வீரக்கல்

புலவும் அரக்கும் வந்தாகிவிட்டது, பூக்கள் பறித்தாகிவிட்டது. ஒப்பாரி வைப்பவர்கள் தொடங்கி விட்டார்கள். மாமரத்தடியில் பூசாரியும் ஒரு குவளை கள்ளையும் விழுங்கி விட்டாள். வீரக்கல் நாட்ட எல்லாம் ஆயத்தம்… தச்சனின் பணிமனையிலிருந்து கல் மட்டும் வரவேண்டும். வந்துவிடும்… ஒரு நாழிகை இருக்கே.

***

பூசல் வந்தால் வீரரும் வருவார்.

பூசலை யாரும் காணவில்லை, கேட்டார்கள். நள்ளிரவு அது. முதல் அறிகுறியாக தூரத்தில் ஓளையிடும் ஓநாய்களின் திடீர் மௌனமே. ‘ஏன் வம்பு, சிறுத்தையாக இருக்கும்’ என்று ஊர் மக்கள் பொத்திக்கொண்டும் போர்த்திகொண்டும் அவரவர் வீட்டில் அடங்கியிருந்தார்கள்.

மாரியை தவிர. மௌனம் அறிந்த மாரிக்கு இரவின் இரைவேட்டை பற்றியும் தெரியும். இங்கே, இந்த மலைச்சரிவின் பலாமரக் காடுகளும் கருமிளகின் நாற்றத்தையும் நன்கு அறிந்த மாரிக்கு சிறுத்தை இயல்பாய் நெருங்காதென்றும் தெரியும். யாராக இருக்கும்?

எட்டு குடிகளே. சேரி என்று கூட சொல்லயிலாது. ஊர் என்றார்கள். புல் அப்படி, மண் அப்படி. கொழுத்த மாடுகள், கொடுத்து வைத்த மக்கள். தொல்நகரின் வேந்தன் சாப்பாட்டு ராமன். இறைச்சிக்கு ஈடாக இணைத்து விட்டார்.

அங்கே மாரி, நடுஜாமத்தில்.

ஓநாய்கள் அடங்கி சில நொடிகளே, கள்ளர்கள் வந்தனர்… சத்தமின்றி. வாள் வீச, கத்திப் பாய, மணி அடித்தார்ப்போல் ஊரெங்கும் இரைச்சல். சற்று பொறுத்து அமைதி. அமைதி அல்ல… நிசப்தம்.

விடிந்ததும், தப்பாத கள்ளனை அனுப்பி வைத்தார்கள் மக்கள். மாரிக்கு நாள் குறிக்க கணியனுக்கு சொல்லி அனுப்பினர்.

***

வீரக்கல வந்தாகிவிட்டது. தச்சனும் அவன் பையனும் கல்லை துடைத்து விட்டு அமைக்க பூசாரியும் வந்தாள், படையல் வைக்க. ஆனால் ஒப்பாரி வைப்பவளோ நிறுத்தி கேட்டாள்: “மாரிக்கு ஏன் வேட்டி கட்டியிருக்கு?”

~*~*~

This flash fiction “Hero stone” by Nadika was first published in Verve Magazine.