பால்புதுமைச் சமூகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, சொற்களஞ்சியத்தைத் தொகுக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சிலருடன் ‘தி நியூஸ் மினிட்’ ஒரு உரையாடலை நிகழ்த்தியது.
பால்புதுமையினர் (LGBTQIA+) சமூகத்தின் வரலாற்று நிகழ்வாக பிப்ரவரி 21, திங்களன்று சென்னை உயர்நீதிமன்றம் பால்புதுமைச் சமூகத்தினர் தயாரித்த சொற்களஞ்சியத்தை வெளியிட்டது. மேலும், இந்தச் சொற்களஞ்சியம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்ததைக் காட்டிலும் பண்பட்டதாக இருந்ததாகவும் குறிப்பிட்டது. அரசு சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தைக் காட்டிலும் கண்ணியமானதாகவும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாங்கோடும் இருக்கும் பால்புது சமூகத்தினர் சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசை அறிவுறுத்தினார். பால்புதுமையினரின் இந்த சொற்களஞ்சியம் குயர் சென்னைக் க்ரோனிக்கள்ஸ் (QCC), ஓரினம், தி நியூஸ் மினட் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பினால் தொகுக்கப்பட்டது.
பிப்ரவரி 21, 2022 திங்களன்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பால்புது நபர்களை ஊடகம், பத்திரிக்கை மற்றும் சமுதாயம் மதிப்பளிக்கும்படி குறிப்பிட ஏதுவான சொற்களஞ்சியத்தை கொண்டுவந்த தமிழ்நாடு அரசின் முயற்சியை பாராட்டினார். கடந்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசின் சொற்களஞ்சியத்திலிருந்த சில பதங்களுக்கு மாற்றை பால்புதுசமூகம் பரிந்துரைத்துள்ளதாக தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சொற்களஞ்சியத்தை உருவாக்குவதன் முழுமுதற் நோக்கமே பால்புதுமையினர் சமூத்தை குறிப்பிட, பொருத்தமான சொற்பதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதும், அப்படி பயன்படுத்தப்படும் பதங்கள் எந்தவிதத்திலும் அவர்களை இழிவுபடுத்துவதாகத் தொடரக்கூடாது என்பதுமே ஆகும். ஆதலால், நான் பால்புதுசமூகத்தினர் சமர்ப்பித்த மாற்றுச் சொற்களஞ்சியத்திற்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளேன்” என நீதிமன்ற ஆணை கூறுகிறது.
பால்புதுமைச் சமூகத்தினை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியதன் தேவை குறித்தும், ஏன் பயன்படுத்தும் மொழியும் அதன் சொற்பண்புத்திரள்களும் முக்கியம் என்பது குறித்தும் தி நியூஸ் மினிட் இந்த மாற்றுச் சொற்களஞ்சியத்தைக் கட்டமைக்கும் பணியில் பங்கெடுத்தப் பலருடன் பேசியது.
பால்புதுமைச் சமூகத்தின் சொற்களஞ்சியமானது SOGIESC (Sexual Orientation – பாலீர்ப்பு, Gender Identity and Expression – பாலின அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு, and Sex Characteristics – பால்பண்புகள்) வரைச்சட்டத்தின் அடிப்படையிலான 28 சொற்பதங்களைக் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொண்டப் பட்டியலைக் கொண்டுள்ளது. இச்சொற்களஞ்சியமானது மதிப்பளிக்கும்படியான, பால்புதுமைச் சமூகத்தினால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்படியுமான சொற்பதங்களை முன்வைக்கிறது. இந்த சொற்களஞ்சியம் Transgender Persons – திருநர்; Queer Persons – பால்புதுமையினர்; Cis Gender – ஆதிக்கப் பாலினம்; Gay man – மகிழ்வன்; Intersex – ஊடுபால்; Gender Fluid – திரவநிலை பாலின அடையாளம்; Pansexual – அனைத்துப்பாலீர்ப்பு போன்ற சொற்பதங்கள் மட்டுமின்றி Gender dysphoria – பாலின முரண்பாட்டு மனஉளைச்சல், Coming out – வெளிப்படுத்திக் கொள்ளுதல்; Conversion Therapy – போலிச்சிகிச்சை Romantic orientation – ரொமாண்டிக் ஓரியண்டேஷன் போன்ற சொற்தொடுப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், அனைத்து ஊடகங்களும் பால்புது நபர்களைக் குறிப்பிடும்போதும் அடையாளப்படுத்தும்போதும் இந்த மாற்றுச் சொற்களஞ்சியத்திலுள்ள பதங்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. “சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பால்புது சமூகத்தினரின் பரிந்துரைகளை ஏற்று திருத்தப்பட்ட புதிய சொற்களஞ்சியத்தை வெளியிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணையில் கூறியுள்ளார்.
காதலுறவில் இருக்கும் இரு பெண்கள், தங்கள் குடும்பங்களின் எதிர்ப்பிலிருந்து பாதுகாப்பு கோரிய முறையீட்டு மனுவைநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்துக் கொண்டிருக்கும்போது இந்த சொற்களஞ்சியச் சிக்கலானது எழுந்தது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்தச் சிக்கலுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கும் முன் தானே இதுகுறித்து கற்றுத் தெளியவேண்டியிருப்பதாக திறந்த மன்றத்தில் நெஞ்சுரத்துடன் கூறினார். இதனைத் தொடர்ந்து, பால்புது நபர்களுக்கு மதிப்பளிக்கும்படியும் பாதுகாப்பளிக்கும்படியும் பல்வேறு வழிகாட்டல்களை அரசிற்கும், காவல்துறைக்கும், ஊடகத்திற்கும் வழங்கினார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். ஊடகங்கள் பயன்படுத்தும்படியான சொற்பதங்கள் கொண்ட சொற்களஞ்சியத்தை கொண்டு வருமாறு அரசிற்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலும் அதில் ஒன்றாகும். வழக்கைத் தொடுத்த முறையீட்டாளரின் வழக்கறிஞர், பால்புதுமைச் சமூகத்தினரை குறிப்பிடத் தகுந்த “விளக்கும்படியான ஆனால் முழுமையற்ற” சிலச் சொற்களின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தமிழ்நாடு அரசை சொற்தொடுப்புகளுடன் கூடிய சொற்களஞ்சியத்தோடு வருமாறு கேட்டுக்கொண்டதுடன், அதுவரை பால்புதுமை நபர்களைக் குறித்து எழுதும்போது இந்த பட்டியலிலுள்ள உணர்வுமிக்கப் சொற்பதங்களைப் பயன்படுத்துமாறு ஊடகங்களை அறிவுறுத்தினார்.
எனினும், பரந்துபட்ட பால்புதுமைச் சமூகத்தினரைக் கலந்து ஆலோசிக்காமல், அத்தகுப் பட்டியல் பயன்படுத்தப்படுவது சிலரது பாலின அடையாளத்தையோ பாலியல்பையோ விலக்கி வைக்கக்கூடும் என பல பால்புது நபர்கள் எடுத்துக் கூறினர். பல பால்புது நபர்கள் பால்புதுமைச் சொற்பதங்கள் நீர்மமானவையும் காலத்திற்குக் காலம் மாறக் கூடியதுமாகும் என்பதை, “பால் மாற்று அறுவைச் சிகிச்சை” (sex reassignment surgery) என்று வழங்கப்பட்டிருந்த சொற்பதத்தைவிட இயலச் செய்யும், பெரும்பாலானோர் ஏற்கவும் செய்திருக்கும் பதமான “பாலின உறுதி அறுவை சிகிச்சை” (gender affirmation surgery) என்ற சொற்பதத்தின் மூலம் உணர்த்தினர். மேலும், கடந்த வாரம் தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சொற்களஞ்சியத்திலும் பல்வேறுச் சிக்கல்களிருப்பதாக பால்புது நபர்கள் கூறினர். அதாவது, அதில் சில பதங்கள் இழவுபடுத்துபவையாகவும் யாராலும் பயன்படுத்தப்படாதவையாகவும் இருப்பதாகக் கூறினர்.
பால்புதுமைச் செயற்பாட்டாளரும் QCC-யின் இணை நிறுவனருமான மெளலி ஏன் சமூகத்தினரின் ஈடுபாடு இங்கு தேவைப்படுகிறது என்பது குறித்து சொல்லும்போது, இந்த சொற்களஞ்சியமானது கடந்த பத்தாண்டுகளின் பால்புதுமைச் சமூக இயக்கத்தின் பிரதிபலிப்பு அதுவும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்றார். “அரசின் வரையறைகளானது சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவில்லை. இவை சான்றோர் அல்லது வல்லுநர்களால் கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டவை எனினும், பொதுவழக்கில் இருக்க முடியாதவை.” என்று கூறினார்.
“நாம் சமர்ப்பித்த சொற்களஞ்சியமானது சமூக உறுப்பினர்களால் தம்மை அடையாளப்படுத்திடவும், மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் பயன்படுத்திவரும் சொற்களைக் கொண்டது” என மௌலி கூறினார்.
இந்த சொற்களஞ்சியத் தொகுப்புப்பணியில் பங்கெடுத்த எழுத்தாளரும் QCC-யின் விழா இயக்குநருமான கிரீஷ் தி நியூஸ் மினிட்டிடம் கூறியதாவது, “இரு சமர்ப்பிப்புகளில் பால்புதுமைச் சமூகம் தயாரித்த சொற்களஞ்சியமே மதிப்பளிக்கக்கூடியதும் அனைவரையும் உள்ளடக்கியதுமாக இருந்ததாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியிருப்பது என்னை மிகவும் மகிழ்விக்கிறது. பால்புதுமையினர் தமக்கான சொற்பதங்களைத் தாமே தேர்ந்தெடுப்பதே உண்மையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாங்காக இருக்க முடியும் என்பதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துவதாகப் புரிந்து கொள்ளலாம். தமிழ் ஊடகங்கள் இந்த சொற்பதங்களை தற்போது இருந்தே பயன்படுத்தப் போகிறதா, அனைவரும் பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுமுறைகளைப் பின்பற்றுவரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது”
இந்த மாற்றுச் சொற்களஞ்சியப் பணியில் பங்கெடுத்தவரும், ‘சாத்தி’ எனும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவரும், தன்னை ‘ஒரினம்’ திரளமைப்பில் ஈடுபடுத்திக்கொள்பவருமான எல். ராமகிருஷ்ணன், “நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது ஆணையில் கூறியதை அழுந்தச் சொல்ல விழைகிறேன்: இந்தச் சொற்களஞ்சியம் தயாரிக்கப்பட வேண்டியதன் முதன்மை நோக்கம் பால்புதுமைச் சமூகத்தினரை இழிவுபடுத்தாத சொற்பதங்களைக் கொண்டுவருவது எனில், அதற்கு அச்சமூகத்தினரே அத்தகையதோர் சொற்களஞ்சியத்தைத் தொகுப்பதேச் சிறந்த வழியாக இருக்கும்.” என்றார்.
இச்சொற்களஞ்சியத்திற்குப் பங்களித்த எழுத்தாளர் நாடியா கூறுகையில், “மிக இதயப்பூர்வமாக இருந்தது எதுவென்றால், உயர்நீதிமன்றம் எங்கள் குரலை திறந்த மனதுடன் செவிமடுது பதிலுரைத்துடன், நாங்கள் கொண்டுவந்திருக்கும் சொற்பதங்கள் ஏற்கனவே புழக்கத்திலுள்ளவற்றைக் காட்டிலும், அனைவரையும் உள்ளடக்கும்படியாகவும், மேன்மதிப்புடனும், மனிதப்பாங்கு அளிப்பதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டதே. இதுவே உரிமைகள் சார்ந்தப் பார்வையில் ஒருச் சிக்கலை அணுகும் முறையால் நிறைவேற்றிட முடிவது. இந்நகர்வானது விள்ளிம்புநிலை மக்கள் அனைவரின் உரிமைகளைப் பேசுவதற்கான முன்னோடியாக வழிவகுத்திருக்கிறது. அதாவது, விளிம்புநிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளோ, ஒரு விளிம்புநிலைச் சாதியைச் சேர்ந்தவரோ, அவர்களை என்னவாக அழைக்க விரும்புகின்றனர் என்பது குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.” என்றார்.
QCC-யின் நிகழ்வு இயக்குநரான செந்தில், “பால்புதுமை நபர்களால் தயாரிக்கப்பட்டு, திருத்தப்பட்டு, பண்பூட்டப்பட்ட மற்றும் ஆதிக்கப் பாலீர்ப்பின் கருத்தூன்றலற்ற, இச்சொற்களஞ்சியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பால்புதுமைச் சமூகத்தை மகிழ்வித்திருக்கிறது. பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவருக்கும் (Gender nonconforming (GNC) person) தமிழில் சொற்பதம் காண்பது இதுவே முதல்முறையென டிவிட்டரில் மக்களின் கருத்துகளைக் காணமுடிகிறது. எனினும், இந்தச் சொற்பதங்கள் காலத்தால் மேலும் பரிணமிக்கக்கூடியன” என்பதையும் குறிப்பிடும் செந்தில், “இந்த சொற்பதங்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதும் மதிப்பளிப்பதும் மட்டுமின்றி, இவை மாற்றியமைத்துக்கொள்ளக் கூடியதும் கூட என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டவையல்ல. வரும் ஆண்டுகளில் இவை மாறக்கூடும். மக்களும், அரசுகளும், நிறுவனங்களும் அத்தகு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கவனத்துடன் அணுக வேண்டும்.” எனக் கூறினார்.
மொழியும் அதன் சார்பொருளும் வகிக்கும் முக்கியப் பங்கு
“மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பொழுது ‘திருநங்கை’ எனும் சொற்பதத்தை அறிமுகப்படுத்தி அதனைப் பரப்பவும் செய்ததை நினைவுகூர்ந்த மௌலி மேலும் கூறுகையில், “அவ்வாறாக ‘திருநங்கை’ எனும் சொற்பதம் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டும் அழைக்கப்பட்டும் இருப்பினும், 2008-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான நலவாரியம் தொடங்கப்பட்ட பொழுது ‘அரவாணிகள் நல வாரியம்’ என்றே பெயரிடப்பட்டது. பிறகு 2019-ம் ஆண்டில் ‘மூன்றாம் பாலின நலவாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதுப்புது சொற்பதங்கள் பால்புது சமூகத்தில் உருவானாலும்கூட அரசுத் தரப்பில் அவற்றைப் பெரிதும் புழக்கத்தில் கொண்டு வருவதில்லை. ஏனெனில், அவ்வாறாக அச்சொற்பதங்களை அரசு துறைகளில் பயன்படுத்த உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது” என்றும் மௌலி தெரிவித்தார்.
சமூகநலத்துறை முன்வைத்த சொற்களஞ்சியத்தின் பலச் சொற்கள் மொழி அடிப்படையில் சரியெனினும், இங்கு எழும் கேள்வி அவை தரும் பொருள் குறித்தது மட்டுமன்றி, உடன்வரும் சார்பொருள் பால்புதுமைச் சமூகத்திற்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்குமா? என்பதே. “அவை சமூகத்தினர் தம்மை அடையாளப்படுத்த பயன்படுத்தப்படுபவையா? அவை எதைக் குறிக்கிறது? மேலும், இலக்கியத்தில் அவை எப்படிப் பயன்படுத்தப்பட்டன?” என்றும் மெளலி கேள்வியெழுப்பினார்.
“பலச் சொற்கள் ஊடுபொருள்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘கெளரவக் கொலை’ என்பது ‘ஆணவக் கொலை’என்று மாற்றப்பட்டது. நம் சொற்களஞ்சியத்தில் எந்தவொரு ஆதிக்க மனப்பான்மையையும் கடந்த, வழக்கு மொழியிலும் இலக்கியத்திலும் பயன்பாட்டில் உள்ளது என்பதைத் தாண்டி சமத்துவத்தை முதன்மைப்படுத்தும் சொற்பதங்களைப் பயன்படுத்த முயற்சித்துள்ளோம்.” என மௌலி விளக்கினார்.
ராமகிருஷ்ணன் மேலும் கூறுகையில் அரசும், ஊடகங்களும் மற்ற பிற பங்கேற்பாளர்களும் இந்த சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதே இன்றைய உடனடித் தேவை. “சான்றாக, தமிழ் ஊடகங்களில் காவல்துறைச் சட்டத்திருத்தம் குறித்த செய்திகளில் கூட, LGBTQIA+ என்று பயன்படுத்தப்பட வேண்டிய பெரும்பாலான இடங்களில் ‘திருநங்கை’ எனும் பதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மாறவேண்டும். கடந்த ஆண்டே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஊடகங்களுக்கு வழிகாட்டுமுறை கொடுத்திருந்தபோதும், பல ஊடகங்களும் விடாப்பிடியாக சில சமூகங்களை, குறிப்பாக திருநம்பிகளை,’பெண் இணையருடன் இருப்பதற்காக, தங்களை ஆணாக்கிக் கொள்ளும் பெண்’ எனத் தவறாகச் சித்தரிக்கின்றன.
உரையாடலைத் தொடர்ந்த மெளலி, பல்கலைக்கழகங்களின் மொழியியல் துறை, பாலினம் மற்றும் பாலியல்புத் துறைகளுடனும், பால்புதுமைச் சமூகத்தைச் சார்ந்த வல்லுநர்களுடனும் உரையாடல்கள் நிகழ்த்துவதன் மூலம் சீரான இடைவெளியில் இந்தச் சொற்களஞ்சியத்தைப் புதுப்பிக்க முடியும்.
நாடியா கூறும்போது இழிவுபடுத்தக் கூடிய, பால்புதுமை வெறுப்பை உமிழும் சொற்பதங்களைப் பயன்படுத்தும் ஊடகங்களை பொறுப்புகூறும் இடத்திற்கு நகர்த்தும் செயல்முறைக்கான அடித்தளத்தை அமைக்கவும் இது உதவக்கூடும். “குறிப்பிட்ட ஒரு பத்திரிக்கை இழிவுபடுத்தும் சொற்பதத்தைப் பயன்படுத்தினால், நேரடியாக நீதிமன்றத்தை நாடக்கூடாது. அதற்கான ஒரு செயல்முறையை பின்பற்ற வேண்டும். முதலில் அப்படிச் செய்யும் பத்திரிக்கை ஏன் அப்படியொரு ஏற்க முடியாத சொற்பதத்தைப் பயன்படுத்தியது என்று புரிந்துகொள்ள வேண்டும் – அதன் அடிப்படை, புறக்கணிப்பா அல்லது வெறுப்பா என. ஒருவேளை அவர்கள் நீதிமன்ற ஆணைக் குறித்து அறிந்திருந்தும், வேண்டுமென்றே அத்தகு இழிவுபடுத்தும் சொற்பதங்களை பயன்படுத்துகின்றர் எனில், நீதிமன்றத்தை நாடலாம். இது சற்றே சிக்கலான நடைமுறையானாலும், இந்த ஆணை நீதிக்கான வழியைக் காட்டும் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.” என்றார்.
குயர் சென்னை க்ரோனிக்கள்ஸ் (QCC) மற்றும் தி நியூஸ் மினிட் (TNM), பிற தனிநபர் பங்களிப்பாளர்களுடன் சேர்ந்து, பால்புதுமையினர் பிரச்சனைகள் குறித்து எழுதிவரும் ஊடகவியலாளர்களும் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையிலான ஓர் குறிப்பு வழிகாட்டியைத் தொகுக்கும் பணியில் உள்ளன. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சொற்களஞ்சியம் இந்த வழிகாட்டிக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கூறே. இந்த வழிகாட்டிக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும்.
The News Minute-ல் முதலில் வெளியிடப்பட்டது. உங்கள் ஆதரவை தெரிவிக்க: https://www.thenewsminute.com/supportus