பால்புதுமையினருக்கான போலிச் சிகிச்சை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் குழுமம் பதில்

போலிச் சிகிச்சை/மருத்துவம் (Conversion therapy) போன்ற சட்டவிரோத நடைமுறைகளை பரிந்துரைக்கும் மருத்துவ நிபுணர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கூறியிருக்கிறது.

பால்புதுமையினரின் (Queer persons) பாலீர்ப்பு (Sexual orientation) அல்லது பாலினத்தை (Gender) ‘குணப்படுத்தல்’ என்கிற பெயரில்மருத்துவ வல்லுநர்களால் மேற்கொள்ளப்படும் போலி மருத்துவம் (Conversion Therapy) சட்டவிரோதமானது. இது ஒரு தவறான தொழில்சார் நடைமுறை என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) பதிலளித்திருக்கிறது.

சென்னையைச் சேர்த்த ஒருபாலீர்ப்புடைய பெண் இணையர் காவல்துறையின் சீண்டலிருந்து பாதுகாப்பு கோரி தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் நீதி ஆயம் 21, பிப்ரவரி 2022 அன்று கொடுத்துள்ள ஆணையில் பால்புதுமைச் சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள LGBTQIA+ பதங்களை உள்ளடக்கிய சொற்களஞ்சியத்தை வெளியிட்டது. அந்த ஆணையில் மருத்துவக் குழுமத்தின் சமர்ப்பிப்பையும் பதிவிட்டுள்ளது.

“போலிச்சிகிச்சை ஒரு தவறான தொழில்முறை” என்ற வல்லுநர் குழுவின் பரிந்துரையை முக்கியமானது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இத்தகு சட்டவிரோத நடைமுறைகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் கூறியிருக்கிறது. மேலும், இந்த வல்லுநர் குழு பாலீர்ப்பையோ பாலினத்தையோ மாற்ற முயல்வதை அல்லது தலைப்படுவதை “மருத்துவத்துறையின் தவறான தொழில்முறையாக புரிந்துகொள்ள வேண்டும்” என்பதை “மிகத் தெளிவாக” உணர்த்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இந்த வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தரப்பட்டுள்ள தேசிய மருத்துவக் குழுமத்தின் 15.02.2022 ஆம் தேதியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவக் குழுமத்தின் ஒழுங்குமுறை மற்றும் மருத்துவப் பதிவு ஆணையத்தை (Ethics and Medical Registration Board) இந்த “போலிச் சிகிச்சையை” செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளது” என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், தேசிய மருத்துவக் குழுமச் சட்டம், 2019 இன் 27ஆம் பிரிவு, மாநில மருத்துவக் குழுமங்கள் தொழில்முறை மற்றும் ஒழுங்குமுறை நடத்தைகளை உறுதிசெய்யவும், தனக்கு அதிகாரம் உள்ள இடங்களில் தவறான தொழில்முறை நடத்தைகளுக்கு எதிராக மாநில மருத்துவக் குழுமம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

“இதன்படி, வல்லுநர் குழுவின் அறிக்கையுடன் பரிந்துரைகளையும் உடனடியாக அனைத்து மாநில மருத்துவக் குழுமங்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிக்குமாறு தேசிய மருத்துவக் குழுமத்திற்கு வழிகாட்டல் வழங்கப்படும்” என்று உயர்நீதிமன்றம் அதன் ஆணையில் கூறியுள்ளது. மேலும், மாநில மருத்துவக் குழுமம் வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தவறான தொழில்முறை நடத்தைகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அத்தகு மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இவ்வாணை உறுதிப்படுத்தும். நான்கு வார காலத்திற்குள் இந்த வழிகாட்டலை தேசிய மருத்துவக் குழுமம் அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.

சமீபத்தில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த சமயத்தில், காவல்துறையினர் பால்புதுமையினரை சீண்டுவதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சார்நிலை காவலர்கள் நடத்தை விதிகள், 1964 இல் புதிய விதியை ஏற்றும் 24-C சட்டத்திருத்தை அமல்படுத்தியது. இந்தச் சட்டத் திருத்தமானது பால்புதுமையினரையோ அச்சமூகத்தின் நலனுக்காக உழைப்பவர்களையோ காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

முழு ஆணையை படிக்க…

The News Minute-ல் முதலில் வெளியிடப்பட்டது. உங்கள் ஆதரவை தெரிவிக்க: https://www.thenewsminute.com/supportus