ஒரு வன்முறையின் கதை – கவிதை

சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை

ஒரு வன்முறையின் கதை

சில நேரங்களில்

நான் ஓர் அடிமையாய் ஆகிவிடுகிறேன்.

மண்டியிட்டு அமர்ந்து

நக்குகிறேன்,

சப்புகிறேன்,

முத்தமிடுகிறேன்,

முடியோடு என் தலையை இறுக்கி

முன் தள்ளும்போது

துரிதமாய்த் துடிக்கும் என் இதயம்

அதன் சக்தி திரட்டி உந்த

வேகங்களின் அலை தாங்கி

நரம்பு நுனி சதைகளில்

செயல்படுகிறேன்.

புழுத்துப்போன காயங்களிலிருந்து

நீரும் ரத்தத்திற்குமான சந்திப்பில்

ஒரு தோட்டாவைப் போல

என் உடல்

துடித்து மீள்கிறது.

என் புழுத்துப்போன காயங்களின்

நீரையும் உதிரத்தையும்

கண்ணீரில் ஓருடலும்

எச்சிலின் நாவும்

நக்கி நனைக்கும்.

எல்லோரிடமும்

புழுத்துப்போன காயங்கள்

உயிர்ப்போடு இருக்கின்றன.

~*~*~

“என் வாலை எடுத்துக்கோ”

நான் தூக்குக் கயிறை

முடிச்சிடும்போது

பூனைகளில் மொழியைப் பேசுபவள் ஆகியிருந்தேன்.

“இந்த வாலு புடிக்கல”

நான் திரும்பித் தேடியபோது

அந்த பூனை

சன்னல் தாண்டி

உள்ளே குதித்து வந்தது.

நான் இறங்கி

அமைதியாய் நடந்து

அதனருகில் போனேன்.

அது கண்களை சுருக்கிக்கொண்டு

என்னைப் பார்த்தது, மேலே

தூக்குக் கயிறைப் பார்த்தது.

“என்னோட வாலு நல்லாருக்கா?”

“நல்லாருக்கு”

நான் அமர்ந்து

அதன் வாலைத் தொட்டுப் பார்த்தேன்.

ஜிலுஜிலென்று இருந்தது.

“ப்ச்…எனக்குப் புடிக்கல”

“நீ ஏன் என் வால பயன்படுத்திக்கக்கூடாது?”

என் தோளில் ஏறி

கழுத்தை சுற்றி வைத்து

அளவு பார்த்தது.

எனக்கு

ஜிலுஜிலென்று இருந்தது.

“நான் வெட்டித் தரவா?”

மறுப்பாய்த் தலையாட்டினேன்.

“கத்தி எங்கே?”

என் இழுப்பறையிலிருந்து எடுத்து வந்தது.

நான் பிடுங்கித் தூரப் போட்டேன்.

பூனை

என் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது.

கண்கள் கலங்கி

அதன் மேல்

இரண்டு சொட்டுகள் விழுந்தன.

“ஏன்?”

“வலிக்கும், வேணாம்”

நான் மல்லாந்து படுத்து

அழ ஆரம்பித்திருந்தேன்.

அது என் மீது ஏறி படுத்துக்கொண்டது.

“அந்த _ _ _

கருப்பு சட்டைக்காரந்தான் வரான்,

நீ _ _ _ ஏன் _ _ _

நீ வரமாட்ற?”

மனித மொழியில் பூனை மொழியுடன்

உளறி அழுதேன்.

“நீ நினைச்சிக்கோ, நான் வருவேன்”

தூரத்தில் கேட்டது.

நான் விழித்துப் பார்த்தேன்.

தூக்கு தொங்கிக்கொண்டிருந்தது.

நான் முடிச்சை அவிழ்க்கும்போது

கைகளில்

ஜிலுஜிலென்று இருந்தது.

~*~*~