நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி – பால்புதுமையினர் சந்திப்பில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி

10 சூலை, 2021 சனிக்கிழமை அன்று பால்புதுமையினர் (LGBTQIA+) சமூகத்தைச் சேர்ந்த எழுவர், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணித் தலைவருமான மாண்புமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டு அரசின் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதா ஜீவன் மற்றும் முதலமைச்சரின் தனிச்செயலர் திருமிகு அனு ஜார்ஜ் இ.ஆ.ப. ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

திமுக செய்தித் தொடர்பாளர் திருமிகு. மனுராஜ் சண்முகசுந்தரம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு திருமிகு. கனிமொழி அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கும் நிகழ்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் திமுக உறுப்பினரான சூர்யா, குயர் சென்னை க்ரோனிக்கள்ஸின் மௌலி,  ஓரினம்,  நிறங்கள் மற்றும் சாத்தி அமைப்புகளைச் சேர்ந்த ஃபீலிக்ஸ் சுகந்தன், அருண் கார்த்திக், செல்வம் முனியாண்டி, TD சிவகுமார், மற்றும் L. இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் திருநம்பிகள், தற்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்டவர்கள் மற்றும் திரவநிலை பாலினத்தவர் ஆகியோர் அடங்குவர். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மேலும் சிலரால் வருகை தர இயலவில்லை.

பால்புது சுயமரியாதை மாதத்தில் நடந்த டுவிட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில் திமுக செய்தித் தொடர்பாளர் மனுராஜ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

முதலில் கனிமொழி அவர்களின் இல்லத்தில் அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் ஓரினம், நிறங்கள் மற்றும் சாத்தி அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டு அரசின் துறை சார்ந்த கோரிக்கைகளும் பரிந்துரைகளும் அடங்கிய மனு வழங்கப்பட்டது. குயர் சென்னை க்ரோனிக்கள்ஸ் சார்பில் பிரச்சனைகள் சார்ந்த கோரிக்கைகளும் பரிந்துரைகளும் அடங்கிய மனு வழங்கப்பட்டது. மனுக்களை அளித்த பின்பு அதன் சாராம்சங்களை ஒவ்வொன்றாக அவருக்கு எடுத்துரைத்தோம்.

குடும்ப மற்றும் சமூகப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கல்வி, வேலைவாய்ப்பு, வேலைப் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் ஈடுபாடு, மொழி, கலை, இலக்கியம், மற்றும் நலத்திட்டங்கள் என்று பரந்துபட்ட நோக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் மிகவும் கவனத்துடனும் கனிவுடனும் கனிமொழி கருணாநிதி அவர்கள் கேட்டறிந்தார். கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளின் அவசரத் தன்மையையும் அரசின் அதிகார வரம்பையும் கருத்தில் கொண்டு ஒவ்வொன்றையும் அரசாணை, சட்டம் இவற்றால் தீர்க்க முயல்வோம் என்று உறுதியளித்தார்.

தற்போது “மூன்றாம் பாலின வாரியம்” என்றழைக்கப்படும் திருநர் நலவாரியம் தொடர்பாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளை அந்த நலவாரியத்தைக் கண்காணிக்கும் மகளிர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதா ஜீவன் அவர்களிடம் நேரடியாக எடுத்துச் செல்லுமாறு கனிமொழி அவர்கள் பரிந்துரைத்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமைச்சர் அவர்களைச் சந்திக்கத் தலைமைச் செயலகம் சென்றோம்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களிடம் குறிப்பாக அவர் துறை சார்ந்து அவர் அதிகாரத்திற்குட்பட்ட பிரச்சனைகளான “மூன்றாம் பாலின வாரியத்தில்” திருநம்பிகளையும் இணைத்தல், திருநம்பிகளுக்கும் உரிமைகள் அளித்தல் போன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அத்தோடு, “அரவாணிகள் நலவாரியம்” என்று தொடங்கப்பட்டு தற்போது “மூன்றாம் பாலின நலவாரியம்” என்று அழைக்கப்படும் அமைப்பைத் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இருவருக்குமான பொது அமைப்பாகக் கருதி “திருநர் நலவாரியம்” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கைகளுடன் சேர்த்து பொதுவான பால்புதுமையினர் வாழ்வியல் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் அனைத்தையும் கனிவன்புடன் கேட்டுக் கொண்டு மனுவைப் பெற்றுக் கொண்டார். மனுவில் உள்ளவற்றுக்கு தக்க தீர்வுகள் காண்பதாக உறுதியளித்தார். 

இறுதியாக முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலர்களுள் ஒருவரான திருமிகு. அனு ஜார்ஜ் இ.ஆ.ப. அவர்களைச் சந்தித்து அவரிடமும் காவல்துறையினருக்கான விழிப்புணர்வு மற்றும் திருநம்பி மக்களின் வாழ்வாதரம் தொடர்பான பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டன. இவற்றுக்குத் தீர்வுகள் காண்பதாக உறுதியளித்ததோடு வேறு கோரிக்கைகள் இருப்பின் அவற்றையும் பால்புதுமையினர் சமூக மக்களோடு கலந்துரையாடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

Social Justice Pride Flag at Chennai Pride முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில் செயல்படும் திருமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசும் மக்கள் நலனிலும், சமூகநீதியிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது என்பது திமுக அரசு பதவியேற்ற இந்த அறுபத்தாறு நாட்களில் கண்கூடாகக் காணமுடிகிறது.

விளிம்பு நிலை மக்களுடன் இணைந்து அவர்களுக்காகச் செயல்படத் துடிக்கும் அரசும் தலைவர்களுமே அனைத்து மக்களுக்குமான நல்வாழ்வை உறுதி செய்ய முடியும். பால்புதுமையினர் பிரச்சனைகள் வாக்கரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்காத நிலையிலும் பால்புதுமையினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எந்த ஓர் அரசியல் கட்சியும் பலத்த எதிர்மறை எதிர்வினையைச் சந்திக்கும் காலகட்டத்திலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்நாட்டை ஆளும் திமுக பால்புதுமையினர் (LGBTQIA+) மக்களின் நலம் சார்ந்து நடத்திய இந்தச் சந்திப்புகள் மிகவும் முக்கியமானவை.

பால்புதுமையினர் மக்களுடன் உரையாடி எங்களது பிரச்சனைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் திறந்த மனதுடன் கேட்டுக் கொண்டது எங்கள் வாழ்நாளில் எங்கள் மண்ணில் எங்களுக்கும் விடியல் வரும் என்ற நம்பிக்கை துளிர் விட மிகவும் உதவிகரமாக இருக்கப் போகிறது.