உலகம் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளட்டும் – கவிதை

சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை

இந்த சிறிய உலகில்
ஒருவனுக்கு மூக்கு அறுபட்டிருந்தது.
ஒருத்திக்கு முலை அறுபட்டிருந்தது.
ஒருவனுக்கு இடதுகண் தோண்டப்பட்டிருந்தது.
ஒருத்திக்கு யோனி தோண்டப்பட்டு
வீங்கியிருந்தது.
ஒருவனுக்கு மலத்துவார சுவரெல்லாம் நோவெடுத்தது.
ஒருத்திக்கு யோனி
சுவரெல்லாம் கிழிந்திருந்தது.
ஒருவனுக்கு இதயத்தில் ஓட்டை விழுந்தது.
ஒருத்திக்கு மூளையில் அடிபட்டிருந்தது.
ஒருவனுக்கு மூளை இதயம்
இரண்டும் அடிவாங்கியிருந்தது.
ஒருத்திக்கு யோனிச்சுவரும் குறியும்
பிதுங்கியிருந்தன.
ஒருவனுக்கு முன் சொன்ன
முதல் இரண்டும் இருந்தது.
ஒருத்திக்கு இரண்டாவதும் மூன்றாவதும் சேர்ந்து இருந்தன.
ஒருவனுக்கு நான்கும் ஐந்தும்
ஒருத்திக்கு ஐந்தும் ஆறும்
ஒருவனுக்கு ஒன்றும் ஏழும்
ஒருத்திக்கு ஆறும் இரண்டும்
மூக்கு அறுபட்டிருந்தவன்
யோனியைத் தோண்டியிருந்தான்.
இதய ஓட்டை உள்ளவள்
ஒருவன் மூளையை அடித்திருந்தாள்.
அந்த சிறிய உலகில்
காயங்களும் தழும்புகளும்
ஒன்றையொன்றைப் பற்றிக்கொண்டிருந்தன.
ஆறாத்தழும்புகள் காயங்களை ஏற்படுத்தின.
அந்த காயங்கள்
ஆறாத்தழும்புகளை உண்டாக்கின.
என்னவென்று தெரியாவிட்டாலும்
இந்த சுழற்சி நிற்க
அனைவரும் காத்திருந்தனர்.
அதற்கு
உலகம்தான் மனம் வைக்க வேண்டும்.
சிறிய உலகம் பெரிதாகட்டும்.
அந்த பெரிய உலகில்
மழை பெய்யட்டும்
அருவி கொட்டட்டும்
வானவில்கள் விளையாடட்டும்.
உலகம்
கொஞ்சம் ஏற்றுக்கொள்ளட்டும்.
கொஞ்சமே கொஞ்சம் அன்பு செய்யட்டும்.

~*~*~

ஒலிவமர இலைகள்
மெல்ல அசைந்துகொண்டிருந்தன.
என் நாவு தங்கி தங்கி 
வருடிக்கொண்டிருந்தது.
தேவாலயப் பியானோவின் டிங் டிங் 
காற்றின் நரம்புகளை நீவிவிட்டது.
என் விரல்கள் 
தொட்டுத் தடவி நின்றுகொண்டிருந்தன.
நீண்ட பிரார்த்தனையின் ஆரம்பத்தில்,
என் தொண்டையின் அடியிலிருந்து
விசித்திர சப்தம் எழுந்திருந்தது.
அல்லேலூயா கீதம்
இனிமையில் இணைந்து ஒலித்தபோது
நாவும் உதடுகளும் விரல்களும் 
ஒருமையில் செயல்பட்டுக்கொண்டிருந்தன.
சரீரமும் உதிரமும்
உலகமாந்தர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டபோது
அந்த பேரன்புக்காரரின்
விந்துப்பால்
அவரின் குத்துப்பட்ட நெஞ்சில்
தெளித்து ஓய்ந்திருந்தது.
அவர் சற்றே குனிந்து
சிலுவையிலிருந்து புன்னகைக்கிறார்.

~*~*~