அமீர்

கிரீஷ்

அமீர்,

நீ என்னை கவனித்திருக்க மாட்டாய். அக்பரை நீ முதன்முதலாக சந்தித்த நாளில் நானும் அங்கு இருந்தேன். உனக்கு நேர் எதிராக. ஒருவர் சிரிக்கும்போது அவரது கண்கள் சிரிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்பரைப் பார்த்து நீ சிரித்தபோது உனது முகமே சிரித்துக் கொண்டிருந்தது. உனது மெலிந்த தேகம், நீண்ட கழுத்து, சுருட்டை முடி, முகம் நிறைய சிரிப்புடன் கூடிய வருகை எப்போதோ படித்த தேவதைக் கதைகளை நினைவில் கொண்டு வந்தது. உன் அத்தர் வாசனை அந்த இடமெல்லாம் நிரம்பி இருக்க நீ அக்பரைப் பார்த்து சிரித்தபோது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. பக்கத்தில் மரியா இருந்ததால் அமைதியாக இருந்தேன். இல்லையெனில் ஏதாவது செய்து உன் கவனத்தை திருப்பியிருக்கப் பார்ப்பேன்.

பின்னர் உன்னைப் பலமுறை தீவில் பார்த்திருக்கிறேன். கடற்கரையில் அக்பரோடு பேசிக்கொண்டிருப்பாய். தீவில் மீன்பிடிக்கச் சென்றபோது நீயும் அக்பரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது நான் மறைந்து நின்று உங்கள் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தீவு எனக்கு அச்சமாக இருந்தது அமீர். தீவு மட்டுமல்ல, இந்த உலகமே எனக்கு அச்சமாகத் தான் இருக்கிறது. அவர்கள் உன்னையும் அக்பரையும் ஒன்றாக விடமாட்டார்கள் என எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். உன்னிடம் சொல்ல வேண்டும் என்று பலமுறை நினைத்திருந்தேன். ஆனால் காதலில் திளைத்துக் கொண்டிருந்த உன் கண்களைப் பார்த்தபிறகு எதுவுமே சொல்ல முடியவில்லை. அக்பரிடம் சொல்லலாமென்றால் அவன் வாழ்க்கையில் இப்போது தான் காதலைப் பார்க்கிறான். அவன் காது வரை இளித்து எல்லாம் நான் பார்த்ததே இல்லை. எனக்கு எந்தக் கடவுளிடமும் நம்பிக்கையில்லை. ஆனாலும் நீங்கள் இருவரும் நினைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என நான் மனதுக்குள் யாரிடமெல்லாமோ வேண்டிக் கொண்டிருந்தேன். பாத்திமாவை நினைக்கும்போதும் ஒரு பக்கம் பாவமாக இருந்தது. ஆனால் அவளிடம் நீ என்ன தான் சொல்லிவிடமுடியும்? நீ நினைப்பதும் பேசுவதும் யாருக்குத்தான் புரிகிறது, அக்பரைத் தவிர.

உனது நிக்காஹின் முந்தைய தினமெல்லாம் எனக்கு தூக்கமே இல்லை. என்னால் அதைத் தடுக்க முடிந்தால் எப்படியாவது தடுத்திருப்பேன். அங்குமிங்குமாக அந்தத் தீவைச் சுற்றி பலமுறை நடந்தேன். படகில் படுத்திருந்த அக்பரின் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. நீயோ எல்லாம் இழந்தவனாக நின்றிருந்தாய். ஏதாவது அற்புதம் நடந்துவிடாதா என நான் எல்லார் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியாக நீ அக்பரை சந்திக்கச் சென்றாய். நீங்கள் இருவரும் பேசி முடித்து நீ கால்கள் தளர நடக்கும்போதே என் நாசிக்குள் சந்தனத் திரியின் வாசனை வரத் தொடங்கி விட்டது அமீர். ஒரு கையில் சக்கைப்பழமும், மறு கையில் உண்ணியப்பமுமாக இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து வரும் என் பிரியமான பாட்டி இறந்த அன்று அவரது தலைமாட்டில் ஏற்றி வைத்த அதே சந்தனத் திரியின் வாசனை. பலவருடங்களாக அந்த வாசனையை நான் மரணத்தின் வாசனையாகவே அறிந்து கொண்டிருக்கிறேன்.

விடிவதற்கு முன்னரே அக்பர் படகிலேறினான். அவனைத் தடுக்க யாருக்கும் தைரியமில்லை. அவன் இனி திரும்பவே மாட்டானென எல்லாருக்கும் தெரியும். நீ இல்லாமல் என்ன செய்யப் போகிறான், எப்படி இருக்கப் போகிறான்?

கபரிஸ்தானில் உன்னை அடக்கி இருக்கும் இடத்தைப் பார்க்கவே எனக்கு விருப்பமில்லை. உன்னிடம் முன்னமே பேசி இருந்திருக்கலாமோ என நினைக்கிறேன் அமீர். நமது காதல்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும் என்பதை உனக்கு நான் சொல்லி இருந்திருக்க வேண்டும். நீ எல்லாவற்றையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று உனக்கு உணர்த்தியிருக்க வேண்டும். முழுநிலவு காயும் பின்மாலைப் பொழுதில் கைகள் கோர்த்து நடக்கும் கனவை பன்னிரெண்டு வருடமாக நான் மனதில் பூட்டி வைத்திருப்பது போல் நீயும் அக்பருடன் இளமஞ்சள் சூரிய வெளிச்சத்தில் ஜன்னலின் வழியே புறாக்கள் காணும் கனவை ஒருவேளை பூட்டி வைத்திருப்பாய்.

இந்த உலகம் நமக்கானது இல்லை அமீர். அக்பரைக் காணும் போது சிரிக்கும் உன் முகத்தையும், உன்னைக் காணும்போது இளிக்கும் அக்பரையும் இந்த உலகம் எப்போதும் புரிந்து கொள்ளாது. நாம் வாழ சம்மதிக்காது.

உனது மதம் சொல்லும் மறுமையிலோ, வேறு எந்த மதம் சொல்லும் மறுமையிலோ எனக்கு நம்பிக்கை இல்லை அமீர். நூற்றாண்டுகளாக நமது மனதில் பூட்டி வைத்திருக்கும் ஆசைகளுக்கு ஒரு மறுமை உண்டெனில், அங்கு நான் மரியாவின் கை கோர்த்து முழு நிலவில் நடந்து கொண்டிருப்பேன். வழியில் உன் அத்தரின் மணம் உணர்ந்து மேலே பார்ப்பேன். நீ முகம் முழுக்க சிரிப்பாக அக்பரோடு பீடி புகைத்துக் கொண்டிருப்பாய். அக்பர் வழக்கம்போல உன்னைப் பார்த்து இளித்துக் கொண்டிருப்பான். வானெங்கும் நிலா வெளிச்சத்தில் புறாக்கள் பறக்கும். லத்தீப் தனக்கு பிடித்த உடையில் சந்தோஷமாக நடனமாடுவாள். அங்கே முல்லாவுக்கும், ரோசிக்கும் கூட இடம் உண்டு.

~*~*~

Read this article in English