உரிமைக்கான போராட்டம்

காப்பகங்களிலிருந்து - From the archives

ஆகஸ்ட் 17-ம் தேதி அன்று மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே திருநங்கை/திருநம்பியருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டம் ஜென்னி மார்க்ஸ் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது.
போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், பொறியியல் கல்லூரி மாணவியுமான பானு பேசும்போது திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மறுக்கப்படுதல், பெற்றோரால் புறக்கணிக்கப்படுதல் என்பது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் அவசியத்தைப் பற்றியும்  அந்த உரிமைகள் மறுக்கப்படுதலையும் பற்றிய தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். 


மேலும் தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதில் மதுரையைச் சார்ந்த திருநங்கை சொப்னாவின் போராட்டத்தைப்பற்றி அவர் குறிப்பிட்டார்.பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்விகளில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்குவதற்கு எதிராக இருந்த அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர் சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து, தற்போது தான் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதைக் குறிப்பிட்டார். என்றாலும் தற்போதும் தன்னால் தனியார் பொறியியல் கல்லூரியில் தான் படிக்க முடிந்தது என்பதையும் அவர் பதிவுசெய்தார். திருநங்கை ப்ரத்யகா யாஷினியின் காவல்துறை தேர்வுகளில் நடந்த குளறுபடிகளைப் பற்றிய தனது கண்டனத்தை பதிவு செய்தார். 


இறுதியாக அவர் நால்ஸா தீர்ப்பு வெளிவந்த பிறகு அதனை செயல்படுத்த தமிழக அரசு ஆறுமாதங்கள் கெடு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் இன்னமும் செயல்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்த அவர் வரும் 26-ம் தேதி தொடங்க இருக்கும் சட்டமன்றக்கூட்டத்தொடரில் தமிழக அரசு ஏதேனும் நல்லமுடிவு எடுக்கும் என்றும், நால்ஸா தீர்ப்பு சில திருத்தங்களுடன் அமல்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


தீக்கதிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குமரேசன் பேசும்போது சில வருடங்களுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த கேள்வி- பதில் பகுதியைச் சுட்டிக்காட்டினார். “பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?” என்ற கேள்விக்கு “பெண்கள் இடஒதுக்கீடு கேட்டு அதனை வழங்கிவிட்டால் பிறகு அலிகளும் இடஒதுக்கீடு கேட்பார்கள்” என்று ஏளனமாகப் பதில் சொல்லியிருந்ததை கடுமையாகச் சுட்டிக்காட்டிய அவர் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முழு உரிமைகளும் விரைவில் கிடைக்கும் எனவும் , இந்தப் போராட்டங்களுக்கு தனது ஆதரவு தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் பேசிய பத்திரிக்கையாளர் TSS மணி திருநங்கைகளுக்கான நலவாரியம் இந்திய அளவில் அமைக்கப்படுவதின் அவசியம் பற்றிப் பேசினார்.
அடுத்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் T.P.ரங்கராஜன் திருநங்கைகளுக்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்றும் மேலும் அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என்றும் திருநங்கைகளுக்கான வரலாற்று முக்கியத்துவம் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தன்னிடம் தெரிவித்ததாக கூறிய அவர் போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.


அடுத்து உரையாற்றிய அரங்கக் கலைஞர், போராளி லிவிங் ஸ்மைல் வித்யா இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் ஆன பிறகும் கூட தலித் மக்கள், பழங்குடியினர் , திருநம்பிகள், திருநங்கைகள் என ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமூக உரிமை மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவை மறுக்கப்படுவது குறித்த தனது கண்டனத்தை பதிவுசெய்தார். மேலும் நம்பிக்கையின் பெயரால் திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தூண்டும் மதங்களுக்கு எதிராகவும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளைத் தொடர்ந்து ஒதுக்கும் ஊடகங்களுக்க்கு எதிராகவும் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.


மேலும் பேசிய வித்யா ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியக்குடிமகளிடம் வரி வசூலிப்பதைப்போலவே அனைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் மற்றவர்களுக்கு வழங்கும் உரிமைகளை ஏன் திருநர்களுக்கு வழங்குவதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.


அடுத்து பேசிய தோழி அமைப்பைச் சார்ந்த திருநங்கை ஷிகா திருநங்கைகள் தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு கூட முதல்வரையோ, அமைச்சர்களையோ அல்லது அரசு உயர் அதிகாரிகளையோ பார்க்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். அரசின் சார்பில் 230 வீடுகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அரசு சார்பாக செய்தி அளிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் அந்த வீடுகள் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். 
மேலும் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாத வரை “திருநங்கைகள் ஏன் பாலியல் தொழிலோ அல்லது பிச்சையெடுக்கவோ செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பும் அதிகாரமோ உரிமையோ யாருக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த தீபா பேசும்போது இது இடஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பிற்கான போராட்டம் மட்டுமல்ல. சமத்துவம் மற்றும் நியாயத்துக்கான போராட்டம் என்றும் சரியான சமயத்தில், சரியான முறையில் இந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.


TUCS-ன் மாநிலத்தலைவர் பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது திருநங்கைகள் பங்குபெறுவதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.  மேலும் இடஒதுக்கீடு சலுகை இல்லை என்று தெரிவித்த அவர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றக் கூற்றுப்படி விளிம்புநிலை மனிதர்களுக்கு வேலை , கல்வி தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஓரினம் அமைப்பு சார்பாக பேசிய மௌலி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற அடையாள அட்டைகளை மட்டுமே வழங்குவதன் மூலமாகப் பெருமை பட்டுக்கொள்ளும் அரசாங்கங்கள் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை அடிப்படை உரிமைகளுக்காகக் கூட இன்னும் போராடும் நிலையில் வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் படிக்கும் காலத்திலேயே கேலி, கிண்டல் மூலமாக திருநங்கைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டு, படித்தால் தான் வேலை தரமுடியும் என்று கூறி ஒதுக்குவது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டார்.
தங்களுடைய அலுவலகங்களில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், பால்பாகுபாடற்ற கழிவறைகள் கூட அமைக்காமல் தங்களது நிறுவனத்தை மாற்றுப்பாலினத்தைச் சார்ந்தவர்கள் பணிபுரிய சிறந்த இடம் என்று கூறும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படும் தங்களது நிறுவனங்களின் கொள்கையைப் பற்றிய அறிக்கையை வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.இறுதியாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமைகள் மறுக்கப்படுவதை “சாதித் தீண்டாமை” என்று கூறுவதைப்போல விளிம்புநிலையில் வாழும் திருநங்கை/திருநம்பிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை “பாலினத் தீண்டாமை” என்றே கருதவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடுத்து பேசிய வரலாற்று மாணவர், அரசு தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சியாளர் சரண் திருநங்கைகளுக்கெதிரான ஒதுக்குதலை சட்டரீதியான ஒதுக்குதல், அரசியல் ரீதியான ஒதுக்குதல், பாலியல் ரீதியான ஒதுக்குதல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தப்போரட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகளில் சிலர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தராத மத்திய, மாநில அரசைக் கண்டித்து தங்களது பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை எரித்தும், கிழித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


இந்தப் போராட்டத்தில் திருநங்கைகள், திருநங்கைகளுக்கான அமைப்புகள், அமைப்பு சாரா தனிநபர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.


வழக்கமாக பாலின/ பாலியல் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் பங்குபெறும் போராட்டங்களில் தவறாமல் இடம்பெறும் இரண்டு நிகழ்வுகள் இந்தப்போராட்டத்திலும் நடைபெற்றது.
நிகழ்வு 1:ஒரு பிரபல நாளிதழைச் சார்ந்த பத்திரிக்கையாளர், துண்டுப்பிரசுரங்கள் வழங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவி எனும் தன்னார்வலரை அழைத்து “அரசாங்கம் என்னதான் சலுகை செஞ்சாலும் ஏன் இவங்க எல்லாம் செக்ஸ் ஒர்க் பண்றாங்க?” என்ற வழக்கமான, வரலாற்று சிறப்பு வாய்ந்த கேள்வியைக் கேட்டு பொதுச் சமூகம் இப்போதைக்கு திருந்தாது என்பதை நிரூபித்தார்.
நிகழ்வு 2:எல்லாப் போராட்டங்கள் மற்றும் பேரணிகளைப் போல இந்தமுறையும், போராட்டத்தில் அதிக அளவில் கலந்துகொண்டு காவல்துறை தங்கள் ஆதரவை பதிவுசெய்தது.