நீங்கள் பழமையாகிவிட்ட இடத்திலிருந்தும் நாங்கள் புதுமையானவர்களே

ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் அடையாள அரசியலில் வார்த்தைப்பிரயோகம் முக்கியமானது. queer community (பரவலாக LGBT என அறியப்படும் சமூகம்) பல்வேறு அடையாளங்களைக்கொண்டு எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காமல் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இச்சமூகத்தை அடையாளப்படுத்த இச்சமூகமக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒருவார்த்தையைக்கொண்டு வர இயலாது.

தமிழ்க்குடும்ப சூழலில் வளர்ந்த எனக்கு ஆண்மீது மற்ற ஆண் கொள்ளும் ஈர்ப்ப்புக்கு ஓரினச்சேர்க்கை எனும் வார்த்தையே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வார்த்தை எதிர்மறையானது மற்றும் எங்களைக்கொச்சையாக சித்தரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இவ்வார்த்தை இப்பொழுதும் queer communityயால் அவமானமான ஒரு பதமாகவேக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இதை ஏற்காமல் தொடர்ந்து ஓரினச்சேர்க்கை என்று குறிப்பிடுகின்றன. என்னுடைய பதின்வயதில் என்னைப்போன்றவர்களுக்கான ஆங்கிலப்பதமாக எனக்குத்தெரிய வந்தது “homosexual and gay” எனும் பதங்கள். இப்போது இந்தியாவில் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது இவ்வார்த்தைகளே.

இந்தியாவில் பலவிதமான பாலீர்ப்பு — பாலின அடையாளங்கள் இருந்தாலும் அவற்றிற்கான வார்த்தைகள் குறைவாகவோ அல்லது பரவலாகத் தெரியாமலோ இருக்கின்றன. ஆனால் கடந்தகாலங்களில் நான் சந்தித்த நபர்களில் சிலர் எந்த ஒரு பதத்துடனும் தங்களது பாலீர்ப்பு — பாலினத்தை அடையாளப்படுத்தாமலிருக்கவே விரும்புகின்றனர். இவர்களில் பலர் தங்களுடைய வாழ்க்கையை எந்த ஒரு அடையாள வார்த்தையும் இல்லாமல் வாழ்ந்துவிட்டனர்.

queer இயக்கங்களில் பலகாலமாக வெளிப்படையாக இருப்பது திருநங்கைகள். அவர்களை அடையாளப்படுத்த பதம் இருக்கிறது. அரவாணி எனும் அடையாளத்திலிருந்து திருநங்கை என மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தைகளுக்குப்பின்னால் வரலாறும் காரணங்களும் இருக்கின்றன. சுயமரியாதை இயக்கங்களின் வழிவந்த தமிழ்நாட்டில் அரவாணி எனும் வார்த்தை கைவிடப்பட்டு கடந்த காலங்களில் திருநங்கை எனும் வார்த்தை பெரும்பாலும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பாலீர்ப்பு அரசியல் தொடர்பான போராட்டங்கள் இந்தியாவில் வெகு சமீபத்திலேயே தொடங்கப்பட்டது. எங்களது பாலீர்ப்பு குறித்து எங்களை “ஓர்பாலீர்ப்பு கொண்டவர்” “ஈர்ப்பாலீர்ப்பு கொண்டவர்” என அடையாளப்படுத்தவேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். ஆங்கிலத்தைப்போல அதற்கு இணையான வார்த்தைகள் எதுவும் இல்லை. மேலும் தமிழை விடவும் ஆங்கிலத்திலுள்ள வார்த்தையே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. பாலினத்தைக்குறிக்கும் வார்த்தைகள் குறைவாக இருப்பதாலும், non-heterosexual sexualities பற்றிய வார்த்தைகளை உருவாக்க எந்த முயற்சியும் இல்லாமல் இருப்பதாலும், எல்லா தமிழல்லாத வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைக்கண்டுபிடிக்கும் தமிழ்ச்சமுதாயம் பாலியல் — பாலினம் சார்ந்த வார்த்தைகளைத்தமிழ்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்தாலும் அது hetero-centric ஆகவோ homophobic ஆகவே இருக்கிரது.

ஆங்கிலத்தில் இருக்கும் gay and queer போன்றவார்த்தைகள் சமுதாய மக்களாலேயே மீட்டெடுக்கப்பட்டது. தங்களை அவமானப்படுத்தப்பட்ட வார்த்தையை தங்களது அடையாளமாக ஒரு தலைமுறை மீட்டெடுத்தது. ஆனால் சில வயதான non-heterosexual and non-cis persons அவ்வார்த்தை தங்களுக்கு எதிரானது என்றே நினைக்கிறார்கள். இந்தியாவில் queer எனும் வார்த்தை எதிர்மறையான நோக்கத்துடன் அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகள் தமிழில் இல்லாதபோது அவையனைத்தையும் குறிக்க queer எனும் வார்த்தையை உபயோகிக்கிறோம். அதே சமயம் ஒவ்வொரு கலாச்சாரமும் ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட gender-non-confirming மக்கள் மற்றும் non-heterosexual desires-ஐ அடையாளப்படுத்த வார்த்தைகளைக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஆங்கிலத்திலுள்ள வார்த்தைகளோடு பொருந்திப்போகாமல் இருக்கின்றன.

queer மக்கள் தங்களது பாலினத்தையோ பாலீர்ப்பையோ எதற்கும் மாற்றாகப் பொதுவில் பார்ப்பதில்லை. ஆனால் பாலினம் — பாலீர்ப்பு போன்ற பதங்கள் cisgendered மற்றும் heterosexual மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால் மனித உரிமைகள் என்கிற இடத்தில் எங்களை அடையாளப்படுத்த சில வார்த்தைகளை பயன்படுத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். பாலியல் — பாலினச்சிறுபான்மையினர் எனும் வார்த்தைகள் பயத்தோடு சிலகாலம் உபயோகிக்கப்பட்டது. ஆனாலும் பெரும்பான்மையான queer மக்கள் தங்களை சிறுபான்மையினராகப்பார்க்கிறோமா என்பது கேள்விக்குறி.

இவ்வுலகில் பெரும்பான்மையினர் என்று தங்களை நினைப்பவர்கள் சிறுபான்மையினர் என்று மற்றவர்களை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அடையாளப்படுத்துதல் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதில்லை. சிறுபான்மை-பெரும்பான்மை எனும் வார்த்தைகள் ஒரு அடக்குமுறை சார்ந்த சமூகத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.நாங்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அதனால் நாங்கள் பெரும்பான்மையினர் என்கிற அதிகார தொனியிலிருந்தே இதுவருவதாக நான் பார்க்கிறேன். இந்த சிறுபான்மையினருக்கான உரிமை, வார்த்தைபதம் என எல்லாவற்றையும் நிர்ணையிக்கக்கூடிய அதிகாரசக்தியாக பெரும்பான்மை மக்கள் பார்க்கின்றனர். எண்ணிக்கை குறைவாக உள்ளா மக்களுக்ககான சமபிரதிநிதித்துவம், உரிமை, வார்த்தைப்பதம் என எல்லாமும் அவசியமே. ஆனால் அது ஆதிக்கசக்தி பெரும்பான்மை முடிவு செய்வதாக இருக்கக்கூடாது. அதில் சிறுபான்மையினராக்கப்பட்ட மக்களின் பங்கும் இருக்கவேண்டும்.

நாம் சிறுபான்மையினரா? என்பது பற்றி queer மக்களுக்குள் விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக queer மக்களுக்கு எதிரான மனநிலை அதிகமாக உள்ள இவ்வுலகில் ஒருவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தும்போது ஒதுக்கப்படுதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையே உள்ளது.

ஆங்கிலத்தில் queer எனும் பதம் diverse gender மற்றும் sexuality spectrum-ஐ அடையாளப்படுத்தப்பயன்பட்டதுபோல் தமிழில் மாற்றுப்பாலின்ம் — பாலீர்ப்பு எனும் வார்த்தைகளை பயன்படுத்திவந்தோம். ஆனால் அது சரியானதல்ல. உலக அளவில் பாலினம் மற்றும் பாலீர்ப்பு cis-heterosexual மக்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நேரம், எதற்குள்ளும் அடக்கமுடியாத பாலினங்கள் — பாலீர்ப்புகளுக்கான பதங்களை பயன்படுத்தும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஒரு சமூகமாக எங்களது பாலின — பாலியல் அடையாளங்களும் வெறுக்கப்படும், விளிம்புநிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையில் நாங்கள் நேர்மறையான மற்றும் பெரும்பான்மையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகளுக்கு எதிரான வார்த்தைகளைத்தேடுகிறொம்.

“பால்புதுமையினர்” எனும் பதத்தை எங்களில் சிலர் சமீபகாலமாக பயன்படுத்துகிறோம். இப்பதம் சிலகாலமாகவே புழக்கத்தில் இருக்கிறது. எங்களைப்பற்றி ஒரு சரியான பதத்தை நாங்கள் கண்டுபிடிக்கும்வரை அல்லது பெரும்பான்மை “cis-heterosexual people” தாங்கள் தான் இயற்கையானவர்கள் எனச்சொல்லிக்கொண்டிருக்கும்வரை நாங்கள் எங்களுக்கான ஒரு நேர்மறையான பதத்தைத்தேடிக்கொண்டே இருக்கிறோம். அடையாள அரசியலில் எங்களுக்கான ஒரு அடையாளப்பதத்தைத்தேடுகிறோம்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் queer மக்களுக்குள் நடைபெறவேண்டும். queer சமுதாயத்திற்காக எதுவுமே செய்யாத தமிழறிஞரோ queerஅரசியல் வல்லுநரோ அல்லாத நெல்சன் சேவியர் போன்ற நபர்கள் queer மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பதத்தை நிராகரிக்க எந்த உரிமையும் இல்லை. இப்படி ஒரு மனநிலை அவரது cis-hetersosexual-male என்கிற ஆதிக்க இடத்திலிருந்து வருவதாகவே நான் பார்க்கிறேன்.

என்னைப்பொறுத்த அளவில் பால்புதுமையினர் என்பது பல்வேற பாலின — பாலீர்ப்பு அடையாளங்களைக்கொண்டிருப்பது. இங்கு binaryகளோ எதுவும் விதிமுறைகளோ கிடையாது. பாலின-பலீர்ப்பு சமத்துவத்துக்கு முன் வழக்கொழிந்துபோல பழமையான பாலின — பாலீர்ப்பு அடையாளங்களைக்கொண்டிருக்கும் cisgender heterosexual மக்களுக்கு எதிரானதாகவும் இந்த வார்த்தையைப்பார்க்கிறேன். உங்களது பாலின — பாலீர்பபு அடையாளங்கள் வழக்கொழிந்துவிடும் போதே நாங்கள் புதுமையானவர்களாகி விடுகிறோம். மனித இனம் தோன்றியதிலிருந்தே வரும் பாலின – பாலீர்ப்பு அடையாளமாக நாங்கள் இருந்துவந்தாலும், நீங்கள் பழமையாகிவிட்ட இடத்திலிருந்தும் நாங்கள் புதுமையானவர்களே.

தொடர்ந்து எங்கள் உரிமை பற்றிப்பேசும்போது, எங்கள் போராட்டத்தைப்பற்று பேசும்போது cis-hetro-centric புரிதலைக்கொண்டு எங்களுடையக்குரலை நிராகரிப்பதையும், சிறுமைப்படுத்துவதையும் தங்களை ஆதரவாளராகக்காட்டும் சிலர் செய்கின்றனர். எங்கள் அரசியல் பற்றி பேசும்போது அதில் பயன்படுத்தப்படும் வார்த்தையை மட்டும் நீங்கள் விவாதம் செய்வது எந்த இடத்தில் சரியாக இருக்கும்? எங்கள் போராட்டங்களையோ, உரிமைகளையோ புரிந்துகொள்ள விருப்பமில்லாமல் உங்களது அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு கருத்துசொல்வதை விட நாங்கள் பேசுவதை எப்போது கேட்பீர்கள்?

Additional reading: Coining queer terms in Tamil