கொமோராவும், ஹோமோபோபியாவும்

கிழக்கு பதிப்பகம் வெளியீடு, லஷ்மி சரவணகுமார் எழுதிய கொமோரா நாவல் பற்றிய குறிப்பு.

சமீபத்தில் பால்புதுமையினரைப்பற்றி தெரிந்துகொள்ள வாசிக்கவேண்டிய புத்தகங்கள் பற்றிய ஒரு முகநூல் உரையாடலில் கொமோரா இடம்பெற்றிருந்தது. உண்மையில் பால்புதுமையினர் குறித்த புரிதல் ஏற்படுத்த இந்நாவல் உதவுகிறதா என்பதைக்குறித்த உரையாடலை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமே தவிர இது கொமோரா நாவல் குறித்த விமர்சனம் கிடையாது.

திரும்பத் திரும்ப சொல்லும் உதாரணம் தான். எண்பதுகளின் இந்திய வணிகத் திரைப்படங்களுக்கென்று ஒரு திரைமொழி இருந்தது. அவற்றிற்கென திடுக்கிடும் திருப்பங்கள் இருந்தன. கதையின் முக்கியப்பாத்திரத்திற்கு மூளையில் கட்டி, இதயத்தில் ஓட்டை என்பன அவற்றில் சில. அதன்பிறகு மருத்துவம் வளர்ச்சியடைந்த நிலையில், இந்த வியாதிகள் ஒரு நல்ல திருப்பத்தை திரைக்கதையில் தராது என்பதை உணர்ந்த இயக்குனர்கள் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை உருவாக்கத்தொடங்கினார்கள். அதில் சமீபத்திய உதாரணங்கள் வேட்டையாடு விளையாடு, மும்பை போலிஸ், தரமணி போன்ற திரைப்படங்கள். இப்படங்களின் எதிர்மறைத் திருப்பங்களுக்கு குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் ஓர்பாலீர்ப்பு முக்கிய காரணமாக இருக்கும். மற்றபடி ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களை சித்தரிப்பது குறித்த எந்த அடிப்படை அறமும் அந்தப் படங்களில் இருக்காது. “ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் இந்த சமுதாயத்தைப் பிடித்திருக்கும் நோய்” என காலம் காலமாக பொதுச்சமூகத்தில் இருக்கும் கருத்தை நெற்றியில் அடித்தாற்போல் சொல்லுவதே நோக்கமாக இருக்கும்.

கொமோரா – லஷ்மி சரவணகுமார்

அப்படியானால் எப்படி திரைப்படங்கள் எடுப்பது என்கிற கேள்வி எழுமாயின் சில உதாரணங்கள் சொல்லமுடியும். ஒன்று முழுக்க முழுக்க பால்புதுமையினர் முதன்மைக் கதாபாத்திரமாகவும், அவர்கள் அரசியல் திரைக்கதையாகவும் இருப்பது. உதாரணம்: ஞான் மேரிகுட்டி, நானு அவனல்ல அவளு போன்ற திரைப்படங்கள். மற்றொன்று ஒரு பால்புதுமையினர் கதாபாத்திரம் திரைப்படத்தில் ஒரு சாதாரண கதாபாத்திரமாக “எதுவும் வித்தியாசமாக செய்யாமல்“ இருப்பது. உதாரணம்: மாயாநதி திரைப்படத்தில் வரும் ராபின் கதாபாத்திரம்.

எதற்காக திரைப்படங்கள் பற்றிய எடுத்துக்காட்டுகள் எனில் தமிழில் உதாரணமாகக்கூற பால்புதுமையினர் அல்லாதோர் எழுதிய இலக்கியங்கள் அதிக அளவில் இல்லை.

இனி கொமோரோவுக்குள்:

கொமோரா நாவல் தொடங்கியது முதல் முடிவது வரை ஆணுக்கும் பெண்ணுக்கும், ஆணுக்கும் ஆணுக்கும் என உடலுறவுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த உறவுகள் நடைபெறும் விதமும், அவற்றிற்கான முன்கதைகளுமே அந்த உறவுகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. நாவலின் பெரும்பாலான உறவுகள் வற்புறுத்தலின் பேரிலோ அல்லது வேறு வழியில்லாமலோ அல்லது ஒருவர் முழு ஈடுபாட்டுடனும் மற்றவருக்கு ஈடுபாடு இல்லாமலும் அல்லது அவரின் ஈடுபாடு குறித்து எந்த கேள்வியும் இல்லாமல் நடைபெறும் இடத்தில் ஆணும் ஆணும் உறவுகொள்ளும் இடமும், பெண்ணும் ஆணும் உறவுகொள்ளும் இடமும் வாசகர்களிடம் எப்படி சேர்க்கப்படுகிறது என்பதில் கொமோராவின் ஹோமோபோபியா ஒளிந்திதிருக்கிறது.

கதிரும் கற்பகமும்:

சிறுவன் கதிருக்கு நடக்கும் அதே வன்முறை விடுதியில் சிறுமி கற்பகத்துக்குமே நடக்கிறது. பொதுவாக குழந்தைகள் மீது நடக்கும் பாலியல்வன்முறை என்பது அவர்கள் பாலினங்களைத் தவிர்த்து குழந்தைகள் மீதான ஒரு வன்முறையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பெண்குழந்தைக்கு நடக்கும் வன்முறையைவிட ஆண்குழந்தைக்கு நடக்கும் வன்முறையை விரிவாகச் சொல்வதன் மூலம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த கொமோரா முயல்கிறதா என விளங்கவில்லை. ஒரு எல்லையில் அது ஒரு ஓர்பால் புணர்ச்சி என்கிற இடத்தை நோக்கி மெதுவாகச்சென்று திரும்புகிறது. ஒருவேளை ஒரு சராசரி வாசகன் நாவலின் இந்த இடமும் இது ஒரு குயர் நாவல் என்று கருதும் அச்சம் இருப்பதால் இவ்விடத்தைப்பேசவேண்டி இருக்கிறது. குழந்தைகள் மீது செய்யப்படும் பாலியல் வன்முறை பெரும்பாலான சமயத்தில் அவர்களின் பாலினம் சார்ந்து வேறுபடுவதில்லை. ஒரு விடுதியில் இருப்பவர் தனது பாலியல் தேவைக்காக செய்யும் ஒரு வன்முறை. அந்த வன்முறையை தங்களை எதிர்க்கும் திராணியற்ற இரு குழந்தைகள் மீது நிகழ்த்துகிறார்கள். கதிரை வன்புணர்வு செய்வதால் முத்துவும், ராகவனும் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களோ அல்லது அவர்கள் கற்பகத்தையும் பாலியல் வன்கொடுமை செய்வதால் ஈர்பாலீர்ப்பு கொண்டவர்களோ அல்ல.

கதிரும் மற்ற பல பெண்களும்:

கதிர் தனது வாழ்க்கையில் பெண்களைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கிறான். அவர்களது விருப்பங்கள், ஒப்புதல் அனைத்தையும் தாண்டி கதிருக்கு அவர்களுடன் உறவுகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே அதிகமாக இருக்கிறது. பழங்குடிப்பெண்ணை வன்புணர முயன்று அது முடியாத வேளையில் அவன் தனக்கான ஒரு சிறிய அளவில் அதிகாரம் செலுத்தமுடிகிற இடத்துக்கு நகரும்போது சந்திக்கும் பெண்களை உறவுக்கு அழைக்கிறான். மற்றவவர்களுக்கு கதிரின் மூலம் தேவை இருக்கிறது. அத்தேவைக்காக அவர்கள் உறவுகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் “கிட்டத்தட்ட ஒப்புதல் இல்லாமல் “ நடைபெறும் இந்த உறவுகளுக்கு வாசகர்களைத் தயார் செய்யும் விதம் அந்த வன்புணர்வை சாதாரணமான ஒன்றாகவும், கிளுகிளுப்பான ஒன்றாகவும் மாற்றுகிறது.

அந்த வன்புணர்வுக்கு முன்னாலான அந்தபெண்களின் உடல் பற்றிய வர்ணனைகளும், வியர்வை வாசனைகளும், அங்கங்கு தெரியும் உடல் பாகங்களும் என கதிரை நியாயப்படுத்த சம்பவங்கள் தூவப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கதிரின் பாவமான முன்கதையும், அப்பாவியான தோற்றமும் கூட அவனை நியாயப்படுத்துகிறது

முனிச்சாமி:

அதே சமயம் கதையில் வரும் ஆண் பெண் அல்லாத புணர்ச்சிகளுக்கு எந்த தெய்வீகத்தன்மையும், கிளுகிளுப்பும் இருக்காது. ஊரே வணங்கும் புதிரான மனிதரான முனிச்சாமியை ஒருவன் புணர்வது மலங்காட்டுக்குள் தான் நடக்கும்.

பரோட்டா தின்னும் முன்னே மலம் கழிக்க செல்லும் ஒரு காட்டுக்குள் மலத்துக்கு இடையே தனக்கான இடத்தை தேடி அமரும்போது பார்க்கும் ஒரு புணர்ச்சியின் மூலமாக நாவலின் முதல் ஹோமோசெக்ஸ் காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சூழ்நிலை காரணமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இல்லாமல் நடைபெறும் ஒரே உறவு முனிச்சாமிக்கும் ஏதோ ஒரு இளைஞனுக்குமான உறவு மட்டுமே. அந்த உறவு ஏன் பீக்காட்டில் நடைபெறவேண்டும்? தனியாக வசிக்கும் சாமியாரின் வீட்டில் சாம்பிராணி எல்லாம் போட்டு சிறப்பாக நடந்திருக்கலாமே? அத்தியாய முடிவில் ஒரு பஞ்ச். அதன் முன் சித்தரித்த அளவுக்கு பயங்கரமான ஆள் எல்லாம் இல்லை அந்த சாமியார். ஊருக்கே அச்சம் தருகிற தோற்றத்துடன் இருந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் நெடுஞ்சாலையின் ஓரத்தில் செக்சுக்கு நிற்கும் ஒரு ஹோமோ. அவ்வளவே!

சுப்புராஜ்:

இரண்டு ஆண்கள் நெருக்கமாக இருந்தாலே அவர்கள் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் என்கிற எண்ணத்தோடு பார்ப்பவர்கள் அதிகம். அதுபோல இந்த பகுதியும் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களைப் பற்றிய சித்தரிப்போ என தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகம்.

சிறையில் இருக்கும் சுப்புராஜின் உடலில் சக்கரைத்தண்ணீர் ஊற்றி அதில் எறும்புகள் கடித்து வீங்கியிருக்கும் குதத்தில் சககைதிகள் புணருவதாக கதை நகர்கிறது. பலகாலமாக சிறையில் இருப்பவர்கள் புதியதாக சேரும் கைதிகளை வன்புணர்வு செய்வது சிறையில் நடைபெறும் ஒன்று. இதற்கும் பாலீர்ப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மறுபடியும் அதிகாரமுள்ளவர்கள் தங்களது தேவைக்காக அதிகாரமில்லாதவர்களை துன்புறுத்துகிற ஒரு இடமிது. வாசகர்கள் இதையும் பாலியல் வன்புணர்வாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கதிரும் முருகனும், முருகனின் பெண்மையும்:

திருமணத்திற்கு முன்னான ஒரு சமயத்தில் கதிர் மேலான காதலை முருகன் வெளிப்படுத்துகிறான். அப்போது தான் முதன்முதலாக முருகனுக்குள் இருக்கும் “பெண்மையை” கதிர் உணர்வதாக வருகிறது.

ஓர்பாலீர்ப்பு பற்றி புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களே!

ஓர் ஆணிடம் காதல்வரும்போது, இன்னொரு ஆணுக்கு பெண்மை வருவதும், ஒரு பெண்ணிடம் காதல் வரும்போது இன்னொரு பெண்ணுக்கு ஆண்மை வருவதும் எல்லாம் நடைபெறாது.

முருகனுக்கு கதிரைப் பிடித்திருக்கிறது. அவனும் வெளிப்படுத்துகிறான். முருகன் கதிர் தன்னைப்புரிந்து கொள்ள வேண்டும் என சக்தி எனும் பெண்ணை திருமணமும் செய்கிறான். அவளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறான். கதிரும் முருகனும் உறவு கொள்வதைப் பார்த்ததும் சக்தி பிரிந்து செல்ல வேண்டும் என முடிவு செய்யும் போது தனக்கு இருவரும் வேண்டும் என முருகன் கூறுகிறான். எனவே முருகன் ஈர்பாலீர்ப்பு கொண்டவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்தாலும் சமூகத்திற்காக வாழவேண்டும் என நினைக்கிற ஒரு ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆணாகவும் இருக்கலாம்.

முருகனுக்கும், கதிருக்குமான உறவுக்கு முன்னால் கதிர் முருகனின் பெண்மையை உணர்ந்துவிடுவதால் அவர்கள் படுக்கையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. ஒரு ஆண், பெண்ணுக்கான உறவில் “ஆண்” பாத்திரத்தை கதிரும், “பெண்” பாத்திரத்தை முருகனும் செய்கிறார்கள்.

அவர்கள் உறவு கொள்ளும் இடமே மொத்த நாவலிலும் ஒரே நல்ல இடம் என்றாலும் அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என்கிற இரண்டு கதாபாத்திரத்தை ஒருமாதிரியாக முறையே கதிருக்கும் முருகனுக்கும் ஒதுக்கி யார் புணர்பவர், யார் புணரப்படுபவர் என்பதைச் சொல்லி விடுவதால் அந்த இடமும் அர்த்தமற்றுப்போகிறது.

மேலும் எதிர்பாலீர்ர்பு கொண்டவர் என நான் புரிந்து கொள்ளும் எழுத்தாளர் ஆண் மற்றும் பெண்ணின் உடலுறவுக்காட்சியை இருவரும் ஆண்கள் என்று மட்டும் மாற்றுவதன் மூலம் ஒரே காட்சியில் தான் ஒரு ஹெட்ரோ செக்சுவல் ஆண் என்பதையும், தான் ஒரு குயர் பிரண்ட்லி என்பதையும் நிறுவ முயற்சித்து பின்னதில் தோல்வியடைகிறார்.

முருகன் மற்றும் கதிரின் அடுத்த உறவு கதிர் ஒரு கொலை செய்து அந்த இறந்த உடலைத் துண்டுதுண்டாக வெட்டி, தலையை தனியாக உருட்டி பின் ரத்த கறை படிந்த உடையை கழற்றி போட்டு நடைபெறுகிறது. சோ ரொமாண்டிக்!

கதிரைப்பற்றிய பல விசயங்கள் புரியாததுபோல அவனது பாலீர்ப்பும் புரியவில்லை. ஆனால் முருகன் ஏதோ ஒரு இடத்தில் அவரது பாலீர்ப்பு காரணமாக தொடர்ந்து கதிரால் பயன்படுத்தப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது.

எதிர்பாலுறவுகள் ஒரு லாட்ஜில் நடக்கும் போது போலீஸ் வரவில்லை. தவறாக எதுவும் நடைபெறவில்லை. மெய்மறந்துபோகும் அளவிலான ஆர்காசங்கள் மட்டுமே கிடைக்கும்போது முருகனும், கதிரும் உறவு கொள்ளும்போது அவன் மனைவி பார்ப்பது மட்டும் ஏன் நடக்கிறது? வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த மட்டும் தான். முருகன் யாரிடமும் காட்டாமல் கதிரிடம் மட்டும் காட்டும் பெண்மை கலந்த அவனது பாலீர்ப்பே கதிரையும், கதையையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.

கொமோரா ஏன் பால்புதுமையினர் ஆதரவு நாவல் இல்லை:

நமது பொதுச்சமூகத்தைப் பொறுத்தவரை ஓர்பாலீப்பு கொண்டவர்கள் எந்நேரமும் குறிகளைக் கையில் பிடித்து கொண்டு அலைபவர்கள் மற்றும் அறுவெறுக்கத்தக்கவர்கள் என்று இருக்கும் நிலையில் இந்நாவலில் இருக்கும் ஆண் ஆண் வன்புணர்வுகளையும் ஓர்பாலீர்ப்பாகவே எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதற்குத்தான அப்போதே சொன்னோம், இவர்களை அங்கீகரித்தால் இப்படி தான் இருப்பார்கள் என வாசகர்கள் எண்ணுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒடுக்கப்பட்ட மக்களை, விளிம்புநிலையில் இருக்கும் மக்களைப்பற்றி ஒரு தவறான பிம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்துவது என்பது அவர்களை மேலும் ஒடுக்குவதற்கே உதவும். அந்த வகையில் கொமோரோ நாவல் எவ்விதத்திலும் பால்புதுமையினருக்கு ஆதரவான அவர்களைப்பற்றிய புரிதலை ஏற்படுத்துகிற நாவல் எல்லாம் இல்லை. இச்சாதாரிப் பாம்பைப்போல காத்திருந்து பழிவாங்கும் ஒருவனின் கதையே கொமோரா.

எழுத்தாளர் முன்னுரையில் குறுப்பிட்டதுபோல இது வெறுப்பின் சுவையை பேசுகிற நாவல் என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வெறுப்போடு அணுகி இருக்கும் ஒரு நாவலின் வழியே அவர்களின் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளவேண்டாம்.

பால்புதுமையினர் எனும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் அவர்களின் கதையை எழுதத் தொடங்கி இருக்கிறது, சுயசரிதைகளில் தொடங்கி அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ப்ராசஸ் மிக மெதுவாக நடந்தாலும் கூட அந்த கதைகளே உண்மையானதாகவும், புரிதலை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.