இபிகோ பிரிவு 377 பிறகு செய்யவேண்டிய உரையாடல்கள்

இபிகோ பிரிவு 377 க்கு எதிரான வழக்கில் வெற்றிபெற்றிருக்கிறோம். எனவே இனி் வாழ்க்கை பூத்துக்குலுங்கும் நந்தவனமாக மாறப்போகிறது என்கிற நம்பிக்கை எல்லாம் இல்லாவிட்டாலும் சிலதைப்பேசவேண்டியிருக்கிறது.

எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கு, (அல்லது எதிரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு):

இவ்வளவு நாட்கள் நீங்கள் காட்டுகிற சிறிய அளவு அனுதாபத்திற்கெல்லாம் நாங்கள் நன்றியோடு இருக்கவேண்டும் என எதிர்பார்த்திருப்பீர்கள். எங்களை கேவலமாக நடத்தாமல் இருப்பதே எங்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவியாக நினைத்திருப்பீர்கள். அதற்கெல்லாம் பிரதிபலனாக அனைத்து அவமானங்களையும் சகித்து, தெருவில் நின்று போராடி நீங்களும் வாய்வழிப்புணர்ச்சி செய்ய சட்டப்படி உரிமை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். வெளியில் முகம் சுழித்தாலும் உள்ளுக்குள் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.

பால்புதுமையினருக்கு பணி செய்யும் என்ஜிஓக்களுக்கு:

பால்புதுமையினர் அனைவரும் எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களை உருவாக்கும் மெஷின்கள் அல்ல என்பதை உணரவேண்டிய தருணமிது. மறைந்துவாழும் விளிம்புநிலை மக்களுக்கான எயிட்ஸ் பிராஜக்டுகள் ஒருவேளை வரும் காலங்களில் இல்லாமல் போகலாம். ஒரு நோயோடு ஒரு சமூகத்தை இணைக்காமல் ஒடுக்குமுறையிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் மக்கள் சுயமரியாதையோடு வாழ ஏதேனும் செய்யமுடிந்தால் அதுகுறித்து யோசிக்கலாம்.

பால்புதுமையினருக்கு:

377-க்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றிக்குப்பிறகே நமக்கான உண்மையானப்போராட்டங்கள் தொடங்குகின்றன. 
377-க்கு எதிரான வழக்கின் இறுதிக்காலத்தில் தங்களை இணைத்துக்கொண்ட சிலரின் வாதங்களில் முக்கியமானது “நன்றாக ஐஐடியில் படித்திருந்தும், நல்லவேலையில் இருந்தும் இபிகோ பிரிவு 377 காரணமாக சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியவில்லை” என்பது.

இத்தனைநாட்கள் 377-ல் மாற்றம் அல்லது நீக்கம் எனும் ஒற்றைக்குறிக்கோளை நோக்கி விரும்பியோ விரும்பாமலோ பயணித்தோம். இனி நமக்குள் பேசுவோம். நம்மிடையேயான வேறுபாட்டைப்பேசுவோம். நம்மிடையே இருக்கும் சாதியத்திற்கும், வர்க்கபேதத்திற்கும், பால்பேதங்களுக்கும், ஆணாதிக்கத்திற்கும் எதிராக உரக்கக்குரல் எழுப்புவோம்.

படிப்பறிவில்லாத, நல்ல வேலையில் இல்லாத, சமூகத்தில் நல்லநிலையில் இல்லாதவர்களும் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழும் தகுதியை உடையவர்களே என அவர்களை நோக்கிச்சொல்லுவோம். அனைவருக்கும் ஒரே குரல் என்ற நிலையை மாற்றி அவரவர் குரலில் அவரவர் பேசுவோம். குறைந்தபட்சம் அடுத்தவர் பேசும்போது அவர்கள் பேச விடாமல் செய்யாமலிருப்போம்.


பிரிவு 377 நீக்கப்பட்டதற்கு பிறகு தொடங்கிய கொண்டாட்டங்கள் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. அதன்பிறகு செய்யவேண்டிய உரையாடல்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். பால்புதுமையினர் மேல் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகச்சட்டங்கள், பணியிடப்பாதுகாப்பு, பள்ளியில் இடையில் நிற்கவேண்டியநிலையைத்தடுப்பது, திருமணம், சொத்து, குழந்தை தத்து எடுத்தல் என அடுத்தடுத்த சட்டப்போராட்டங்கள் மிகப்பெரியது. அதேசமயம் தேவைகள் சார்ந்து முதலில் எதை நடைமுறைப்படுத்த, அடுத்த போராட்டங்களை மேற்கொள்ளுவது என்கிற கேள்விகளும் எழும்பும். வன்முறைத்தடுப்புச்சட்டம், வேலை, மிகமுக்கியமாகக்கல்வி என்பது என்னுடைய நோக்கமாக இருக்கிறது. திருமணம் போன்றவை இவையனைத்தும் ஏற்கனவே கிடைத்துவிட்டதாக நினைப்பவர்களின் நோக்கமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக பெருநகரங்களில் நடக்கும் இவ்வுரையாடல்கள் சிறுநகரங்களையும், கிராமங்களையும் நோக்கி நகரவேண்டும். 377-ஐப்பற்றி தெரியாத எங்கோஇருக்கும் நபருக்கு கூட அடுத்தடுத்து கிடைக்கும் வெற்றிகளும், உரிமைகளும் சென்றுசேரவேண்டும்.

அந்த உரையாடல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்நிலையில் பால்புதுமையினர் அல்லாத மற்றவர்களுக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதற்கான பதில்கள்.

1. பேருந்து, பொதுக்கழிப்பிடம் போன்ற இடங்களில் இவர்களின் ஆட்டம் இனி அதிகமாகுமே. அதை எவ்வாறு எதிர்கொள்வது?

முதலில் உரிமை பற்றியும், ஒப்புதல் பற்றியும் அதற்கான வேறுபாடுகள் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும். உரிமை கிடைத்திருப்பது இரண்டு வயது வந்தோர் ஒப்புதலுடன் உறவு கொள்வதற்கே. எனவே உங்கள் எல்லாரும் பிராண்டுவார்கள் என அச்சப்படத்தேவையில்லை. ஒப்புதல் இல்லாமல் யார் யாரை உறவுக்கு கட்டாயப்படுத்தினாலும் அது தவறுதான். அந்த ஒப்புதல் பற்றிய உரையாடலை மொத்தமாக சமூகத்தில் நிகழ்த்தவேண்டும். அதை ஓர்பாலீர்ப்புகொண்டவர்களுக்கு மட்டும் என ஒதுக்கிவைக்க முடியாது.

2. உங்களுக்கு அடுத்தடுத்து என்ன உதவிகள் நாங்கள் செய்யலாம்?

ஒரு ஆதரவாளராக நீங்கள் செய்யவேண்டியது நாங்கள் பேசுவதைக்காதுகொடுத்து கேட்பது, அதைப்புரிந்துகொள்வது, எங்களுக்கு வகுப்பு எடுக்காமல் இருப்பது, பால்புதுமையினருக்கு எதிரான மனநிலையிலுள்ளவர்களிடம் நாங்கள் ஒரு உரையாடலை மேற்கொள்ளும்போது அங்கு நாங்கள் தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகும் நிலை இருப்பதால் அம்மாதிரியான சூழ்நிலையில் அந்நபர்களிடம் ஒரு நல்ல ஆதரவாளாராக உரையாடுவது.

3. மதவாதிகளிடம் எவ்வாறு பேசுவது?

முதலில் எல்லாவற்றையுமே முன்முடிவுடன் அணுகும் மதவாதிகளிடம் உரையாடலைத்தவிர்க்கவேண்டும். “தாவரங்கள் ஓரினச்சேர்க்கை செய்கிறதா? பிறகு ஏன் நாம் செய்யவேண்டும்?” எனக்கேட்கும் மதவாதிக்கு என்ன பதில் சொல்லமுடியும்?

4. மக்கள்தொகை குறைந்து அடுத்தடுத்த தலைமுறைகளே இல்லாமல் போய்விடுமே?

இயற்கைக்கு எதிரான் 377 என்கிற சட்டம் தான் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர அனைவரும் ஓர்பால் உறவில் மட்டுமே ஈடுபடவேண்டும் என எந்தச்சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே மக்கள்தொகைக்குறைவைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. எனவே எங்களுக்கும் சேர்ந்து பெற்றுத்தள்ளுங்கள்.

5. சரி. சட்டமெல்லாம் வந்தாலும் ரகசியமாக வைத்துக்கொள்ளலாமே? எதற்கு ஊரைக்கூட்டி எல்லாம்?

உரிமை சார்ந்த போராட்டங்களும், அதுசார்ந்த வெற்றிகளும் ஊரைக்கூட்டிதான் நடைபெறும். அதில் பிரச்சினைகள் இருந்தால் எனக்கு இந்த கல்யாணம், பூப்புனித நீராட்டுவிழா, சாந்திமுகூர்த்தம், வளைகாப்பு என நீங்கள் கொண்டாடுவதெல்லாம் ஆபாசமாக இருக்கிறது. அதை எல்லாமும் ரகசியமாக வைத்துக்கொள்ளலாமே!

இப்போது எதிர்பாலீர்ப்புகொண்ட ஆண்களுக்கு என்னுடைய கேள்விகள்…

  1. 157 வருடக்கொடுமையான சட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது “ஐயோ! பஸ்ல கை வைப்பான். கக்கூஸ்ல கை வைப்பான். இன்பாக்ஸ்ல போட்டோ அனுப்புவான்” எனப்பேசி உரையாடல்களையும் கொண்டாட்டங்களையும் திசைதிருப்புவது எதற்கு? உலகம் சதா சர்வகாலமும் உங்களைச்சுற்றியே இயங்கவேண்டுமா?
  2. பெண்கள் எந்தக்குழப்பமும் இல்லாமல் தங்களது ஆதரவை வெளிப்படுத்தும்போது “வாழ்த்து சொன்னா நம்மளையும் ஹோமோன்னு நினச்சுடுனாங்களோ” என ஒரு பயத்தோடே எதற்கு எல்லாம் செய்கிறீர்கள்?
  3. ஒரு வேளை வழியே இல்லாமல் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தாலும் “Blue is the warmest colour, Fire” போன்ற லெஸ்பியன் படங்களைப்போட்டு ஆதரவு தெரிவிக்கிறீர்களே? “brokeback mountain, Goa” எனப்போட பயமா?
  4. கிண்டலாகக்கடந்து விடுவதற்கும், மீம் போடுவதற்கும், சம்மந்தமே இல்லாமல் பேசுவதற்கும் காரணம் “எங்க நாக்குமேல பல்லப்போட்டு நம்மளயும் கூட சேத்துருவாங்களே!!!! அப்டி எதும் நடந்தா நம்ம ஆண்மைக்கு இழுக்காச்சே” என்கிற பயம்தானே?