அமீரின் காதலன்

அமீர்,

உனைக் கண்டு

இன்றோடு

ஒருவாரம் ஆகின்றது.

கோடிப்புற

அலரிமரக் கிளையிலிருந்து

காகம் ஒன்று

மூன்று நாட்களாக

கரைந்துகொண்டிருக்கிறது.

அதே மரத்தின் கீழ்தான்

பக்கத்துவீட்டு பாத்திமாவின்

வெள்ளடியன் சேவல்

போன ஞாயிறு அன்று

அஸ்ஸலாத் தொழுகை முடித்து

வீடுதிரும்பிய போது

கண்கள் சிவக்க

மரித்துக்கிடந்தது.

‘துர்சகுனம்’

அனா கூறிக்கொண்டாள்…

~*~*~

கபரிஸ்தானை

அண்டிய கடல் பகுதி.

ஒக்ரோபஸ் ஒன்று

வலிந்து தள்ளும்

கடல்நீரோட்டத்திலிருந்து விலகி

பாசிகள் படிந்த

வழுவழுப்பான பாறை ஒன்றை

தனது

பழுப்புநிறக் கால்களினால்

இறுகப் பற்றிக்கொள்கிறது.

அமீர்,

ஒடுக்கும்

இவ் வாழ்வின்

மையவோட்டத்திலிருந்து விலகி

அன்பை பற்றிக்கொண்டோம்.

ஆம்,

நாம்

‘விலகல்கள்’

~*~*~

சலீம்

படகேறிச் சென்ற போது

அனா பார்த்த பார்வை.

தன்

கைகளில் படிந்த

முதல் மாதவிடாய் ரத்தத்தினை

முல்லா பார்த்த பார்வை.

அமீர்,

முதல் தருணம்

காதலை உணர்பவனிடமிருந்து

வேறு எதனை எதிர்பார்க்கின்றாய்,

உன்னை

வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதனை விட?

~*~*~

அனா

கருவாடுகளை

காயப்போடும் போதெல்லாம்

சலீமை நினைத்து

சிந்திய கண்ணீரில்

இக் கபரிஸ்தான் கடற்கரையின்

ஒவ்வோர் மணற்துகளும்

சபிக்கப்பட்டது.

ஒன்றன்பின் ஒன்றாக

ஒவ்வோர் அலையும்

அதை

கழுவிச் செல்ல முனைகின்றது,

எனினும் முடிவதில்லை.

அமீர்,

இது

சபிக்கப்பட்ட கடற்கரை

நம் காதலுடன் சேர்த்து...

~*~*~

கரீபியன் பகுதியிலிருந்து

கீழ்தேசம் வரும்

செந்நிறக் கால்கள் கொண்ட

பிளமிங்கோ பறவைகளை

கபரிஸ்தான் கடற்கரைகளில்

நான்

ஒருபோதும் கண்டதில்லை.

சலீமின் மூத்தமகன் அப்துல்லா

ரசூலின் படகுமேல் நின்ற

இரு பிளமிங்கோ பறவைகளை நோக்கி

வியப்புடன்

‘சூரியப் பறவைகள்’

என்ற போது

என் மனம் முழுவதும்

நீயே வியாபித்திருந்தாய்.

அமீர்,

உனது அறையின்

ஜன்னல் வழியே

மும்பை புறநகர் பகுதி

புறாக்களைக் காணும்

நமது கனவை

எண்ணிக்கொண்டேன்.

ஆம்,

இக் கடல்

இவ் வானம்

இப் பறவைகள்

யாவும் நமக்கானதல்ல…

~*~*~