QCC —திரை: “Happy Birthday, Marsha!” குறும்படம் திரையிடல் மற்றும் உரையாடல்

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸால “ஹேப்பி பர்த்டே மார்ஷா” (Happy Birthday, Marsha) குறும்படம் திரையிடல் 19/08/2018-ல் பேக்யார்டில் (Backyard) நடைபெற்றது. குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் திரைப்படங்களைத்திரையிடும் அமைப்பான “திரை” மூலம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் நடந்த ஸ்டோன்வால் (Stonewall) கலவரத்தில் கறுப்பினத்திருநங்கையான மார்ஷா.பே.ஜான்சனின் பங்கையும், அவரது வரலாறு அழிக்கப்பட்டு அவ்விடத்தில் ஓர்பாலீர்ப்பு கொண்ட வெள்ளையின ஆணை வைத்து திரைப்படங்கள், எழித்துக்கள் வருவது விளக்கப்பட்டது. அவ்விளக்கத்தோடு ஸ்டோன்வால் கலவரத்திற்கு முந்தைய மார்ஷாவின் நிமிடங்களைப்பற்றிய கற்பனை கதையாடலில இக்குறும்படம் திரையிடப்பட்டது.

இக்குறும்படத்தின் தொடர்ச்சியாக ஒரு குழு உரையாடலும் நடைபெற்றது. திரைத்துறையில் பால்புதுமையினரின் பங்களிப்பும், அவர்களது அடையாளங்கள் நிராகரிக்கப்படுதல் குறித்த உரையாடலும் நடைபெற்றது. திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் எவ்வாறு பால்புதுமையினரை சித்தரிக்கின்றனர் என்பது குறித்த அதிருப்தியை பங்குகொண்ட பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். சுயமரியாதைப்பேரணிகளில் பத்திரிக்கையாளர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் உரையாடப்பட்டது.

பணியிடங்களிலோ அல்லது மற்ற இடங்கலிலோ பால்புதுமையினர் உரிமைகள் குறித்து யார் குரல் கொடுக்கவேண்டும் என்பதுடன், ஆதரவாளர்களின் பங்கு குறித்தும் பேசப்பட்டது.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒருவரே தொடர்ந்து பலகாலங்களுக்கு பேசிக்கொண்டிருப்பதன் மூலம் மற்றவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போவது பற்றியும், அவ்விதமான வாய்ப்புகளை ஏற்படுத்துவது மற்றும் தனக்கான இடங்களை உருவாக்கிக்கொள்வது குறித்த உரையாடலுடன் நிகழ்வு முடிவுபெற்றது.

ஒவ்வொருவர் மேல் திணிக்கப்படும் அடையாளங்கள், சில சூழ்நிலைகளைக்கையாளும் விதங்கள் குறித்த கேள்விகளையோ, தகவல்களையோ எடுத்துக்கொண்டு நிறைய நேரம் உரையாட இயலவில்லை. அடுத்தடுத்த அமர்வுகளில் இந்த உரையாடல்களை முன்னெடுத்துச்செல்ல குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் முயற்சி செய்யும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கும், இதேபோன்ற ஆதரவை எதிர்பார்க்கிறோம்.