தனுஜா – புத்தக விமர்சனம்

“ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. பொது அறங்களால், பொதுநீதிகளால், பொதுக் கலாச்சாரங்களால், பொது இலக்கியங்களால், பொதுத்தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுவதுமே வஞ்சிக்கப்பட்டவர்களான எங்களது பயணம் புதிர்வட்டப்பாதை. இந்தப் புதிரை இதுவரை யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள்கூட அவிழ்த்ததில்லை”தனுஜா, ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

பொதுவாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் வரலாறு எழுதப்படாமலே போயிருக்கும். அல்லது வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கும். மற்றவர்கள் எழுதும்போது தங்களின் புரிதல் அடிப்படையிலேயே அந்தக் கதைகளை எழுதி விடுகின்றனர். இறுதியில் உண்மை வரலாற்றை விட பரிதாபத்தை இறைஞ்சி நிற்கும் ஒரு ஆவணமே வாசிப்பவர்களுக்கு கிடைக்கும்.  அதே நிலமை தான் திருநர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இருந்து வந்திருக்கிறது. 2007-ல் லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் வித்யா’ மற்றும் 2011-ல் ரேவதி எழுதிய ‘வெள்ளைமொழி’ ஆகிய இரண்டு தன்வரலாற்று புத்தகங்களும் அந்த வழமையை உடைத்தன. அதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து தனுஜாவின் தன் வரலாற்றுப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் இலங்கையில் பிறந்தது முதல் தனது இருபத்தொன்பது வயது வரைக்குமான வாழ்க்கையை தன் வரலாறாக தனுஜா எழுதி இருக்கிறார். எழுத்தாளர், நடிகர் ஷோபாசக்தி பதிப்பாசிரியராக இருக்கும் இந்த புத்தகத்தை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 

நிறைய திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த சோகமான, சந்தோஷமான சம்பவங்களை நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாசித்தும், பார்த்தும் அறிந்திருக்கிறேன். தங்களது பாலினத்தை உணர்வது, பாலினம் காரணமாக வீடுகளில் வன்முறைக்குள்ளாவது, பள்ளி கல்லூரியில் கிண்டலுக்கு ஆளாவது, வேலை கிடைக்காத சூழ்நிலைக்கு ஆளாவது, பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது, அறுவை சிகிச்சைகள் செய்வதில் சிரமங்கள் அனுபவிப்பது,  காதலர்களால் ஏமாற்றப்படுவது என சில விஷயங்கள் எல்லாருக்கும் பொதுவானதாக நடந்திருக்கும். தனுஜாவின் புத்தகத்தில் சொல்லி இருப்பதைப் போல மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்திருக்கும். அவை அனைத்தையுமே தனக்கு வருகின்ற சரளமான மொழியில் தனுஜா எழுதி இருக்கிறார்.

இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து பின்னர் ஜெர்மனிக்கு சென்று என தனது இப்போது வரைக்குமான வாழ்க்கையை இந்த புத்தகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தனுஜா சொல்லிக் கொண்டே செல்கிறார். பால்புதுமையினர் சமுதாயம் பற்றியோ குறிப்பாக திருநங்கைகள் பற்றிய எழுத்துக்களில் “நாங்களும் மனிதர்கள் தானே” “எங்களை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?” “நாங்களும் உங்களைப் போல கவுரமாக வாழமுடியாதா?” என்கிற தொனி கொஞ்ச காலத்துக்கு முன்பு வரைக்கும் இருந்ததுண்டு. அதே தொனி தான் இந்த புத்தகத்திலும் இருக்கும் என்று பெரும்பான்மை மக்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தனக்கு நடந்த சம்பவங்களைச் சொல்லும் தனுஜா, தான் செய்த, அதே சமயம் பொதுச் சமூகத்தால் தவறென புரிந்துகொள்ள கூடிய வாய்ப்பிருக்கிற விஷயங்களையும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லுகிறார். தன்னை நியாயப்படுத்த முயலவில்லை. தன் கதையை வெளிப்படையாகச் சொல்லுவதன் மூலமாக பொதுச்சமூகம் தன்னைக் குறித்து என்ன நினைத்தாலும் கவலையில்லை என்கிற அவரது கதை சொல்லலே இந்த புத்தகத்தைத் தனித்துக் காட்டுகிறது.

அது மட்டுமல்லாது இதுவரை பெருமளவில் பேசப்படாத பல விஷயங்களையும் இந்த தன் வரலாற்றுப் புத்தகம் பேசுகிறது. பாலீர்ப்பைப் பற்றியோ பாலினத்தைப் பற்றியோ எந்த உரையாடலும் இல்லாத சமூகத்தில் வளரும் ஒவ்வொரு திருநரும், ஒருபாலீர்ப்பு கொண்டவர்களும் பாலீர்ப்பு/பாலினம் குறித்த குழப்பமான ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்திருப்பர். தங்களுக்கு சிறுவயதில்  நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் காரணமாக நாம் இப்படி ஆகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருப்பர். தனது தொடர்ந்த தேடல், நண்பர்களின் உதவி காரணமாக தனது பாலினத்தைப் புரிந்துகொண்டது பற்றி பேசுவதோடு இவை அனைத்தையும் தனுஜா பேசுகிறார். அவர்களோடு முப்பத்தைந்து-நாற்பது வயதைக் கடந்து தங்கள் பாலினத்தை உணர்பவர்கள் பற்றியும், திருநங்கைகளின் பாலீர்ப்பு மற்றும் ஒருபாலீர்ப்பு கொண்ட திருநங்கைகள் பற்றிய தகவல்களையும் தனுஜா தருகிறார்.

சொந்த வீடுகளில் இருந்து துரத்தப்படும் திருநங்கைகள் ஏதாவது ஒரு ஜமாத்தில் சேர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை தான் தெற்காசியச் சூழலில் இருக்கிறது. அதே அமைப்பைத் தான் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சிங்கப்பூர், மலேசிய, இலங்கை திருநங்கைகள் பின்பற்றுவதாக தனுஜா இப்புத்தகத்தில் சொல்கிறார். குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திருநங்கைகளின் ஒரே ஆதரவாக ஜமாத் தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் ஜமாத் மீது பல திருநங்கைகளுக்கு குறைகள் இருக்கின்றன. ஜமாத் முறையை ஆதரிக்காத சிலரைத் தவிர மற்ற யாரும் விமர்சனங்களை முன்வைப்பதில்லை. ஆனால் தனுஜா தன் வாழ்க்கை வரலாற்றில் ஜமாத் குடும்பங்கள் செய்யும் உழைப்புச்சுரண்டல்களைப் பேசுவதோடு பாலியல் தொழில் செய்ய நிர்பந்திப்பதைப் பற்றியும் பேசுகிறார். தங்கள் பேச்சைக் கேட்காதவர்களின் பாலினமே கேள்விக்குள்ளாக்கப்படுவதை பற்றியும் எழுதி இருக்கிறார்.

யாரேனும் பணம் கொடுக்க மறுத்தால், அவர் ஜமாத்தில் இருந்து நீக்கப்படுவார். ஜமாத்தில் இல்லாத திருநங்கை, பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கோ திருநங்கைகளின் ஒன்று கூடல்களுக்கோ செல்ல முடியாது. ஜமாத் என்ற பெயரில், ஒருசில மூத்த திருநங்கைகளின் சர்வாதிகாரம் தான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது – தனுஜா

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகம் என்றாலும் பொதுவான சம்பவங்கள் குறித்து தனுஜா தனக்கிருக்கும் கருத்துக்களை முடியும் இடங்கள் எல்லாம் எடுத்து வைக்கிறார். கூவாகம் திருவிழாவுக்கு செல்லும்போது நடந்த அனுபவங்களைப் பற்றி பேசும்போது அங்கு நடக்கும் அழகி போட்டிகள் பற்றி கேள்வி எழுப்புகிறார். நன்றாக உடையணிந்து கொள்ளுவதில் இருக்கும் ஆர்வம், தாலி, திருமணம் போன்றவற்றின் மீதான ஈர்ப்பு, காதலர்கள், அவர்களுடன் இருந்த உறவு, நம்பிக்கைகள் சிதைந்து போன தருணங்கள் என எல்லாவற்றையும்  குழப்பமே இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த புத்தகத்தில் நான் ரசித்தது, தனுஜாவின் எழுத்துநடை. சோகமான அல்லது அதிர்ச்சியான எதையாவது பற்றி பேசிவிட்டு அடுத்தது கிண்டலாக எதையாவதுச் சொல்லி முடிக்கிறார். 

பால்புதுமையினர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும்போதோ அல்லது தொடர்கள் பார்க்கும்போதோ அதில் செக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியச்சூழலில் அவை சென்சார் செய்யப்பட்டே தான் எழுதவோ காட்சிப்படுத்தவோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் தனுஜாவின் புத்தகத்தில் நிறைய பாலியல் நிகழ்வுகள் இருக்கின்றன. அவை வெளிப்படையாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அதையும் ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.

பாலினம் அல்லது பாலீர்ப்பு காரணமாக பொதுச் சமூகத்தின் பாலியல் வன்முறைக்கும், வன்புணர்வுகளுக்கும் ஆளாகும் வாய்ப்பு பால்புதுமையினருக்கு அதிகம். அதைப்பற்றியும், குடும்பப்பாசம், பண்பாடு என்று சொல்லிக்கொண்டே குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றியும் இப்புத்தகத்தில் வாசிக்க முடிகிறது.

அறுபதுகளில் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோமதி’, தொண்ணூறுகளில் சு. சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ போன்ற எதிர்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் எழுதிய புத்தகங்கள் மட்டுமே இருந்த இடத்தில் லிவிங் ஸ்மைல் வித்யாவும், ரேவதியும் தங்கள் கதைகளை எழுதினர். இப்போது சூழல் கொஞ்சம் மாறிவிட்டது. சட்டங்களும் மாறி இருக்கின்றன. நிறைய உரையாடல்கள் எல்லா தரப்பிலிருந்தும் வரத் தொடங்கி இருக்கின்றன. இந்த சமயத்தில் திருநங்கைகளின் தன்வரலாற்றுக் கதை சொல்லும் பாணியை அடுத்த கட்டத்துக்கு தனுஜா நகர்த்தி இருக்கிறார்.

பால்புதுமையினர் தங்கள் கதைகளை எழுதும்போது பொதுச் சமூகத்துக்கு அவர்கள் மேல் புரிதல் ஏற்படும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அந்த கதைகள் பல பால்புதுமையினருக்கு தைரியத்தைக் கொடுக்கும். தங்களது வரலாறும் ஆவணப்படுத்தத் தகுதியானவையே என்கிற தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மேலும் பல புத்தகங்கள் உருவாகக் காரணமாக இருக்கும். அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தனுஜாவின் தன்வரலாற்றுப் புத்தகம் புத்தகம் நிச்சயமாகக் கொடுக்கிறது.

~*~*~