திருநர்க்கு எதிரான மசோதாவைத் திரும்பப் பெறுக #StopTransBill2019

அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்தியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான நவம்பர் 26-ம் நாள் திருநர்களின் உரிமைக்கும் உச்சநீதிமன்றத்தின் நால்சா தீர்ப்புக்கும் எதிரான மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நால்சா தீர்ப்புக்கும், 2016ல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் மசோதாவுக்கும் பதிலாக திருநர்களின் உரிமையைப் பறிக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் மசோதாவை “திருநர்கள் பாதுகாப்பு மசோதா 2019” எனும் பெயரில் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இம்மசோதா வரைவிலிருக்கும்போதே திருநர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவர்களது குரலைக் கேட்காமல் தேர்வுக்குழுவுக்கும் அனுப்பாமல் மத்திய அரசு மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இம்மசோதாவைக் கொண்டு வந்தது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

ஏற்கனவே திருநர் சமுதாயம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட “திருநங்கை” எனும் வார்த்தைப் பயன்பாடு சமீபத்தில் தமிழக அரசால் நீக்கப்பட்டிருக்கிறது. திருநர்கள் ஏற்றுக்கொள்ளாத. “மூன்றாம் பாலினம்” எனும் வார்த்தை அதற்கு மாற்றாக திருநர்களின் அடையாளமாக திணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய மாநில அரசின் தன்னிச்சையான இந்த நடவடிக்கைகளால் திருநர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. இந்நடவடிக்கைகளுக்கு எதிராக அவனைவரும் குரல் கொடுப்போம். திருநர்களின் அடிப்படை உரிமையைக் காப்போம்.

~*~*~