நம் அண்டை மாநிலமான கேரளத்தின் முன்னேற்றங்களைப் பார்த்துத் தமிழ்ப் பால்புதுமையினர்ச் சமூகம்

– மொழியாக்கம் – சுர்யா

காப்பகங்களிலிருந்து - From the archives

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர் சசி தரூர் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 -ஐத் (IPC 377; இபீகோ 377) தண்டனைக்குரிய குற்றப்பிரிவிலிருந்து நீக்குமாறு கேரள முதல்வரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சசி தரூர், பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுப்பதற்கு முன்பாகவே கேரளச் சட்டச் செயலாளர் பி ஜி ஹரிந்திரநாத் சட்டப்பிரிவு 377-ல் மாற்றம் செய்வது பற்றிய சட்டமுன்வரைவு கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறி இருந்தார்.

இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் முதல்வர்களில் பினராயி விஜயன் தான் பால் புதுமையினர் (Queer) எனும் சொல்லைத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் பயன்படுத்திய ஒரே முதல்வர் எனும்போது இதில் வியப்படைய எதுவுமே இல்லை. ஆகஸ்டு மாதம் 2016-ல் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு பதிலளிக்கும் ஓர் அறிக்கையில் பால்புதுமையினரின் உரிமைகளைப்பற்றி (LGBTQ rights) பினராயி விஜயன் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்றதோர் அறிக்கையை டெல்லி அல்லது மும்பையைச் சேர்ந்த ஒரு மக்களவை உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு திரைப் பிரபலமோ வெளியிட்டிருந்தால் இந்நேரம் தேசிய ஊடகங்கள் அதனைக் கொண்டாடியிருக்கும். தேசிய ஊடகங்களைப் பொறுத்தவரை டெல்லியையும் மும்பையையும் சார்ந்த பால்புதுமையினர் மட்டுமே ஏற்றுக்கொள்ளபட்டவர்கள். பால்புதுமையினர் மட்டுமல்லாது மற்ற அரசியல் சார்ந்த சம்பவங்களிலும் இதுவே நிதர்சனம். ஆனால் கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திலும் ஊடகங்களின் இருப்பைப் பொருட்படுத்துவதேயில்லை. எனது மாநிலமான தமிழ்நாட்டை விட கேரள மாநிலம் எவ்வித இரசிகர்கள் கூட்டமுமின்றி மாற்றத்தை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் பொதுப்பட்டியலின் (concurrent list) கீழ் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் 377-ல் திருத்தம் கொண்டுவரவேண்டும் என பல மாநில அரசுகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடும் ஒன்று. ஒவ்வொரு சுயமரியாதைப் பேரணியின் ஊடக வெளியீட்டிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்படும். மேலும் பால்புதுமையினருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தால் 2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பல போராட்டங்களும் நடைபெற்றன.

1967-ல் முதலமைச்சர் அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய திமுக அரசு இந்துத்திருமணச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தின் காரணமாக சுயமரியாதைத் திருமணங்கள் (self respect marriages) சட்டப்பூர்வமாக்கப்பட்டது. எனவே, மேலோட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு சட்டத்திருத்தத்திற்கான வாய்ப்பு இருந்ததாக நாங்கள் நம்பியிருந்தோம்.

அதே திராவிடக்கட்சிகள் தான் இப்போதும் ஆட்சியில் இருக்கின்றன. ஆனால், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இருப்பதிலிருந்து இன்னும் பல விடயங்களில், உண்மையில் எழுபதுகளில் இருந்த நிலையுடன் ஒப்பிடவே முடியாத அளவிற்குத் தான் திராவிடக்கட்சிகளின் நிலைமை இருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில் தமிழ்நாடு அரசு அண்மைக்காலத்தில் சல்லிக்கட்டை நடத்துவதற்காக விலங்குவதைத் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் மட்டுமே முனைப்பு காட்டியது.

அதே அதிமுக அரசு தான் திமுக ஆட்சியால் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்திற்காக திருநங்கைகள் நலவாரியத்தைப் புறக்கணிப்பு செய்தது. எனவே அவ்வரசிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது நோக்கற்ற ஒன்று.

திருநங்கைகள் நலவாரியம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் முயற்சியால் ஏப்ரல் 2008-ல் தொடங்கப்பட்டது.

2009-ம் ஆண்டில் பால்புதுமையினர் சென்னையின் முதல் சுயமரியாதைப் பேரணியை (Pride Parade) நடத்தத் திட்டமிட்டபோது அதற்கு அனுமதி வழங்க காவல்துறை சுணக்கம் காட்டியது. இறுதியில் திருநங்கைகள் நலவாரியம் அமைக்க உதவிய கனிமொழிக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படுகிறது என காவல் துறையிடம் தெரிவித்தே அனுமதி பெறப்பட்டது.

அந்தப் பேரணியில் கனிமொழிக்கு நன்றி தெரிவித்து பதாகைகள் கூட சிறிது நேரம் ஏந்திவந்தனர்.

ஒருவேளை திமுக தற்போது ஆட்சியில் இருந்தால் கூட அவர்கள் பால்புதுமையினரின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவார்களா என்பது ஐயமே.

எப்போதும் நியாயத்துடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளும் இணையத்திலும், சமூகவலைதளங்களிலும் செயல்படும் திமுகவினர் கூட பால்புதுமையினரின் உரிமைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். பால்புதுமையினர் உரிமைகள் பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை.

ஆனாலும், திமுகவிற்கு நியாயமாக நடந்து கொள்வதற்காக வேண்டுமானால் ஒன்றைக்கூறலாம். 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அதன் பிறகு 2011 மற்றும் 2016ம் ஆண்டி தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. எனவே பால்புதுமையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாததன் விமர்சனங்கள் அதிமுகவையே சாரும்.

மேலும், அதிமுக அரசு குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ஆகஸ்டு 2014-ல் சட்டப்பிரிவு 377-இன் கீழ் இருக்கும் குற்றங்களையும் அதில் சேர்த்தது. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான திமுக அதுகுறித்து எந்தக்கருத்தும் தெரிவிக்காமல் அமைதிகாத்து வந்தது.

திமுக மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் திருநர்களுக்கானச் சட்டமுன்வரைவு பாராட்டுக்குரியதே. இந்த இடத்தில் தான் திருநர்களின் அரசியலை மாற்றுப்பாலீர்ப்பு கொண்ட சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

திமுக தலைவர் தன்னுடைய இடதுசாரி கொள்கைகளை ஒரு போதும் மறுத்தது கிடையாது. பால்புதுமையினர்ச் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்குக் கண்டிப்பாக திமுகவிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்ற அளவிலேயே நாங்கள் இருந்து வருகிறோம்.

சட்டப்பிரிவு 377 மாற்றுப்பாலீர்ப்பை மட்டும் குற்றமாக்கவில்லை. அந்தச் சட்டம் எந்தத் தனி நபர்களுக்கும் எதிரானது இல்லை. “இயற்கைக்கு மாறான உறவு” ( “…carnal intercourse against the order of nature…”) என்பதையே அது குறிக்கிறது. அந்த உறவில் ஈடுபடும் நபர்களின் பால் பற்றி எந்தக் குறிப்பும் அதில் இல்லை.

அந்தப் பிரிவில் திருத்தம் கொண்டுவரவேண்டுமென்பது, எந்தப் பால்வேறுபாடும் இல்லாமல் வயது வந்த இரண்டு நபர்கள் மனம் ஒத்து செய்யும் எந்தப் பாலியல் நடவடிக்கையும் குற்றமற்றதாகக் கருதவேண்டும் என்பதே ஆகும். பிரிவு 377இல் திருத்தம் கொண்டு வருதல் என்பது பால்புதுமையினர்ச் சமூகத்தின் உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு குறியீட்டு முயற்சியே ஆகும்.

காங்கிரசும் இன்னபிற இடதுசாரி கட்சிகளும் பிரிவு 377ஐக் குற்றமற்றதாக்குவதற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. மக்களவையில் முனைவர் சசி தரூர், இந்தியாவில் தற்பாலீர்ப்பைக் குற்றமற்றதாக்கும் தனிநபர் சட்ட முன்வரைவை இருமுறை முன்மொழிந்தார். ஆனால், இரண்டு முறையுமே அம்முயற்சி தோல்வியுற்றது.

ஆனால், அப்படியே முரணாக, காங்கிரஸ் ஆளும் ஆறு மாநிலங்களிலும் (புதுச்சேரியையும், பீகாரையும் சேர்த்து எட்டு) பிரிவு 377இல் திருத்தம் செய்வதற்கான எந்த ஒரு முன்னெடுப்பும் இதுவரை இல்லை.

கேரளாவிலுள்ள இடதுசாரி அரசு மட்டுமே இப்போது கேரள மாநிலத்தில் தற்பாலீர்ப்பைக் குற்றமற்றதாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாநில அளவில் அவர்கள் சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தேவை. குடியரசுத்தலைவர் ஒப்புதல் தருவது சிரமமே. ஏனெனில், அவர் மத்தியில் ஆளும் அரசின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் மாநில அளவில் பிரிவு 377ஐத் திருத்தம் செய்யக் கோருவது, ஓர் அரசியல் கோரிக்கை என்பதை விடவும் ஒரு சடங்காகவே தோன்றுகிறது.

பால்புதுமையினர் இயக்கம்(?) பெரிய அளவில் அரசுசாரா அமைப்புகள் (NGOs) நிறைந்ததாக இருக்கிறது. இதுவே பால்புதுமையினர்ச் சமூகத்திற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும் பல இக்கட்டான குரல்களை ஓரங்கட்டி விடுகிறது. எனவே, இந்த இயக்கம் இதனை அரசியல் ரீதியாக முன்னிறுத்திக் கொள்ள இன்னும் பல தூரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும், திராவிட அரசியலின் சுயமரியாதைக் கொள்கையோடும் தன்னை இசைவு செய்துகொள்ள வேண்டும்.

அதுவரை செய்ய முடிந்தது எல்லாம், பக்கத்து வீட்டில் நடக்கும் முன்னேற்றத்தை ஆர்வத்தோடு பார்த்து பொறாமைப்பட்டுக் கொள்வதேயன்றி வேறில்லை.


Originally published at medium.com by Surya on July 3, 2017.

மூலக்கட்டுரை : http://www.thenewsminute.com/article/kerala-marches-forward-lgbtq-community-tamil-nadu-can-only-envy-progress-next-door-59448

ஆசிரியர் : moulee

உரைத்திருத்த உதவி: கிரீஷ்