இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஒருபால் திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதை எதிர்த்து மனு

பதினெட்டு வயது நிரம்பய இருவரின் ஒப்புதலோடு நடைபெறும் ஒருபால் புணர்ச்சி குற்றமாகாது என்று 2018-ல் உச்சநீதிமன்றம் அறிவித்தபின்பும், ஒருபால் தம்பதியருக்கு இடையே சட்டப்படி திருமணங்கள் நடப்பதில் சிக்கல் இருக்கிறது. எனவே ஒருபால் திருமணங்களை இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டம் ஆகியவற்றின்கீழ் அங்கீகரிப்பதாக உத்தரவிடவேண்டும் என்று சில ஒருபாலீர்ப்பு கொண்ட தம்பதிகளாலும், பால்புதுமையினராலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எட்டு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தது. இதுபற்றிய விசாரணை பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் டி.என். பட்டேல் மற்றும் ஜோதி சிங் தலைமையிலான பெஞ்ச் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் சேவா ந்யாயா உத்தன் ஃபவுண்டேஷன் அமைப்பு ஒருபாலீர்ப்பு திருமணங்களின் அங்கீகாரம் பற்றிய மனுவில் தங்களது விண்ணப்பத்தையும் கேட்குமாறு டிசம்பர் 3-ம் தேதி அன்று கோரிக்கை வைத்திருக்கிறது.

அந்த விண்ணப்பத்தில், இந்து திருமணச் சட்டத்தின்படி ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கக் கூடாது என்றும், காலம் காலமாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடப்பதை மட்டுமே இந்து மதம் அனுமதிக்கிறது என்றும் சேவா ந்யாயா அமைப்பு தெரிவித்திருக்கிறது.

“இந்து சமூகங்களில், திருமணங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடவுளர்கள், மத நூல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. ஆகவே இந்தத் திருமணங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான விழுமியங்கள் உண்டு. எனவே இந்து திருமணச் சட்டத்தின்கீழ் ஒருபால் திருமணங்களை அங்கீகரிப்பது இந்துத் திருமணம் என்ற மத அமைப்புக்கே எதிரானது. இந்து மதத்தின் திருமணக் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் பரம்பரைச்சொத்து, தத்தெடுத்தல், இந்து சமூகத்தின் மதச் சூழல் ஆகியவற்றையும் இந்த மாற்றங்கள் பாதிக்கும்” என்று விண்ணப்பத்தில் கூறி இருக்கும் சேவா ந்யாயா அமைப்பு “ஒருபால் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டங்களின் கீழ் அங்கீகரிப்பதே எளிது. அதுவே நடைமுறைக்கும் ஒத்துவரும். ஏனெனில், சிறப்புச் சட்டங்களில், திருமணம் என்பது மதத்தின் அடிப்படையில் இயங்குபவையாக இல்லாமல் இணையர்களுக்கு இடையிலான அங்கீகாரமாக  பார்க்கப்படுகிறது.” என்றும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த வழக்கறிஞர் ஷ்ஷாங்க் ஷேகர் ஷா, “வேதங்களின்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே நடக்கவேண்டும். சில சமூகக் கடமைகளையும் மதக் கடமைகளையும் நிறைவேற்ற ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இந்துத் திருமணங்களின்போது சொல்லப்படும் வேத மந்திரங்கள், திருமணத்தை விவரிக்கும் வேத மந்திரங்கள் ஆகியவை, ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் நடக்கும் திருமணத்தையே குறிப்பிடுகின்றன. இதன் சாராம்சம் மாறாமலேயே காலம்காலமாக இது இந்து சம்பிரதாயங்களில் கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.

“இந்து மதத்தைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல, இது ஒரு மத செயல்பாடு. இந்துக்களின் காலம்காலமான, தீங்கற்ற நம்பிக்கைகளை பாதிக்கும்படி இந்து திருமண சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு அளித்திருக்கும் மத உரிமைகளில் அது குறுக்கிடுவதாகும்” என்று அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மற்ற மதத் திருமணச் சட்டங்களில் அங்கீகாரம் தராமல் இந்து திருமண சட்டத்தில் மட்டுமே மாற்றம் கொண்டுவந்தால், பால்புதுமையினர் சமூகத்தில் அது மதரீதியான வேறுபாட்டை விதைக்கும். தவிர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் இது எதிரானது. இந்துக்கள் மட்டுமல்லாமல், இந்து மதத்தின் வடிவங்களான வீர சைவா, லிங்காயத், ப்ராஹ்மோ, ப்ரார்த்தனா, ஆர்ய சமாஜ், புத்தமதம், ஜைன மதம், சீக்கிய மதம் ஆகிய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கும் இந்து திருமண சட்டம் பொருந்தும். புதிய மதங்களின் தனிப்பட்ட சட்டங்களான இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், இஸ்லாம் ஷரியத் சட்டம், ஆனந்த் திருமண சட்டம் ஆகியவற்றில் ஒருபால் திருமணங்கள் அனுமதிக்கப்படவில்லை எனும்போது, இந்து திருமண சட்டத்தில் மட்டும் அதை அனுமதிப்பது நியாயமாக இருக்காது” என்று விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை மனு பற்றிய விசாரணையில், “இந்தியாவில் திருமணம் என்பது இரு நபர்களுக்கிடையே நடப்பது அல்ல, உயிரியல் ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழும் உறவு அமைப்பு” என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசு ஒருபால் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுபோன்ற விஷயங்களில் சட்டரீதியாகத் தலையிட்டால், தனிப்பட்ட சட்டங்களின் சமநிலையே சீர்குலைந்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.

ஒன்றிய அரசின் சார்பாக வாதிட்ட அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “வாழ்க்கைத் துணை என்றால் கணவன் அல்லது மனைவியைத்தான் குறிக்கும். திருமணம் என்பது ஆண்-பெண் தம்பதியினருக்கு இடையே நடக்கும் நிகழ்வைத்தான் குறிக்கும். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தனியான பதிலைத் தரத்தேவையில்லை” என்று வாதிட்டார். இருவரின் சம்மதத்தோடு நடக்கும் ஒருபால் புணர்ச்சி குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை மனுதாரர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.