கலைஞருக்கு அஞ்சலி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானதைத்தொடர்ந்து  ராஜாஜி ஹாலில் பெரும்திரளான திருநங்கைகள்அவருக்கு அஞ்சலி செலுத்தியதையும், காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் இல்லத்திற்கு அவரது உடல் ஊர்வலமாகஎடுத்துச்செல்லப்படபோது அந்த ஊர்வலத்தில் திருநங்கைகள் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது. தங்களுக்கு கவுரவமான வாழ்வைஉறுதிப்படுத்துவதில் கலைஞர் முனைப்போடு செயல்பட்டார் எனத்திருநங்கைகள் நன்றி தெரிவித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில்ஒளிபரப்பப்பட்டன. முன்னெந்த அரசியல்தலைவருக்கும் இல்லாத அளவில் “கலைஞருக்கு திருநங்கைகள் நன்றி” எனத்தொலைக்காட்சிகள் செய்திவெளியிட்டன. அது உண்மையும் கூட.

திருநங்கைகளுக்கு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 2008-ல் நலவாரியத்தை அமைத்தது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும்இந்நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தது. அதன்பிறகு திருநங்கைகள் எனும் பதம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதிலும் திருநங்கைகளைஅவமானப்படுத்தும்விதமாக வெளியிடப்பட்ட சில கருத்துக்களை வன்மையாகக்கண்டித்ததிலும் கருணாநிதிக்குப் பங்குண்டு. திருநங்கைகளுக்குஅடையாள அட்டையும் அதன்மூலம் வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம், பால்மாற்று அறுவைசிகிச்சை, விண்ணப்பப்படிவத்தில் திருநங்கைஎனும் பிரிவு என அடிப்படை உரிமைகளை வழங்கியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.. அதற்கான நன்றிகளையே திருநங்கைகள்தெரிவித்திருந்தனர். 

கலைஞர் கருணாநிதி காலமான இச்சமயத்தில் அவர் தொடங்கி வைத்தப்பணிகளை நன்றியோடு நினைவுகூறுவதோடு அதற்கு பின்புலமாக இருந்த இந்நாட்டின் குடிமக்களாக தங்களது அடையாளங்களும், இருப்பும் மறுக்கப்பட்டு வாழ்ந்த திருநங்கைகளையும், உரிமைக்கான அவர்களதுபோராட்டங்களையும் நாம் புறம்தள்ளிவிடக்கூடாது எனவும் அதோடு செய்யவேண்டிய வேலைகள் இன்னமும் இருக்கின்றன என்பதையும்நினைவுபடுத்துகிறோம். மேலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள் கலைஞரால் அடைந்த பலனையோ, உரிமையையோ சொல்லிக்காட்டுவதைவைத்துக்கொண்டு திருநர்களுக்கான எல்லாமும் கிடைத்துவிட்டதாகப்பால்புதுமையினர் அல்லாதோர் சொல்லுவது இப்போதைய போராட்டங்களைவலுவிழக்கச்செய்யும். 

கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தத்திட்டங்கள் அடுத்தடுத்த ஆட்சிமாற்றத்தால் காணாமல் போகும்பொழுது அவரின் திட்டங்கள்பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப அவை விரிவுபடுத்தப்படவேண்டிய அவசியத்தையும் நாம்சிந்திக்கவேண்டும். உரையாடத்தொடங்கவேண்டும். கேள்விகளை எழுப்பவேண்டும். 

கலைஞர் கருணாநிதி அமைத்த திருநங்கைகள் நலவாரியம் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது? குறைந்தபட்ச செயல்பாட்டிலாவதுஇருக்கிறதா என்கிற கேள்விக்கான பதில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. கலைஞர் அமைத்த செம்மொழிப்பூங்கா, அண்ணா நூலகம்போன்றவற்றை பழிவாங்கும் நோக்கில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பராமரிப்பின்றி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து போராடியநம்மில் எத்தனை பேர் திருநங்கைகள் நலவாரியம் செயல்படாமல் இருப்பதைப்பேசினோம்?   

விண்ணப்பப்படிவங்களில் கலைஞர் கருணாநிதி திருநங்கை என்பதை சேர்த்தப்பறகு கல்லூரிகளில் சேர்வதற்கும். பணியில் சேர்வதற்கும்ஒவ்வொருமுறையும் பல்வேறுவிதமான சட்டப்போராட்டங்களைத் திருநர்கள் முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. அப்போராட்டங்கள் பெரும்பாலும்திருநர்களால் மட்டும்தானே நடத்தப்படுகிறது?

இரண்டுவருடங்களுக்கு முன்பு தாரா எனும் திருநங்கை காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தபோது நீதிவிசாரணை வேண்டியபோராட்டங்களை திருநர்களும் பால்புதுமையினருமே முன்னெடுக்கவேண்டியிருந்தது. பொதுச்சமூகத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்எவருக்கும் தாராவின் மரணம் மனித உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சினையாகத்தெரியவில்லையே?

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு திருநர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவுபிறப்பித்திருக்கிறது. தமிழகத்திலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநர்களுக்கு இடஒடதுக்கீடு வழங்கவேண்டும். மேலும் திருநர்கள்பதின்பருவத்தில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதால் அவர்களது கல்வியை அரசு உறுதி செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் திருநர்சமூகத்தினரால் குறிப்பாக லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் கிரேஸ் பானு போன்றோரால் எழுப்பப்பட்டுவருகிறது. 69 சதவீத இடஒதுக்கீட்டுடன் சமூகநீதிகாத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு எனப்பெருமையாகப்பேசும் பால்புதுமையினரல்லாத  எவராலும் ”திருநர்களுக்கான இடஒதுக்கீடு” என்கிற குரல் ஏன்இன்னமும் எழுப்பமுடியவில்லை?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா திருநர்களுக்கு ஆதரவாகக்கொண்டுவந்த தனிநபர் மசோதா பரவலாக திருநர்களின்வரவேற்பைப்பெற்றது. ஆனால் ஆளும் வலதுசாரி பாரதியஜனதா அரசு அம்மசோதாவை நீர்த்துப்போகச்செய்து மற்றொரு மசோதாவைமுன்மொழிந்திருக்கிறது. இதில் திருச்சி சிவா குறிப்பிட்டிருந்த உரிமை சார்ந்த கோரிக்கைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோராட்டங்களும் திருநர்கள் உட்பட்ட பால்புதுமையினராலேயே முன்னெடுக்கப்படுகின்றன. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டுவந்தவரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு மசோதாவை வலதுசாரி பாரதீயஜனதா அரசு சிதைக்கும்போது அதற்கு பால்புதுமையினர் அல்லாத திமுகவினர் கண்டனம்தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் அது திருநர்களுக்கான மசோதா தானே என்பதைத்தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்? 

2014-ல் வெளியான நால்சா தீர்ப்பு இன்னமும் அபல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த சுயமரியாதைப்பேரணிவரையிலும் ”அமல்படுத்து அமல்படுத்து. நால்சா தீர்ப்பை அமல்படுத்து” என்கிற முழக்கம் எழுப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அடையாள அட்டையும், கவுரவமான அடையாளமும் வழங்கப்பட்டு பத்து ஆண்டுகளில் தேவைகள் மாறி இருக்கிறது. கலைஞரின் பணிகளைச்சொல்லிதிருப்திப்படுவதோடு மட்டும் நின்றுவிடாமல் பயணிக்கவேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது.

திருநர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கிட அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சி எடுக்கவேண்டும். பணியிடங்கள் மற்றும் பொதுஇடங்களில் பால்புதுமையினருக்கு உடல் மற்றும் மனம் சார்ந்து நிகழும் வன்முறைகளுக்கு எதிராக வன்கொடுமைத்தடுப்புச்சட்டம்கொண்டுவரப்படவேண்டும். இருப்பிடம் மற்றும் அரசாங்கதத்தின் அனைத்து உரிமைகளும் கிடைத்திடவேண்டும் என தேவைகள் அதிகமாகவேஇருக்கிறது. 

மேலும் பால்புதுமையினர் சமூகம் குறித்த பேச்சு வரும்போதெல்லாம் “திருநங்கைகள் நலவாரியம்” அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிபால்புதுமையினருக்கான அனைத்தும் செய்யப்பட்டுவிட்டதாக சில உரையாடல்களை கேட்கமுடிகிறது. பாலினம்/ பாலீர்ப்பு சார்ந்து ஒடுக்கப்படுகிறோம்என்கிற ஒரு நிலையில் இணைந்து போராடுகிறோமே தவிர எதிர்பாலீர்ப்பு கொண்டோரல்லாத பால்புதுமையினர் அனைவருக்குமான தேவைகள்வெவ்வேறாக் இருக்கிறது. அதைப்பற்றிய வெளிப்படையான உரையாடல்களைத்தொடங்கவேண்டும். இந்தியத்தண்டனைச்சட்டம் 377-ஐப்பொறுத்தவரையிலான தங்களது நிலைப்பாட்டை கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் அறிவிக்கும் போது தங்களது நிலைப்பாட்டைதிமுகவும் அறிவிக்கவேண்டும் தமிழ்நாட்டில் மட்டுமாவது 377 சட்டப்பிரிவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சுயமரியாதைத்திருமணம், சாதிமறுப்புத்திருமணம் போன்றவற்றிற்கு அங்கீகாரம் வழங்கிய கலைஞர் கருணாநிதியின் வழியில் பால்புதுமையினர்இணைந்து வாழுவதற்கு அங்கீகாரம் வழங்கும் நிலையை நோக்கி நகரவேண்டும்.

சமூகநீதிக்கான காவலராகக்கொண்டாடப்படும் தகுதியுடையவர் கலைஞர் கருணாநிதி. அதேவேளையில் சமூகநீதி மறுக்கப்படும் ஒவ்வொருதனிநபருக்கும் சமூகநீதி கிடைக்க வகை செய்வதே கலைஞருக்கு செலுத்தமுடிகிற உண்மையான அஞ்சலியாக இருக்கமுடியும்.