ஒருபால் திருமணங்களை இந்தியக் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை – மத்திய அரசு

“ஒரே பால் அடையாளம் (same-sex) கொண்டவர்கள் திருமணம் செய்யும் கருத்தை இந்தியக் கலாச்சாரம் மற்றும் சட்டம் அங்கீகரிக்கவில்லை” என்று மத்திய அரசு 25 பிப்ரவரி 2021 வியாழக்கிழமை அன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமையை அமல்படுத்தக் கோரி ஒரே பால் அடையாளம் கொண்ட தம்பதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்த பதில் மனுவில் இந்திய அரசாங்கம் இதைக் கூறியது.

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “சட்டப்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடப்பது. இந்து திருமணச் சட்டம் ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்தின் கீழ் ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரும் சில மனுக்களை நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா மற்றும் அமித் பன்சால் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மத்திய அரசு தனது பதில் மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்போவதாகவும் இது அனைத்து மனுதாரர்களுக்கும் பொதுவான பதிலாக இருக்கும் என்றும் எஸ்.ஜி. மேத்தா முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377ஐ மறு ஆய்வு செய்த போதிலும், மனுதாரர்கள் ஒருபால் திருமணத்திற்கான அடிப்படை உரிமையை கோர முடியாது” என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.

சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன் கீழ் பாலின அடையாளம் மற்றும் பாலீர்ப்பை பொருட்படுத்தாமல் அனைத்துத் தம்பதிகளும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கக் கோரி ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் கோரியிருந்தனர். மற்றொரு தம்பதியில் ஒருவர் இந்தியக் குடிமகன் மற்றும் மற்றொருவர் வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் (Overseas Citizen of India). இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் திருமணம் செய்துகொண்டவர்கள். வெளிநாட்டு திருமணச் சட்டம், 1969 ஒருபால் தம்பதிகளின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் பாகுபாடு காட்டுவதாகவும், இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் இவர்கள் வாதிட்டனர்.

வக்கீல்கள் அருந்ததி கட்ஜு, கோவிந்த் மனோகரன், சுரபி தார் மற்றும் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆகியோரும் ஒருபால் திருமணங்களுக்கு ஆதரவாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். “ஒரு இணை,ஒருவருக்கொருவர் வழங்கும் அர்ப்பணிப்பு, ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கு திருமணமே சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் அங்கீகாரத்தை வழங்குகிறது. கோவிட் – 19 தொற்றுக்காலங்களில் இது இன்னமும் முக்கியமானது” என்று மேனகா குருசாமி தனது வாதத்தில் தெரிவித்தார்.

செய்தி மூலம்: The News Minute