சென்னை 376

காப்பகங்களிலிருந்து - From the archives

ஆகஸ்ட் 22, 2015 அன்று சென்னை தனது 376வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறது. இந்நிலையில், பல துறைகளிலும் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் பால்புதுமையினர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி பால்புதுமையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரின் கருத்துக்களைக் கேட்டோம்.


ப்ரியா தம்பி (எழுத்தாளர்) :
பெருநகரமான சென்னையில் மிகப் பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. படித்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த நிறுவனங்களில் கூட பாலியல் சிறுபான்மையினர் தங்களது அடையாளங்களை மறைத்து வாழும் நிலையில் தன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது பாலியல்/ பாலினச் சிறுபான்மையினருக்கு ஆதரவளிப்போரும் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் புரிதல் இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்களிடையே புரிதல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வது இல்லை. 
பெருநகரங்களில் தலித் மக்கள் வாழ்வதற்கான பிரச்சினைகள் இல்லை என்பது போன்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் பெரும்பான்மையான தலித் மக்கள் தங்களுடைய தலித் அடையாளங்களுடன் வாழ முடிவதில்லை. அவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்தே வாழ்ந்து வருகின்றனர். அதே போலவே பாலியல் /பாலினச் சிறுபான்மையின மக்களும் தங்களது அடையாளத்தை மறைத்தே வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறவர்கள் சாதி ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக மேல்தட்டில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு சமூக அந்தஸ்து கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக மருத்துவர்களிடையேயும் , மனநல நிபுணர்களிடையேயும் பால்புதுமையினர் பற்றியப் புரிதல் மிகக் குறைவாகவே உள்ளது.


மாலினி (உதவி இயக்குனர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்):
சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் நிலைமை நன்றாகவே இருக்கிறது. நம்மைப்போல் நிறையபேரைப் பார்க்க முடிவதால் ஒருவருக்கொருவர் அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. 
மேலும் பெருநகரங்களில் வசிக்கும் படித்த மக்கள் உடல் சார்ந்த அரசியலைப் புரிந்து கொண்டுள்ளனர். ஆண், பெண் மற்றும் பாலற்றோரைப் பற்றிய தெளிவோடு உள்ளனர். ஆனால் ஒரு பால்புதுமையினர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தனது ஊரிலோ, கிராமங்களிலோ, சிறுநகரங்களிலோ வசிக்கும்போது கௌரவக்கொலை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
ஆனால் பால்புதுமையினர் சமுதாயத்துக்குள் புரிதல் என்பது குறைவாகவே இருக்கிறது.  ஓர்பால் ஈர்ப்பு கொண்ட பெண்கள் ஓர் அடைக்கப்பட்ட சுதந்திரத்துடனே வாழ்கின்றனர். அப்படியே அவர்களில் சிலர் வெளிவந்தாலும் கூட திருநம்பிகளால் வெளிவரமுடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது. மேலும் பாலற்றோரைக் குறித்த புரிதலோ, அவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்ற புரிதலோ குறைந்தபட்சம் சிறுபான்மையினர் சமுதாயத்திற்குள்ளாவது ஏற்படவேண்டும்.


ஆதம் (இசைக் கலைஞர்) :
புதிதாக சென்னைக்கு வருபவர்கள் சென்னையில் உள்ள பால்புதுமையினர் ஒற்றுமையைப் பற்றிய ஒரு தவறான புரிதலுடனே பார்க்கின்றனர். ஆனால் அந்த ஒற்றுமை உண்மையானது அல்ல. எந்த ஒரு வேறுபாடுகள் மிகுந்த சமூகத்தைப் போன்றும் இந்தச் சமூகத்திலும் பிரச்சினைகள் உள்ளன.  ஆனால் அந்த பிரச்சினைகள் எல்லாம் கடந்தும் பேரணிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அல்லது கேளிக்கைகள் என்று ஒற்றுமையாக செயல்படவும் செய்கிறார்கள்.
LGBTQI மக்களுக்கான உரிமைகள் சரியான அளவில் கிடைக்கின்ற ஒரு வளர்ந்த நாட்டில் இருந்து வரும் ஒருவராக, இங்கிருக்கும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளில் பெருமளவிலான பிரச்சினைகளை சந்தித்ததில்லை. அந்தப் பிரச்சினைகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும், கோபமாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை சலனமே இல்லாமல் LGBTQI சமூகம் கையாளும் விதம் அருமையாக இருக்கிறது.


செல்வம் (அரங்கக் கலைஞர், சமூக ஆர்வலர்) :
சென்னையில் திருநம்பிகள் அதிக அளவில் இருந்தாலும் அவர்களுக்கு வீட்டிலிருந்து வெளியே வருவதென்பதே போராட்டமாக இருக்கிறது. திருநம்பிகளுக்கான அடிப்படை வாழ்வாதாரமே பிரச்சினையாக இருக்கும் போது அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை. 
மேலும் திருநம்பிகளுக்கான வேலைவாய்ப்பு என்பதும் அறவே இல்லாத நிலை தான் நிலவுகிறது. திருநங்கைகளுக்கு இருப்பதைப் போலவே திருநம்பிகளுக்கும் பால்மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக வழங்குவதன் மூலமாக திருநம்பிகள் வெளிவருவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.