப்புத்தகத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் டி. தருமராஜ் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன.இத்தொகுப்பிலுள்ள அவரது கட்டுரைகளில் ஒன்று பூமணி எழுதிய அஞ்ஞாடி (2012) நாவல் பற்றியது.

இந்நாவலில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களான ஆண்டி மற்றும் மாரி ஆகியோரின் நட்பு என்னவாக இருக்கும் என்பது பற்றி அவர்கள் இருவரின் மனைவிகளின் பார்வையில் இக்கட்டுரையில் டி. தருமராஜ் ஆராய்கிறார். கட்டுரையாசிரியர் அந்த நட்பு பற்றி ஆண்-பெண் உறவை மட்டுமே காவியத் தன்மை உடையதாய் கற்பனை செய்திருக்கிற சமூகச் சூழலில், காதல் மனையியரே கூட வியந்து நிற்கும் வகையிலான நட்பொன்று இரண்டு ஆண்களுக்கு இருப்பதாகவும் அது பிறருக்கு விளங்காத புதிராக இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் ஆண்டிக்கும் மாரிக்குமே அந்த நட்பு குழப்பமாக இருப்பதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

‘உயர்சாதியைச்’ சார்ந்த ஆண்டிக்கும், சாதியப் படிநிலையில் கீழாக வைக்கப் பட்டிருக்கும் மாரிக்குமான நட்பும், அவர்கள் சாதி காரணமாக நட்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என அந்த நாவல் நகர்ந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் அவர்களால் விளக்கிச் சொல்ல முடியாத பூடகமான உறவு என்ற கட்டுரையாசிரியர் டி. தருமராஜின் பார்வையும் முக்கியமானது. அஞ்ஞாடி நாவலையோ, நான் ஏன் தலித்தும் அல்ல எனும் கட்டுரைத் தொகுப்பையோ பால்புதுமையினருக்கான புத்தகம் என்கிற வரிசையில் சேர்க்க முடியாது. என்றாலும் அஞ்ஞாடி நாவலின் பாத்திரங்களைப் பற்றியும், அது தொடர்பான டி.தருமராஜின் கட்டுரை பற்றியும் பேசுவது ஒரு விவாதத்தை ஏற்படுத்த உதவும்.