பெற்றோர் கொடுத்த ஒருமுகமூடியும், நானாக அணிந்த இரண்டும்

“அவுட்காஸ்ட் போலாரி” எனும் தொகுப்பிலிருந்து சில பகுதிகள்

இந்தப் பகுதி சென்னை குயர் இலக்கியவிழா 2018-ல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கப்பட்டது.

ஒன்று 

இளமைப்பிராயம் தான் இதுவரையான என் பயணத்தில் கலவரமானது. அமைதியில்லாதது. என்னுடைய நம்பிக்கையின் சிறு உலகை குலைத்து எதன் மேலும் நம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கைக்கு என்னைத் தள்ளும்படியான பல பருவ வெளிப்பாடுகள் அதில் இருந்தன. நான் கடவுளுக்கு பயந்த, தேசப்பற்றுள்ள பையனாகவே இருந்தேன். ஆனால், இந்த வெளிப்பாடுகள் என்னுடைய இருத்தலுக்கான ஒவ்வொரு காரணத்தையும் கேள்விக்குள்ளாக்கின. அவற்றைப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் நான் நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். 

குழந்தைப் பருவத்தில் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதற்கு முன்னரே, எனக்கு ஆண் உடல்களின் மீதிருக்கும் ஈர்ப்பை புரிந்து கொண்டேன். கட்டுமஸ்தான தென்னிந்திய ஆண்கள் என் பதின்பருவத்தை ஆக்கிரமத்திருந்தார்கள். உடல் முழுதும் செழிப்பாய் சுழன்றிருந்த முடிக்கற்றைகள், உருண்டிருந்த சதைகள், வேர்வை படிந்திருந்த அடர்ந்த தோல்… இவை என் கவனத்தை நிச்சயமாக ஈர்த்தன. இது எனக்கு பிரச்சினையாகவும் இருந்தது, ஏனென்றால், என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் பெண்கள் பற்றியும், செக்ஸ் படங்கள் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், என் கவனம் ஒரேயடியாக, ஆண்கள் மீதே இருந்தது. நான் மட்டும் தான் இப்படி என நினைத்தேன், ஆண்கள் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு குறையுள்ள மனிதன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதாகி இருந்ததது. அப்போதிருந்து மூன்று வருடங்கள் கழித்து ‘ஹோமோசெக்ஸுவல்’ (homosexual) என்ற வார்த்தையையும், ஆறு வருடங்கள் கழித்து கேய் (gay) என்ற வார்த்தையையும் தெரிந்து கொண்டேன். 

அது எனக்கொரு கடினமான போராட்டமாக இருந்தது. யாரிடம் சொல்வது இதை? இதைப் பற்றி எல்லாம் நான் யாரிடம் பேசுவது? இந்த எண்ணங்களை நான் என் வீட்டில் பேசினால், என்னையும், நான் அவர்களை சார்ந்து இருப்பதையும் கைவிட்டுவிடுவார்களா? இரண்டு மூன்று வகுப்புத் தோழர்களைத் தவிர, வேறு யாரிடமும் பேசாத ஒரு இண்ட்ரோவேர்ட்டாக நான் ஆனேன். 

பருவம் அடைவதற்கு முன்பே, நான் பாலுறவை அடைந்திருந்தேன் – குழந்தைப் பாலியல் வன்கொடுமை எனும் குரூரமான வடிவத்தில். அது உண்டாக்கிய அதிர்ச்சி, பிறர் மீது நம்பிக்கை வைக்க முடியாதபடியும், மற்றவர்களோடு தெளிவாக பேச முடியாதபடியும் என்னை குலைத்தது. அந்த வன்முறையில், என் ஒரு காதில் நான் கேட்கும் திறனை இழந்தேன், மீதமிருக்கும் வருடங்களில் அரைச் செவிடாகவே நான் வாழ வேண்டும். அதைப் பற்றிய விவரங்களை நான் சொல்லப் போவதில்லை. அது இன்னமும் என்னை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. இதைப் பற்றி பேச வேண்டும் என எல்லோரும் சொல்லும் போது எனக்கு அது அசௌகரியத்தை தான் தருகிறது, மேலும், எல்லோராலும் தங்களுக்கு நேர்ந்த வன்முறையை பொது வெளியில் பேசிவிட முடியாது. அந்த வன்முறையை நிகழ்த்தியவரின் மிரட்டலால், நான் மௌனமாகவே இருந்தேன், என்னை பிறர் பார்க்க முடியாதவாறு, நிழல்களில் தஞ்சமடைந்தேன். 


இரண்டு 

நான் இந்த அதிர்ச்சியை தனியே சமாளித்துக் கொண்டிருக்கும் போதே, இதோடு கூட சேர்க்க, அப்பாவும் அம்மாவும் வேறொன்றை தயார் செய்து கொண்டிருந்தார்கள். என் அக்கா விநோதமாக நடந்து கொள்வதை நான் கவனித்தேன். அக்கா நன்றாக படிப்பாள் என்றாலும், மார்க் குறைந்ததற்கு எல்லாம் வருத்தப்படக் கூடிய ஆளில்லை. சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவள் திடீரென அழத் தொடங்குவாள், சத்தமில்லாமல் அழுவாள். பள்ளிக்கூடத்தில் யாரையோ காதலிக்கிறாள் போல, அல்லது வேறெதோ பிரச்சினையை மறைக்கிறாள் என்றே நினைத்தேன். அம்மாவிடம் இதைப் பற்றி பேசினேன். 

“அம்மா.. அக்காவுக்கு ஏதோ பிரச்சின போல..”

“ஆமா..”

“நீங்க எதாவது சொன்னீங்களா? அப்பா எதாவது சொன்னரா… இல்ல, ஸ்கூல்ல பிரச்சினையா?”

“நீயும் இப்போ ஒரு விஷயத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும், நம்ம பேசணும்” என்று சோபாவை கை காண்பித்து உட்கார சொன்னார்.

அதற்கு முன்னர் செய்த தப்பெல்லாம் கண் முன் வந்து போனதால் எனக்கு பயமாக இருந்தது, எந்த பிரச்சினையை பற்றி பேச போகிறாரோ என யூகிக்க முயன்றேன். ஒரு பெருமூச்சுக்கு பிறகு அம்மா பேசத் தொடங்கினார். 

“நீ எப்பவுமே நம்ம என்ன சாதின்னு கேட்டுட்டே இருப்பல்ல”

“ஆமா.. நெறைய கலப்பு திருமணம் நடந்ததால, நம்ம இந்த சாதி தான்னு ஒண்ண சொல்ல முடியாதுன்னு சொன்னீங்க இல்ல”

“ஆனா, நமக்கும் சாதின்னு ஒண்ணு இருக்கு… சில லவ் மேரேஜ் நடந்ததால, அதுல பெரிசா எந்த மாற்றமும் வரல..” எனும் போது அவர் குரல் முன்பை போல சத்தமாக இருக்கவில்லை. 

“அப்போ.. நம்ம என்ன சாதி? அதுக்கு எதாவது பேர் இருக்கா?”

“ஆமா… ஆதி திராவிடர்” என மெதுவாக சொன்னார். 

“அதாவது….” என்றேன் சற்று அதிர்ச்சியாக. 

“ஆமா, நம்ம தலித். பட்டியலின மக்கள்”

“ஓ” 

நான் இதை இப்படி எடுத்துக் கொள்வேன் என அம்மா எதிர்பார்க்கவில்லை. ஆனால், என் மனதில் கடந்த காலத்தில் பதில் சொல்லப்படாத பல கேள்விகளுக்கு தானாக பதில்கள் கிடைத்தன. ஏன் என்னுடைய தாய் கிராமம் அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது, ஏன் அம்மா ஒவ்வொரு வருடமும் நடக்கும் விழாக்களைப் பார்க்க என்னை கிராமத்திற்கு அழைத்துப் போவதில்லை, ஏன் அம்மாவும் அப்பாவும் என்னுடைய நண்பர்களின் அம்மா அப்பாக்களை போல பெரிய நிலங்களுடன் வரவில்லை, ஏன் கடந்த காலத்தில் அவர்கள் அவ்வளவு ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. 

“நல்லா தான இருக்க”

“நல்லா தான்மா இருக்கேன்” 

அதற்குப் பிறகு, நான் அதே ஆளாக இல்லை. எந்த மவசைகளையும், அவமானங்களையும், வன்முறைகளையும், வரப் போகிற அத்தனையையும் எதிர்த்து போராட நான் ஒரு வலிமையான நபராக எழ வேண்டும். எனக்கு போதுமான வலு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அது எனக்கு கவலையாக இருந்தது, ஆனால் எதுவும் என்னை கலங்கச் செய்யவில்லை.

“அப்போ, ஒருவேள , யாராவது கேட்டா, நான் இந்த சாதி தான்னு சொல்லணுமா?”

“இல்லல்ல.. கண்டிப்பா சொல்லக் கூடாது” 

அம்மா பேசிக் கொண்டே போவதை நான் கேட்டுக் கொண்டிருந்த போது, எனக்குள் ஒன்று வளர்ந்தது, என் தோலில் இருந்து துளிர்த்து .. என் மார் முழுக்க, என் முகம் முழுக்க அது விரிந்தது.. எனக்கு மேலே நான் ஒரு படிமத்தை போட்டிருப்பதாக உணர்ந்தேன், என் முகத்தில் ஒரு முகமூடி. 

“அப்செட்டா இருக்கியா?”

“இல்ல..நெஜமாவே அப்செட்டா இல்ல – எனக்கு நெறைய கேள்விக்கு பதில் கெடச்ச மாதிரி தான் இருக்கு .. இதுக்கு தான் அக்கா அப்செட்டா இருக்காளா?”

“ஆமா.. அவளால ஏத்துக்க முடியல.. இது ரொம்ப அநியாயம்னு சொல்றா”

”எது அநியாயம்? நம்ம.. இப்படி.. இந்த சாதிங்குறதா?”

“ஆமா. நாங்க அவள ஏமாத்திட்டதா நெனைக்குறா.. இந்த வயசுல சொல்றது எங்க தப்பு தான்னு தெரியும், ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாதுன்னு தான் அத ரகசியமா வெச்சிருந்தோம்” என்றவர், ஒரு இடைவெளி விட்டு “அவ சரியாயிடுவால்ல?” எனக் கேட்டார். 

நான் அக்காவிடம் பேசப் போனேன், என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன். 

“இங்க பாரு.. அம்மா என்கிட்ட இந்த சாதி விஷயம் பத்தி பேசுனாங்க.. ஏன் உனக்கு இது இவ்ளோ பிரச்சினையா இருக்கு?”

“இது சரியில்ல.. இது உண்மையா இருக்காது..”

“ஏன் அப்படி நெனைக்குற?”

“உன்ன பாரு, அப்பா, அம்மா, நம்ம ரிலேட்டிவ்ஸ் – எல்லோரும் கோதும கலர்ல தான இருக்கோம். பாட்டி நல்லா கலரா தான இருக்காங்க. நம்ம எப்படி ஆதி திராவிடர்களா இருக்க முடியும்?”

“உனக்கு வெங்கி தெரியும்ல.. என் கிளாஸ்மேட் வெங்கடேஷ் – அவனும் தான் பிராமிண்-னு சொல்லிக்குறான் – ஆனா அவன் அப்பா பக்கத்துல ஒரு எரும நின்னா, எரும தான் கலரா தெரியும், அவர் அவ்ளோ கருப்பா இருப்பாரு. தோலோட கலருக்கும் சாதிக்கும் எல்லாம் சம்பந்தம் இல்ல.. இரு.. நீ தலித்னா கெட்டவங்கன்னு நெனச்சியா?”

“ஒரு சைடு அப்டி தான் நெனைச்சேன்.. ஆனா”

“நீ அப்படி நெனைக்குறத மாத்திக்கணும், தெரியாத எடத்துல கஷ்டப்படுற ஆட்களுக்கு எல்லாம் சமமா தான் நம்ம இருக்கோம்னு உனக்கு இப்போ தெரிஞ்சிருக்கு இல்ல – நம்ம கிட்ட என்ன இருக்கோ, அத நெனச்சு சந்தோஷப்படு”

“சரி.. ஆனாலும்.. எது நம்ம குடும்பத்தோட தொடக்கம், வேர்னு நான் கண்டுபிடிப்பேன்” 

அவளுடைய நண்பர்கள் எல்லோரும் மேட்டுகுடி வட்டத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு சாதி மற்றும் வர்க்க பின்புலன்களோடு வந்த அந்த பெண்கள், எப்போதும் தலித் மக்களை பற்றி தவறாக பேசுவது தான் அவள் அப்படி அதிர்ச்சியடைந்ததற்கு காரணம். 


மூன்று 

அக்கா சொன்னதை கேட்டதும், நான் என்ன தனிமைப்படுத்திக் கொண்டேன். ஏற்கனவே நான் ஏகப்பட்ட விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொண்டு இருந்தேன். ஆண்கள் மீதான பாலியல் ஈர்ப்பு, பாலியல் கொடுமையின் வன்முறை மற்றும் நானொரு தலித். இதை எல்லாம் பற்றி யோசிப்பது மூச்சடைப்பதாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் சாதியைப் பற்றி பேசியிருக்கும் போது, நான் மற்ற விஷயத்தை பற்றி பேசினால்,அது வேறொரு பிரச்சினையை உண்டாக்கும். எனக்குள்ளேயே அதை புதைத்துக் கொள்ள முடிவு செய்தேன். என் பெற்றோர்களுக்காக நான் மேலும் ஒரு அலங்காரத்தை அணிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது – என்னுடைய ரகசியம், என்னுடைய நோக்குநிலை மற்றும் எனக்கு நேர்ந்த பாலியல் வன்முறை. அது எனக்குள் கொதித்து அடங்கிக் கொண்டிருந்தது, ஆனாலும் என் அம்மாவிற்கு ஒரு திறன் இருந்தது, அது உள்ளுணர்வு என்றும் கூட சொல்லலாம், அம்மாவுடைய மனதும், சாதுர்யமும் எப்போதுமே விழிப்பாக இருப்பவை. அம்மா சொன்ன வார்த்தைகள் என் மூளையில் ஓடிக் கொண்டே இருந்தன – அம்மா பதினைந்து வருடங்கள் என்னையும் அக்காவையும் சாதிக்கு வெளிப்படுவதில் இருந்து காத்தார், ஆனால், எனக்கு அறிவுரை சொல்லும் போது – என்னுடைய நோக்குநிலையை இந்த ஆண் மைய சமூகத்திடம் இருந்து மட்டுமல்ல, இந்த குடும்பத்திடம் இருந்தும் மறைக்க முடியும் என்று அவர் சொன்னார். 

அம்மா என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

“நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா, அவங்க உன்ன வித்தியாசமா நடத்த தொடங்குவாங்க. ஒரு வேளை அவங்க அப்படி பண்ணலேன்னாலும், அவங்க அப்பா அம்மா அப்படி பண்ண சொல்லுவாங்க” என்றார். 

நான் என்னுடைய நோக்குநிலையை பற்றி என் நண்பர்களிடமோ, வேறு யாரிடமோ பேச மாட்டேன். ஒரு வேளை நான் பேசினால், என்னை தனிமைப்படுத்துவார்கள். ஒரு தனி நபர் என் மீது பரிவு கொள்ள நினைத்தாலும் கூட, இந்த சமூகம் அவர்களை அனுமதிக்காது – ஒன்று அவர்கள் என்னை கிண்டல் செய்ய வேண்டும், இல்லையென்றால் என்னோடு சேர்த்து அவர்களும் கேலிக்கு ஆளாக வேண்டும். வீட்டில் இது பற்றி பேசினால், வேறு யாருக்காவது சுமையாக இருக்கும், அதனால் பேச மாட்டேன். தங்கள் பெருமையை விட்டுவிடும் அளவுக்கு யாரும் வலிமையானவர்களாக இருக்கவில்லை. நான் அமைதியாக இருப்பேன் – இல்லையென்றால், நான் வலுக்கட்டாயமாக அமைதியாக்கப்படுவேன்.

 “நல்ல வேள நம்ம கோதும கலர்ல இருக்கோம், இல்லேன்னா என்னெல்லாம் நடந்திருக்கும். அப்பா ஆஃபீஸ்ல கூட வேல செய்றவங்களுக்கு தெரிஞ்சதாக அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா?”

எனக்குள் நடப்பவை இயற்கையானது என்று தெரியும், ஆனால், பாலியல் வன்கொடுமை நான் கேட்டது இல்லை. நான் மிரட்டப்பட்டேன், செய்யாத குற்றங்களுக்கு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டேன். அடைக்கலம் எதுவும் இல்லை, சென்று பேச யாரும் இல்லை. இதை புரிந்து கொள்ளுங்கள். 

“நீ யாரர் அப்படிங்குறதை மத்தவங்களுக்கு சொல்லாத, சொன்னா  நாம எதுக்காக போராடுறோமோ, அந்த கல்வி, அது உனக்கு கிடைக்காம போய் விடும். உன்னுடைய சாதி தான்னு தெரிஞ்சாலும் அவர்கிட்ட நீ உன் சாதியை சொல்லக் கூடாது, அது நல்லதில்லை” 

எனக்கு அது புரிந்தது. ஒரு வேளை என்னைப் போலவே யோசிக்கும் ஒருத்தரை நான் சந்தித்தாலும் – நான் என்னை மறைத்துக் கொள்ளவே வேண்டும் – அல்லது இது எனக்கு நேர்ந்த ஒன்று என நடிக்க வேண்டும்; ஏனென்றால், என் குடும்பம் உண்டாக்க நினைக்கும் ஒரு “சாதாரண” வாழ்க்கை சுக்குநூறாவதை என்னால் தாங்க முடியாது. வலிமையான நண்பர்களும் ஆதரவும் கிடைக்கும் என்றாலும், அது என்னை பாதிக்கும் என்பதை நான் நம்பினேன். 

 “நீ கடவுள் நம்பிக்கை உள்ளவன், அப்படியே இரு – யாரும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாது” 

இது தான் இருப்பதிலேயே சிறப்பான யுக்தி. பக்திமானாக, கலாச்சாரத்தில் ‘வலது’ சாரியாக இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் தப்பித்து விடலாம். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நான் விளக்க வேண்டியதில்லை. குடும்பங்களுக்கு நன்றாக வேலை செய்யும். 

 “உன் தாய் கிராமம் எதுன்னு யாருக்கும் சொல்லாதே. உன் உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை யாருக்கும் சொல்லாதே. உன் மாமன் மகன்கள் பேசுற மொழியை எப்போதும் பேசாதே. உன்னுடைய குல தெய்வம் எதுன்னு யாருக்கும் சொல்லாதே. நம்முடைய பௌத்த மரபை பற்றியும் யாரிடமும் சொல்லாதே” 

நான் சென்று வரும் இடங்கள் எதுவும் யாருக்கும் சொல்லப்படாது. நான் இதை தனியே செய்ய வேண்டும் என்றாலும் இதை செய்வேன். 

“கற்பனை செய்ய முடியாத இந்த வாழ்க்கைய கடக்க உனக்கு இருக்கும் ஒரே படகு கல்வி தான்” 

சரியான வயதில் நான் என்னைப் பற்றி படிப்பேன், இருக்கும் எல்லா புத்தகங்களையும் வாசிப்பேன். இருக்கும் அத்தனை ஆவணங்களையும் கண்டுபிடித்து என்னைத் தெரிந்து கொள்வேன். கண்டிப்பாக இதற்கு தொழில்நுட்பம் உதவும். 

“தரமாக நடந்துக்கணும், யாரையும் மரியாத குறைவாக நடத்தாதே”

இந்த உலகில் இருக்கும் சிறப்பான விஷயங்களை நான் அடைய எத்தனிப்பேன். சுய-பராமரிப்பு, கல்வி, வேலை என எதுவாக இருந்தாலும் அது சிறப்பானதாக, அக்கறையானதாக இருக்க வேண்டும், அப்போது தான் நான் தரமாக நடந்து கொள்வேன். எப்போது என்னை மட்டுமே சார்ந்திருப்பேன், எதாவது பரவினால் – வேறொன்றையோ, வேறொருவரையோ சாராமல் இருக்க முடியும். ஒரு அர்த்தத்தில், சார்ந்து இருத்தல். அப்புறம், வார்த்தைகளாலும், நடத்தையாலும், வலிமையாலும், உணர்வுகளாலும், சந்தர்ப்பங்களாலும் நான் யாரையும் புண்படுத்த மாட்டேன் – என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. 

“நீ இந்த சமூகத்தில் இருக்கதால, நீ யாருக்கும் குறைந்தவன் இல்லைங்கிறத மறக்காதே, நீ சந்தோஷமாக இருக்கணும், நீ எல்லோருக்கும் சமமானவன். எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலான பையன்” 

மற்றவர்களுக்கு மத்தியில் நானும் சமம் எனும் எண்ணத்தை எந்த அவமானமோ, குற்றவுணர்வோ, ஒடுக்குமுறையோ அழித்துச் செல்ல விடமாட்டேன். என்னுடைய நோக்குநிலையோ, என்னுடைய சாதியோ, எதுவும் என்னை தாழ்த்த முடியாது. எதிர்காலத்தில், உங்களுக்கு அது பிரச்சினை இல்லை என்றால், அதைப் பற்றி பேசலாம். 

 “உனக்கு அதிகாரமோ, பணமோ இருந்தால், நீ நம்ம சமூகத்துக்கு எதாவது செய். ஆனா, நம்முடைய கிராமத்தில் நடக்குதுன்னு, அவங்கள சுரண்டக் கூடாது” 

என்னுடைய சமூகத்துக்கான அரசியலை நான் பேச வேண்டும் என்பது விதி, ஆனால் நான் செய்ய வேண்டியது எல்லாம் என் பெயரை வெளியிடாமல் இருப்பது தான்.  நான் இப்போது செய்து கொண்டிருப்பது, ஒவ்வொரு வடிவ ஒடுக்குமுறை பற்றியும் பேசுவது முக்கியம். 

“.. ஆனா, யாரவது இத தெரிஞ்சிட்டா, யாராவது தாக்கினா – அத நடக்க விடாத, எந்த வழிலயாவது உன்னோட காப்பாத்திக்கோ”

நான் இப்போது அமைதியாக்கப்பட்டிருந்தாலும், நான் பதிலளிப்பேன் – தனி நபராக நான் ஒருபோதும் அமைதியாக்கப்படமாட்டேன், என்னுடைய தரப்பை பேசுவேன், நான் பலவீனமாக – கூச்சமுடையவனாக – இண்ட்ரோவெர்ட்டாக-  துணிந்து எதிர்கேள்வி கேட்காதவனாக இருந்தாலும் கூட, அதை எனக்கெதிராக யாரும் பயன்படுத்த விட மாட்டேன். 

“ இந்த ஒடுக்குமுறைய, அதோட அரசியல எதிர்காலத்துல புரிஞ்சிக்க, இந்த பேர ஞாபகம் வெச்சுகோ –  ‘பெரியார்’. இப்போ நீ சின்னப் பையன், உன்னால அவரோட தத்துவத்த புரிஞ்சிக்க முடியாது, ஆனா ஞாபகம் வெச்சுக்கோ – நீ பொறுமையா புரிஞ்சிப்ப, ஆனா, யாருக்காவது தெரிஞ்சு, யாராவது உன்ன தாக்கினா – அந்த மாதிரி எதுவும் நடக்க விடாத, எதாவது வழில நீ உன்ன பாதுகாத்துக்கோ”

என்றாவது ஒரு நாள் நான் அவரைப்பற்றி தெரிந்து கொள்வேன்.

மொழிபெயர்ப்பு: ஸ்னேஹா