திருநர்கள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) மசோதா 2019 குறித்த சம்பூர்ணா பணிக்குழுவின் அறிக்கை

சம்பூர்ணா பணிக்குழு; மொழிபெயர்ப்பு: நாராயணி

26 நவம்பர் 2019-ம் நாள் திருநர்களின் உரிமைக்கு எதிரான மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த மசோதா கடந்த 2019 ஜூலை மாதம் மக்களவையில் அமைச்சர் திரு தவார் சந்த் கெலோட்டால் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, இதை ஏன் ஏற்கமுடியாது என்பது குறித்த சம்பூர்ணா பணிக்குழுவின் அறிக்கை.

#StopTransBill2019

அறிக்கை:

பின்புலம்

டிசம்பர் 2015ல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அமைச்சகம் திருநர்களுக்கான (உரிமைகளைப் பாதுகாத்தல்) மசோதாவின் முதல் வரைவை வெளியிட்டது. ஆகஸ்ட் 2016ல் திருநர்கள், பன்முக பால்பண்புடையவர்கள் (Intersex Persons, இண்டர்செக்ஸ் நபர்கள்), பால் ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்கள் (Non-binary Persons), சம்பூர்ணா பணிக்குழு உள்ளிட்ட சமூகத்தினரிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், முந்தைய மசோதாவிலிருந்து மிகவும் பின் தங்கிய ஒரு வடிவத்தில் மசோதாவை வெளியிட்டது. நேரடி சந்திப்பில் சாட்சியங்களைக் கேட்ட பிறகும் எழுத்து வடிவில் பரிந்துரைகளைப் பெற்ற பிறகும் ஜுலை 2017ல் திருநர்களுக்கான 2016 மசோதாவின் 43வது அறிக்கை பாராளுமன்றத்தின் சமூகநீதி நிலைக்குழுவால் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலைக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அமைச்சகம் நிராகரித்தது. பாராளுமன்றத்தின் 2018 குளிர்கால கூட்டத்தொடரில், லோக்சபாவில் திருநர்கள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) மசோதா நிறைவேற்றபட்டது. சென்ற அரசின் ஆட்சிக்காலத்துக்குள்ளாக ராஜ்யசபாவின் கடைசி கூட்டத்தில் இந்த மசோதா எடுத்துக்கொள்ளப்படவில்லை.

திருநர்கள், பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால் இருமையிலிருந்து வேறுபட்டவர்கள் மற்றும் சமூகத்தினரிடமிருந்து இந்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் பரவலாக நடத்தப்பட்டன. டெல்லி, பெங்களூரு, பீஹார், மணிப்பூர், தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஹைதராபாத், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற இடங்களிலும்,திருநர்கள், பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால் இருமையிலிருந்து வேறுபட்டவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களிலுள்ள சிறு நகரங்களில் கூட பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். LGBTI சமூக செயல்பாட்டைப் பொறுத்தவரை இதுபோன்ற நாடு முழுவதும் பரவலான ஒருங்கிணைக்கப்பட்ட பெரும் செயல்பாடு என்பது இதுவரை நடக்காத ஒன்று. சாதி, வர்க்கம், பாலினம் கடந்து இந்த மசோதாவுக்கு ஒருமித்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிகாரமளித்தல் என்ற போர்வையில் ஒடுக்குமுறைக்கு ஆதரவளிக்கும் மசோதாவாக இது இருக்கிறது.

இந்த மசோதாவின் பிரச்சனைக்குரிய பகுதிகளைப் பற்றிய செய்திகள் சென்ற வாரம் வரத்தொடங்கியதிலிருந்தே, இந்த மசோதா பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே 2019க்கான மசோதா வரைவு வெளியிடப்படவேண்டும் என்று திருநர்கள் குரல் எழுப்பினர். அதையும் தாண்டி சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான அமைச்சர் திரு தவார் சந்த் கெலோட் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

திருநர் உரிமை குறித்தான 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றுவதிலோ, திருநர்கள், பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால் இருமையிலிருந்து வேறுபட்டவர்கள் ஆகியவர்களிடமிருந்ந்து கோரிக்கைகள் கேட்பதிலோ இந்த அரசுக்கு எந்த முனைப்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மசோதாவில் உள்ள சிக்கல்கள்

1. அடையாளம் சார்ந்த சிக்கல்

இந்த மசோதாவைப் பொறுத்தவரை, திருநர் என்று தன்னை அழைத்துக்கொள்பவர்களுக்கு மட்டுமே தங்களுக்கான பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை இவர்கள் அளிக்க வேண்டும். இன்னும் தெளிவாக பெயரிடப்படாத செயல்முறைகள், ஆவணங்களின் அடிப்படையில் மாஜிஸ்ட்ரேட்டால் திருநர் என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

ஆண்/பெண் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவிரும்பினால் மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது ஒரு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி அறுவை சிகிச்சைக்கான சான்றிதழை வழங்கவேண்டும். இந்த சான்றிதழுக்கான வடிவம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இந்த சான்றிதழ் பிறகு மாஜிஸ்ட்ரேட்டிடம் அளிக்கப்பட்டு, ஆண்/பெண் அடையாளத்துக்கான திருத்தம் மேற்கொள்ளப்படும்.

உச்சநீதிமன்றத்தின் 2014 நால்சா தீர்ப்புக்கு இது முற்றிலும் எதிரானது. அறுவைசிகிச்சை அல்லது ஹார்மோன் தலையீடுகள் எப்படி இருந்தாலும் ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் என்று தனது பாலினத்தைத் தானே வரையறுத்துக்கொள்ள நால்சா தீர்ப்பில் உரிமை வழங்கப்பட்டது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், “ஒருவரின் பாலினத்தை அறிவிக்க எஸ்.ஆர்.எஸ்ஸை வலியுறுத்திக் கேட்பது ஒழுக்கமற்றது, அது அநீதி” என்று தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது (உச்சநீதிமன்ற முடிவின் 110ம் பக்கம்)

2. பெயரை மாற்றிக்கொள்வது தொடர்பான சிக்கல்

இந்த மசோதாவைப் பொறுத்தவரை, திருநர் என்றோ, திருத்தப்பட்ட சான்றிதழில் ஆண்/பெண் என்றோ சான்றிதழ் பெற்றவர்கள், “பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாளம் சார்ந்த பிற ஆவணங்களிலோ தங்களது முதல் பெயரை மாற்றிக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பெயரை மட்டுமே மாற்றிக்கொள்வதற்கு இடமளிக்கும் இந்த வரிகள் குழப்பத்தைத் தருகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் சாதியைக் குறிக்கும் இரண்டாம் பெயர்களை மாற்றுவதற்கு நமக்கு வாய்ப்பளிக்க அரசுக்கு விருப்பமில்லையா? திருமணத்தினாலோ மதமாற்றத்தினாலோ இரண்டாம் பெயரை மாற்றிக்கொள்வதற்கு திருநர் அல்லாதவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதே. திருநர்களுக்கு அந்த வாய்ப்பு ஏன் வழங்கப்படவில்லை?

3. பன்முக பால்பண்பு கொண்டவர்கள் பற்றிய சிக்கல்

இந்த மசோதா, “திருநர்கள் பிறப்பால் நிர்ணயிக்கப்பட்ட பாலினம் அல்லாது வேறு பாலினம் கொண்டவர்கள். திருநங்கைகளும் திருநம்பிகளும் (பால்மாற்று அறுவை சிகிச்சை, ஹார்மோன், லேசர் முதலிய பிற சிகிச்சைகள் செய்யபட்டதோ இல்லையோ), பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால்புதுமையினர், கின்னர், அரவாணி, ஹிஜ்ரா, ஜோக்டா ஆகிய சமூக-கலாசார அடையாளம் கொண்டவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்” என்று குறிப்பிடுகிறது.

பல்வேறு பால்பண்பு கொண்டவர்களை திருநர்களோடு சேர்த்தே இந்த மசோதா பேசுகிறது. திருநர்களின் நலத்துக்கான உலக தொழில்முறை கூட்டமைப்பு (World Professional Association of Transgender Health -WPATH) இதை மாற்றுமாறு எச்சரித்துள்ளதையும் தாண்டி இந்த மசோதா இவ்வாறு குறிப்பிடுகிறது.

4. இட ஒதுக்கீடு/ உறுதியான நடவடிக்கை

திருநர்களை சமுக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்களாகக் கருதி கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான சேர்க்கை, பொதுத்துறை பணி ஆகியவற்றில் உறுதியான நடவடிக்கை தரப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த அவசியமான விவகாரத்தில் இந்த மசோதா எதுவும் தெரிவிக்கவில்லை. நாம் தொடர்ந்து திருநர்களுக்கான கிடைமட்ட இட ஓதுக்கீடை வலியுறுத்தியும் இந்த மசோதாவில் அதைப் பற்றிய விவரங்கள் இல்லை.

5. ஹிஜ்ரா குடும்பங்களின்மீதான தாக்குதல்

“குடும்பம்” என்பது இரத்த சம்பந்தத்தினாலோ திருமண உறவினாலோ தத்தெடுப்பதனாலோ ஒன்றிணைக்கப்பட்டவர்களால் ஆனது என்று இந்த மசோதா தெரிவிக்கிறது.

“பெற்றோராலோ குடும்பத்தினராலோ திருநர்களைப் பார்த்துக்கொள்ளமுடியாவிட்டால், தகுதியுள்ள நீதிமன்றம் அந்தத் திருநரை ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்கான ஆணையை வழங்கும்” என்றும் இந்த மசோதா தெரிவிக்கிறது.

இந்த மசோதாவின் முதற்கட்ட வரைவு வெளிவந்ததிலிருந்தே ஹிஜ்ரா குடும்பங்களை “குடும்பம்” என்று அங்கீகரிப்பதற்கான கோரிக்கைகள் எழுந்தன. சொந்தக் குடும்பங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட திருநர்கள், பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால் இருமையிலிருந்து வேறுபட்டவர்கள் ஆகியவர்களுக்கான ஒரே பாதுகாப்பான வெளியாக இதுபோன்ற ஹிஜ்ரா குடும்பங்கள்தான் இருந்து வருகின்றன. இந்தக் குரலை மசோதா முற்றிலுமாக நிராகரிக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு எது என்பதை மறுவரையறை செய்யாமல், இப்படிப்பட்டவர்களை ஒரு மறுவாழ்வு மையத்தில் இருக்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துவதன்மூலம், நாங்களாகவே குடும்பங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையையும், எங்களது அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

6. தேசிய திருநர் கவுன்சிலுக்கான முன்மொழிதல்

“தேசிய திருநர் கவுன்சிலில் சுழற்சி முறையில் வெவ்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து 5 பிரதிநிதிகள் இருப்பார்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு ஆகிய இடங்களிலிருந்து மத்திய அரசு 5 பேரை முன்மொழியும்” என்று மசோதாவின் ஒரு உட்பிரிவு தெரிவிக்கிறது.

இந்த தேசிய கவுன்சிலை உருவாக்குவதற்கான எந்த ஜனநாயக முறையோ அமைப்போ வரையறுக்கப்படவில்லை. அரசின் இருப்பை நோக்கிய சமமற்ற ஒரு அமைப்பாகவே இந்த கவுன்சில் இருக்கப்போகிறது. முன்மொழியப்பட்ட 25 பேரிலிருந்து 5 பேர் மட்டுமே பணியில் இருப்பார்கள். எல்லா முன்மொழிதலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த கவுன்சில் அரசுசாரா நிறுவனங்களின் பிரதிநிதித்துவம்கூட அரசின் முடிவுகளைப் பொறுத்தே இருக்கிறது.

அரசு இந்த அளவுக்குக் கட்டுப்பாடுகளை வைத்திருக்கும்போது இதில் வரப்போகிற ஊழல், முகஸ்துதி ஆகியவற்றை நாம் இப்போதே அனுமானிக்க முடியும். மத்திய அரசோடு ஒத்துப்போகிற அதிகார மையங்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு முன்மொழியப்படும். இந்த அரசில் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நடப்பதுபோல எதிர்ப்புக்குரல்கள் வெளியேற்றப்படும்.

7. “மறுவாழ்வு” என்கிற பிரச்சனைக்குரிய மொழி

பொதுநலத்துக்கான அரசு முயற்சிகளில் நான்காம் அத்தியாயத்தில், “திருநர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதன் முன்னிட்டு அவர்களை மீட்டெடுப்பது, பாதுகாப்பது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகளை அரசு எடுக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்லது. மறுவாழ்வு சார்ந்த இந்த மொழி எத்தனை பிரச்சனைக்குரியது என்று சம்பூர்ணா ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. அரசு எதிலிருந்து திருநர்களை மீட்டெடுத்து, பாதுகாத்து மறுவாழ்வு அளிக்க விரும்புகிறது என்று புரியவில்லை!

8. திருநர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு

இந்த மசோதா, “திருநர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்கள், காயப்படுத்துபவர்கள், துன்பிறுத்துபவர்கள், பாதுகாப்புக்கும் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் ஊறு விளைவிப்பவர்கள், உடல்ரீதியான, பாலிரீதியான, வார்த்தைகளால், உணர்வுரீதியான, பொருளாதாரரீதியான துன்புறுத்தலைத் தருபவர்கள், அப்படித் தரும் எண்ணத்தோடு செயல்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் குறைந்தபட்சம் 6 மாதமும் அதிகபட்சம் 2 வருடங்களும் அபராத்தோடு சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கிறது.

2016 முதலே திருநர்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் குறைந்த தண்டனைகள் வழங்கப்படுவது பற்றி நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் உண்மையாகவே இது எங்களுக்கான சமத்துவம், கண்ணியம், வாழ்வு ஆகியவற்றுகான உரிமைகளைப் பேணும் மசோதாவாக இருந்தால் எங்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் சரிநிகர் தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

9. சட்ட உரிமைகள் மீதான தாக்குதல்

“இந்த சட்டம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நிலைநாட்டும் நோக்கத்தோடு நல்லெண்ணத்தில எந்த ஒரு செயலும் செய்யப்படும்பட்சத்தில் அரசு அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள், அரசு ஆகியவற்றின்மீது எந்த சட்டரீதியான நடவடிக்கைகளோ வழக்குகளோ இருக்காது” என்று இந்த மசோதா குறிப்பிடுகிறது.

சட்டத்தைக் கேள்விகேட்கும் உரிமை எல்லா குடிமக்களுக்கும் இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த வரிகளை சேர்த்ததன்மூலம், இந்த மசோதாவை செயல்படுத்தும்போது வரும் அத்துமீறல்களையோ இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்ட வரையறைகளையோ கேள்விக்குள்ளாக்கும் எங்கள் உரிமையை இந்த அரசு எங்களிடமிருந்து பறித்துக்கொள்ள முயற்சிக்கிறது. நாங்கள் இதைக் கண்டிக்கிறோம்.

இது மட்டுமின்றி, மத்திய அரசு கெசட்டில் பதிப்பிக்கப்பட்ட ஆணையின் மூலமாக இந்த மசோதாவினால் வரும் சிக்கல்களை நீக்கவோ துரிதப்படுத்தவோ முடியும் என்றும் இந்த மசோதா தெரிவிக்கிறது. இந்த சட்டம் தொடங்கபட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஆணை இருக்ககூடாது என்று மட்டுமே ஒரு விதி குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு செயல்முறைகளின் நிதர்சனம் நமக்குத் தெரிந்த ஒன்று, எத்தனை மெதுவாக அரசு இயந்திரத்தின் சக்கரங்கள் சுழலும் என்பதை நாம் அறிவோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டத்திருத்தங்கள் கூடாது என்று சொல்வதன்மூலமாக, தனது ஆட்சிக்காலத்திலேயே இந்த மசோதாவைக் குறித்த விஷயங்கள் அனைத்தையும் செய்துகொள்வதையும், அடுத்தடுத்த அரசுகள் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது, எங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

திருநர்கள், பல்வேறு பால்பண்பு கொண்டவர்கள், பால் இருமையிலிருந்து வேறுபட்டவர்கள், ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைவரும் இந்தப் பேரழிவான மசோதாவை நிறுத்தவும் நமது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுகூடுவோம்.

நம்மைப் பற்றி…நாம் இல்லாமல் எதுவும் இல்லை!

Read the original statement in English (அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க)

~*~*~