தமிழ்நாடு பால்புதுமையினருக்கான வரைவுக் கொள்கையைப் பாராட்டியது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டின் பால்புதுமையினருக்கான (LGBTQIA+) கொள்கையை உருவாக்குவதில் அரசாங்கம் மற்றும் LGBTQIA+ சமூகத்தின் கூட்டு முயற்சியைப் பாராட்டியதுடன், “அனைவரையும் உள்ளடக்கி இயங்கும் தன்மை மற்றும் [பால்புதுமையினருக்கு] அதிகாரமளிப்பதற்கான”, “மாநிலத்தின் உறுதிப்பாட்டை” பாராட்டியது சென்னை உயர் நீதிமன்றம். LGBTQIA+ சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை கொடுத்துக் கொண்டுவரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  ஜனவரி 29ஆம் தேதி அன்று, LGBTQIA+ கொள்கை உருவாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துகொண்ட பிறகு இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

வரைவுக் கொள்கையை உருவாக்கியதில் நடைபெற்ற அனைத்துவிதமான ஆலோசனை கூட்டங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயலாளர் தாக்கல் செய்த நிலை அறிக்கையை சமர்ப்பித்தார் மாநில அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா. அத்துடன் வரைவுக் கொள்கையும் ஒரு சீல் செய்யப்பட்ட கவரில் சமர்ப்பித்தார். மேலும் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அரசிடம் சமர்ப்பிக்கும் முன் இறுதி வரைவில் பொதுமக்களின் கருத்தை இணைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொள்கையை வழங்கவும், மாநிலம் தழுவிய பொது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவும், அவற்றில கூறப்படும் கருத்துகளை கொல்கைக்குள் இணைக்கவும் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம். இந்த வழக்கு ஜூன் 10, 2024 அன்று அடுத்த விசாரணைக்கு வரும்.

மாநிலம் தழுவிய பொது ஆலோசனைக் கூட்டங்கள் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளன:

  • February 8: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு, விழுப்புரத்தில்; 
  • February 10: திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு, திருச்சியில்; 
  • February 13: கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு, கோயம்புத்தூரில்;
  • February 15: இராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரையில்.
  • மேலும், அனைத்து பால்புதுமையினரும் dswwomenwelfare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கருத்துக்களை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக் கொள்கை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது. சமூக நலத்துறை இயக்குனர் தலைமையில், குழுவின் உறுப்பினர்கள்: திருநங்கை செயற்பாட்டாளர் கலைமாமணி சுதா, NGO சகோதரன்; திருநம்பி அருண் கார்த்திக்; தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் வித்யா தினகரன்; NGO SAATHIIயின் துணைத் தலைவர் L ராமகிருஷ்ணன்; குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் இணை நிறுவனர் சந்திரமௌலி; ஊடுபால் மற்றும் தலித் செயற்பாட்டாளர் வினோதன்; LGBTQIA+ செயற்பாட்டாளர் புசைனா அகமது ஷா; சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா BS; மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைப் பேராசிரியர் டிஜு தாமஸ், மற்றும் ஒருங்கிணைப்பாளராக சமூக நல இயக்குநரகத்தின் இணை இயக்குனர்.

ஜனவரி 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொது மக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் வரைவில் சேர்க்கப்பட்டன.

மாநிலத்தில் உள்ள அனைத்து திருநர்கள் (திருநங்கை, திருநம்பி) மற்றும் ஊடுபால் நபர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைமட்ட இடஒதுக்கீடு (horizontal reservation); காப்பீட்டுத் தொகை, அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் ஊடுபால் குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு தட உள்ளிட்ட கொள்கையின் முக்கிய அம்சங்களை நீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிட்டது.

“நுணுக்கமான விவரங்கள் மற்றும் விரிவான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பாலினம், பாலியல்பு மற்றும் பால்பண்பு சிறுபான்மையினர் (Gender and Sexual Minorities / LGBTQIA+) கொள்கை அனைவரையும் உள்ளடக்கி இயங்கும் தன்மை மற்றும் [பால்புதுமையினருக்கு] அதிகாரமளிப்பதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பால்புதுமையினருக்கான உரிமைகளின் சிக்கலான அமைப்பை இந்த கொள்கை கடந்து போகும் நுட்பமானது, பன்முகத்தன்மை பற்றிய உரையாடலுக்கு பங்களிக்கிறது,” என்று கூறிய உயர்நீதிமன்றம், மாநிலத்திற்குள் திருநர் மற்றும் ஊடுபால் தனிநபர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை அங்கீகரிப்பதில் இந்த கொள்கை ஒரு ‘பாராட்டுதலுக்குரிய முன்னேற்றம்’ என்றும் கூறியது.

அனைத்து LGBTQIA+ சமூக உறுப்பினர்களும், அவர்களது கருத்துக்களும வரைவு செயல்பாட்டின் போது பரிசீலிக்கப்பட்டதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்த வரைவு கொள்கை செயல்பாட்டில் பங்களித்த சமூக நலத்துறை, மாநில திட்டக்குழு மற்றும் LGBTQIA+ சமூக உறுப்பினர்களை பாராட்டியதுடன், கொள்கை உருவாக்கத்தில் இவர்களின ‘கூட்டு முயற்சியை’ காட்டுவதாகவும் கூறியது. “கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் சமூக உறுப்பினர்களிடமிருந்து பரிந்துரைகளை சேகரிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கும் செயல்முறைக்கான இவர்களின அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்று நீதிபதி வெங்கடேஷ் மேலும் கூறினார்.

தனிக் கொள்கை வேண்டுமென்ற ஒரு சில திருநங்கை ஆர்வலர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கொள்கையின் செயல்முறையை துரிதப்படுத்த எந்த முயற்சியும் இல்லை என்றும், அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய கொள்கைதான் வழக்கத்திற்கு வருமென்றும் உறுதியளித்தார்.

“பங்குதாரர்களின் நலன் மற்றும் குறிப்பாக திருநர்கள் நலன் கருதப்பட வேண்டும் என்பதால் இறுதிக் கொள்கையை அமல்படுத்த இன்னும் சிறிது காலம் எடுக்கும்,” என்று அவர் மேலும் கூறியதோடு, மேலும் சில திருநர் உறுப்பினர்களை வரைவுக் கொள்கைக் குழுவில் இணைப்பது பற்றிய முடிவை அரசாங்க எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.