இந்தியாவின் உயர்மட்ட நீதி அமைப்புகளில் முதன்முறையாக, தன்னை ஒருபாலீர்ப்பு கொண்டவராக வெளிப்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் சௌரவ் கிர்பால் விரைவில் நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு இயங்கும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உச்சநீதிமன்றக் குழு, பணி நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த முடிவுகளை எடுக்கிறது. இந்தக் குழு, சௌரவ் கிர்பால் பெயரை டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பரிந்துரைத்திருக்கிறது. ஒன்றிய அரசு இதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்றாலும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடமே இருக்கிறது என்பதால் கிர்பால விரைவில் நீதிபதியாவதற்கே வாய்ப்புகள் அதிகம். 2017ல் அவரது பெயர் முதல்முறையாகப் பரிசீலிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியாகி இருக்கிறத. அவரது பாலீர்ப்பு காரணமாகவும் அவரது இணையர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
சௌரப் கிர்பால் டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் படித்தவர். இவர் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலின் மகனுமாவார். வரவிருக்கும் இந்தப் பணிநியமனம் இந்தியாவின் பால்புதுமையினருக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் விருப்பத்தோடு உடலுறவு கொள்வதைக் குற்றமாக அறிவிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை நீக்கப் போராடிய பல வழிக்கறிஞர்களில் கிர்பாலும் ஒருவர்.
“கிர்பாலை டெல்லி உச்சநீதிமன்றத்தில் பணியமர்த்தும் முடிவு நல்லது என்று நினைக்கிறேன்” என்கிறார் வழக்கறிஞர் சத்யஶ்ரீ சர்மிளா. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலில் சேர்க்கப்பட்ட முதல் திருநங்கை இவர். “சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். பாலினம் அல்லது பாலீர்ப்பு காரணமாக யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. நான் ஒரு திருநங்கை. என் பாலினத்தைக் காரணமாக வைத்து எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதால் நானும் பிற திருநர்களும் தொடர்ந்து போராடவேண்டியிருக்கிறது. இந்த பணி நியமனத்துக்காக சௌரவ் கிர்பாலும் நான்கு ஆண்டுகள் போராடியிருக்கிறார். அவருக்கு இந்தப் பதவி கிடைத்ததில் மகிழ்ச்சி” என்று அவர் தெரிவித்தார்.
இந்த பரிந்துரை முக்கியமானது என்றபோதிலும்,இந்தியாவின் உயர்மட்ட நீதிமன்ற பதவிகளில் பொதுவாக அமர்ந்திருக்கும் அதே மேட்டுக்குடியைச் சேர்ந்த சாதி மற்றும் வர்க்கப் பின்னணி உள்ளவர்தான் கிர்பால் என்று வழக்கறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கிறார்கள். “377 வழக்கைப் பொறுத்தவரை அவரது பெயர் பிரபலமாகப் பேசப்பட்டது. பால்புதுமையினருக்கு அவரது நியமனம் முக்கியமானதாகவும் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தளத்தில் பிரதிநிதியாக சென்று அமரும் முதல் பால்புதுமையாளரான இவர், ஆதிக்கப் பாலினத்தைச் சேர்ந்த, செல்வாக்குடைய ஒரு ஆண் என்பதும், அவர் உச்ச கல்வி நிறுவனங்களில் படித்திருக்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும். அவரது சூழலில் பிறந்து வளராத பிற பால்புதுமையினருக்கு இந்தப் பதவி சாத்தியமில்லை” என்கிறார் சட்டக்கல்வி பட்டதாரி ரேணுகா.
சாதி மற்றும் பாலினத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் உயர்மட்ட நீதி அமைப்புகளில் பன்முகத்தன்மை போதவில்லை என்பது நெடுங்காலமாக இருந்து வரும் விமர்சனம். குறிப்பிட்ட சில குடும்பங்களிலிருந்து வருபவர்களே இந்தத் துறையில் அதிகமாக வெற்றிபெறுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை கிர்பாலின் பாலீர்ப்பு முக்கியமானது என்றாலும், ஏற்கனவே வெற்றிபெறக்கூடிய வட்டத்தில் இருந்தபடி அவர் மேலே வந்திருக்கிறார் என்பதும் கவனிக்கப்படவேண்டியது. “பன்முகத்தன்மையை அதிகப்படுத்த பல வழிகள் உண்டு” என்கிறார் சட்ட ஆராய்ச்சியாளரான கௌதமன் ரங்கநாதன். “இருக்கின்ற அமைப்புகளுக்குள் மக்களை எடுத்துச் செல்வதுதான் பன்முகத்தன்மை என்றால் இந்த உத்தரவு சிறந்தது. ஆனால் இவர் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மகன். நீதித்துறைக்குள் ஏற்கனவே புழங்கிவரும் ஒருவரை உயர்நீதி மன்ற நிலைக்கு உயர்த்துவது உண்மையான பன்முகத்தன்மையா என்ன? நவதாராளமயம் சொல்லும் பன்முகத்தன்மை பற்றிய வாதத்துக்கு இது பொருந்துமே தவிர, நீதித்துறையை இந்த உத்தரவு எந்த வகையிலாவது மாற்றுமா என்பது கேள்விக்குறிதான்” என்று அவர் விளக்குகிறார்.
“அதிகாரம் போன்ற சில அம்சங்களைப் பற்றிய கேள்விகள் வரும்போது, பிரதிநிதித்துவ அரசியலின் முக்கியத்துவத்தை மக்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியல் மாணவர் அகில் காங். “செல்வாக்கு உள்ள, ஒரு பாலீர்ப்பு கொண்ட, ஆதிக்க சாதியைச் சேர்ந்த, வர்க்கப் படிநிலையில் மேலே உள்ள ஒரு ஆண், தன் வாழ்வில் முன்னேறியிருக்கிறார். இதை ஒரு பெரிய புரட்சி நடந்த தருணமாக நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவரது ஒருபாலீர்ப்பு என்பது அவரது சாதி மற்றும் வர்க்கத்தின் அமைப்பியல், அந்த அமைப்பியலே அவரது ஒருபாலீர்ப்பைத் தெரிவிக்கவும் செய்கிறது” என்கிறார்.
இந்தியாவில் பால்புதுமையினரின் உரிமைகளைப் பொறுத்தவரை வெளிப்படையாக இப்போது தெரியும் ஒரு பிளவுக்கு மத்தியில் சௌரவ் கிர்பாலின் முன்னேற்றம் வந்திருக்கிறது என்கிறார்கள் குயர் மக்கள். கிர்பாலின் பணி நியமனம் உட்பட பல்வேறு வெற்றிகளை சந்தித்துவரும் நிலையிலும் பால்புதுமையினர் மற்றும் திருநர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும்போது பல தளங்களில் அவர்களுக்கு வலுவான எதிர்ப்பு வருகிறது. உதாரணமாக, ஆசிரியர்களின் விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட என்.சி.ஈ.ஆர்.டி கையேடு இந்தியக் கலாச்சாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சிலர் வாதிட்டனர்.
“ஒருபாலீர்ப்பு தேசியவாதத்தின் நீட்சியாக, ஒருபாலீர்ப்பு இந்து தேசியவாதம் (Homo Hindu nationalism) என்ற சொல்லை நிஷாந்த் உபாத்யாய உருவாக்கியுள்ளார். இன்றைய சூழலில் இந்த சொல்லாக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என்கிறார் கௌதமன். “ஒருபாலீர்ப்பு இந்து தேசியவாதத்தை முன்னெடுக்காத எந்த குயர் இயக்கமும் சந்தேகத்துடனேதான் அணுகப்படும். முன்பே நீதி வட்டாரங்களில் அறியப்பட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த (கிர்பாலைப் போன்ற) ஒரு ஒருபாலீர்ப்பு ஆண், இந்த இந்து தேசியவாத இயக்கத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்” என்கிறார் அவர்.
இப்போது சௌரவ் கிர்பால் அடைந்திருக்கும் பதவி பல்வேறு காரணங்களால் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்கிறார் ரேணுகா. “அவர் ஒரு அற்புதமான வழக்கறிஞராக இருக்கலாம். ஆனால் அவரது சாதி மற்றும் வர்க்கப் பின்புலம், அதனால் அவருக்குக் கிடைத்த நட்புறவுகளை இந்த வெற்றியின் பின்னணியிலிருந்து நாம் ஒதுக்கிவிடமுடியாது. ஆகவே அவரது முன்னேற்றம் என்பது, ஒடுக்கப்பட்ட பிற தளங்களைச் சேர்ந்த குயர் மக்களை முன்னேற்றுவதில் உதவாது என்பதே உண்மை. வெளிப்படையாக சொல்லப்போனால், தந்தையர் வழக்கறிஞர்களாக இருக்கும் குடும்பத்திலிருந்து வந்த ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு கொண்ட ஆதிக்கசாதி ஆண்களால் இந்தத் துறை கட்டியாளப்படுகிறது. ஆகவே இதை உடைத்து முன்னேறுவது மிகவும் கடினம்” என்கிறார்.
ஆனால் இப்போது சட்டக்கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த உத்தரவும் அதனால் பால்புதுமை அடையாளங்கள் மீது வந்திருக்கும் வெளிச்சமும் புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது. “இது ஒரு நல்ல முடிவு என்று நினைக்கிறேன். எல்லா விதமான மக்களிடமிருந்தும் பிரதிநிதித்துவம் தேவை, பன்முகத்தன்மையை நாம் அதிகரிக்கவேண்டியிருக்கிறது. அது சட்டங்களின்மீதான கண்ணோட்டத்தையும் செம்மைப்படுத்தும்” என்கிறார் சட்டக்கல்லூரி மாணவரான ரத்தன். “இதுவரை நடைமுறையில் இருப்பதுபோல், ஒரு கண்ணோட்டத்தில் மட்டுமே சட்டம் பார்க்கப்படாது. பெண்ணியப் பார்வையில், ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில், விளிம்பு நிலையில் இருப்பவர்களின் பார்வையில் அது பார்க்கப்படும். நீதித்துறை சட்டங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதையும் அது மாற்றும், அனைவரையும் உள்ளடக்கியதாக அவர்கள் சட்டத்தை அணுகுவார்கள். இது கடந்தகாலத்தில் இல்லை என்று நினைக்கிறேன்” என்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்ற ரேணுகா, “இந்த வழித்தடத்தில் இறுதி இலக்காக கிர்பாலின் நியமனத்தைப் பார்க்கக் கூடாது. அப்படியானால் நாம் போராட்டத்தை நிறுத்திவிடுவோம். குறைந்தபட்சம் கீழ்மட்ட நீதி அமைப்புகளிலாவது பால்புதுமையினருக்கான இடஒதுக்கீடு தேவை” என்கிறார்.
“இந்தத் துறைக்குள் விளிம்பு நிலை மக்கள் அதிகமாக வரவேண்டும் என்றால், வாயிற்கதவுகளிலும் எந்தப் பாரபட்சமும் இல்லை என்பதை நாம் உறுதிசெய்யவேண்டும்” என்கிறார் சத்யஶ்ரீ. “திருநர் குழந்தைகள் பள்ளிப்படிப்பையும் கல்லூரிப்படிப்பையும் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். அவர்களால் எப்படி வழக்கறிஞர்களாக முடியும்? திருநர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தால்தான் எங்களால் மேலே வர முடியும். வழக்கறிஞர்களாகவோ நீதிபதிகளாகவோ மாறவேண்டுமானால் முதலில் சட்டக்கல்லூரிகளில் படிக்க எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை” என்கிறார் அவர்.
The News Minute-ல் முதலில் வெளியிடப்பட்டது. உங்கள் ஆதரவை தெரிவிக்க: https://www.thenewsminute.com/supportus