சமூகத்தொடர்பே இல்லாத வாழ்க்கைமுறை, அத்தியாவசியத்திற்கு மட்டுமே வெளியே செல்லமுடிதல், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன்காணொளியில் உரையாடல், இணையதளம் மூலம் பரஸ்பரத் தொடர்புக்கான தேடல், வெளியே செல்லும் ஒவ்வொருமுறையும் முகக்கவசம் அணிதல்; எதுவுமே புதிதல்ல, எல்லாமே பழகிவிட்ட நடைமுறை தானே? பெருந்தொற்றுக்கு முன்னாலும் இப்படித்தான் வாழ்ந்தேன். வாழ்க்கையின் பெரும்பகுதியில் என் அடையாளத்தை மறைத்துக்கொண்டு தான் இருந்திருக்கிறேன். பின்னோக்கிப் பார்த்தால், தவறவிட்ட வாய்ப்புகளுக்கு நடுவே பல சுவாரஸ்யங்களும் இருந்திருக்கிறது..
நரம்பியல் பன்முகத்தன்மை (Neurodiversity, Neurodivergent) கொண்ட பால்புது நபரான எனக்கு, வயது முப்பத்து ஐந்தை நெருங்கிவிட்டது. எனினும் இப்போதுதான் எல்லோரும் என்னைப் பார்ப்பது போலத் தோன்றுகிறது, ஒருவேளை உலகமும் கொரோனா காலத்திற்கு முன்பு முகமூடி அணிந்திருந்ததோ? 2020-ம் ஆண்டு பல புதியத் திருப்பங்களை கொண்டுவந்தது, இந்த உலகத்திற்கு மட்டுமல்ல எனக்கும்தான். உடல் மற்றும் மனநலக் கோளாறுகள் காரணமாக விருப்ப விடுப்பில் இருந்த எனக்கு இந்த சந்தர்ப்பம் பல புதிய வாய்ப்புகளை அளித்தது. இந்தியப் பால்புது நபர்களுக்கான ஒரு இணையதள சமூகத்தில் இணைந்தேன். ஆனால் அங்கு எப்படி பழகுவது என்று தெரியாமல் இருந்தேன். என் வாழ்க்கையிலிருந்த முக்கியமான நபர்களிடம் மட்டும் என் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொண்டேன். டேட்டிங் செயலிகளிலும் இணைந்துகொண்டேன். அதற்கு முன்னால் டேட்டிங் முயற்சியில் ஈடுபட ஒரு பயம் இருந்தது. வேலையின் காரணமாக அடிக்கடி வெளிநாடு சென்று வந்திருந்த நான் ஒரு லெஸ்பியன் (Lesbian), எனக்கு ஒருபால் ஈர்ப்பு இருந்தது என்பதை நடுநிலைப்பள்ளிப் பருவத்திலேயே தெரிந்துஅதை நான் ஏற்றுக்கொண்டும் விட்டேன்.
டிண்டர் (Tinder) செயலி வழியாக நான் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். வெளிநாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும் அவளுக்குதமிழ்நாட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. நான் அபாலீர்ப்பு அடையாளமும் (ஏசெக்ஷுவல் ஸ்பெக்ட்ரம், Asexual Spectrum) கொண்டவள் என்று அவளிடம் சொன்னேன். நாங்கள் இயல்பாகப் பழகினோம். வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்தோம், முத்தமிட்டோம், உடலுறவு கொண்டோம். இது எல்லாமே எனக்கு முதல் அனுபவமாக இருந்தது. ஆனால் என் அபாலீர்ப்புத்தன்மை எங்களுக்கு இடையே தீவிரமான வேறுபாடாக மாறியது. என் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அவளுக்குத் தேவையான உடல்ரீதியிலான நெருக்கத்தை (Intimacy)ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை அவள் பேசியதாக எனக்குத் தோன்றியது. அவளுக்கு எல்லாமே தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என எனக்குப் புரியவில்லை.
காயப்பட்டதால் அவளுடனான தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு சற்று விலகிவிட்டேன். ஆனால் அதை நான் உணரவில்லை. ஒரு இடைவெளி தேவை என்பதைத் தெரிவிக்க எனக்கு ஒருநாள் பிடித்தது. அதே சமயம் தூண்டுதல்கள் (Triggers) காரணமாக அவள் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எங்கள் உறவு சம்பந்தமாக நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவள் பிடிப்புடன் பதிலளிக்கவில்லை. தனக்கு அபாலீர்ப்புத் தன்மை (Asexuality) பற்றித் தெரியவில்லை. நானும் அதைப் புரிந்துகொள்ள அவளுக்கு நேரமளிக்கவில்லை. அதோடு அவள் என்னை காயப்படுத்தமாட்டாள் என நம்பவில்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவள் பேசிய சில விஷயங்கள் என்னுடைய அடையாளத்தைக் கேள்வி கேட்கும்படி அமைந்தது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்வரை இதைப்பற்றி விவாதிக்க வேண்டாம் என்று சொன்னாள். இதெல்லாம் நடந்தபோது அவள் சொந்தநாட்டிலிருந்தாள். அதன்பின்னர் நடந்த எந்த உரையாடல்களிலும் முந்தைய டைனமிக்ஸ் (Dynamics) இல்லை. நாங்கள் நண்பர்கள் போலவே பேசினோம். நாளடைவில் பேசுவது குறைந்தது. அவள் இந்தியாவில் வேலையை விட்டுவிட்டதாகவும் வேறு ஒருவர் மேல் விருப்பம் இருப்பதாகவும் (Date) தெரிவித்தாள். இதில் எனக்கு ஒரு முடிவே (Closure) கிடைக்கவில்லை. என் உணர்வுகளைப் பொறுத்தவரை ஒரு முற்று ஏற்படாத மாதிரி தோன்றியது.
எனது முதல் டேட்டிங் மற்றும் பிரிவு (Breakup) ஒரு பெருந்தொற்று காலத்திலா நடக்கவேண்டும் என்று ஆதங்கமாக இருந்தது. இதுபற்றி வெளிநாட்டிலிருந்த என் தோழி மற்றும் என்னுடன் இருந்த என் சகோதரியிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டேன். ஆனால் அனுபவப்புரிதல் முழுமையாக இல்லாததால் அவர்களால் ஓரளவுக்குத் தான் ஆறுதல் கூற முடிந்தது. இது எனக்கு அந்த இணையதள சமூகத்தில் பேசுவதற்கு உதவிற்று. அபாலீர்ப்புத்தன்மையோடு இருக்கும் சிலருடன் பேசுகையில் என் முன்னாள் தோழி (Ex) என்னுடைய அடையாளத்துக்கு மதிப்பளிக்கவில்லை (Invalidate) என்பதைத் தெரிந்துகொண்டேன். ஊரடங்கு காரணமாக நிறைய உறுப்பினர்கள் உரையாடலில் கலந்துகொள்ள வரத்தொடங்கினர். அங்கு நடந்த உரையாடல்களில் தீவிரமாகப் பங்கேற்றேன். மேலும் பல அறிமுகங்கள் கிடைத்தன. நண்பர்களையும் சந்தித்தேன். இங்குதான் எனக்கான தனிப்பட்ட சலுகைகள் (Privilege) இருப்பதையும், அதனால் எனக்கு சமூகத்தின் ஊடுபாவுகள் (Social Intersectionality) பற்றியெல்லாம் தெரியவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன்.. பல அடையாளங்கள் கொண்டவர்களுடன் பழகும்போது எனக்கு பாதுகாப்பின்மை (Insecurities) உள்ளதென்றும், நான் காதல்சார் உணர்வுகள் இல்லாதவராக(Aromantic spectrum) இருக்கக்கூடும் என்றும் தெரிந்துகொண்டேன். முடிவற்ற சுய-உணர்தல்களை நான் பெற்றேன். நான் என்னைப்பற்றி பகிர்ந்துகொண்டதை கேட்டவர்கள் மற்றும் என்னுடன் தங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டவர்கள், அன்புகாட்டியவர்கள் எல்லாருக்கும் சொல்ல நன்றி மட்டுமே என் மனதில் இருந்தது. முதல்முறையாக நான் நானாகவே உணர்ந்தேன்.
இப்போது எனக்கு இருக்கும் நெருங்கிய நண்பர்களே ஆதரவு அமைப்பாகவும் (safe space?) உள்ளனர். நாங்கள் நேரில் சந்தித்திருக்கிறோம், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். இரண்டாவது அலையில் கோவிட் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நண்பர்கள் குழுவில் மருத்துவர்களும் மருத்துவர்களை அறிந்தவர்களும் இருந்ததால் எனது மருத்துவ அறிக்கைகளைப் (Reports) பாத்துவிட்டு நான் ஆபத்தில் இல்லை என்று தைரியம் தந்தனர். எனக்கு உதவிசெய்ய முன்வந்து கருணை காட்டிய அனைவருக்கும் நன்றி செலுத்தும் காலகட்டமாக அது இருந்தது. மாநகராட்சி (Corporation) தன்னார்வலர்கள் ஊரடங்கின்போது பரிசோதனை (Lab) மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல உதவினார்கள். தோழி ஒருவர் ICU வார்டுக்கு ஆடைகள் மற்றும் இயர்போன்களை (Earphones) அனுப்பினார். மருத்துவமனையில் இருக்கும்போதும், தனிமைப் படுத்திக்கொண்ட நேரத்திலும் உறவினர்கள் உணவு அனுப்பினார்கள். நண்பர்கள் தொடர்ந்து நலம் விசாரித்து வந்தனர்.
வேலையை விட்டுவிடலாம் என்று யோசனையில் இருந்தபோது மனநல ஆலோசனை எடுத்துக்கொள்ளும்படி இணையதளச் சமூகம் வாயிலாகநெருக்கமாகிய நண்பர் ஊக்குவித்தார். உடல் ரீதியாக நன்றாக இருந்தாலும் வேலையிடத்திலிருந்த நச்சுத்தனம் (Toxic) மற்றும் கசப்பு அனுபவங்கள் நான் விடுப்பிலிருந்தாலும் மறையவில்லை. அதோடு நான் டேட்டிங் செய்த நபரிடம் இருந்து கிடைக்காத முடிவு (Closure) மன உளைச்சலைக் கொடுத்தது. வேலையை விட்டேன். இணையதளச் சமூகத்திலிருந்தவர் பரிந்துரைத்த மனநல நிபுணரை நாடினேன். ஏற்கனவே அந்த நிபுணரைப் பார்த்துவந்த மற்றொரு நண்பரும் அந்த நிபுணரைப்பற்றி எனக்கு மறுஉறுதி அளித்தார்.
சிகிச்சை (Therapy) எனக்கு நரம்பியல் பன்முகத்தன்மை இருப்பதற்கான வாய்ப்பைச் சுட்டிக்காட்டியது. ஆனால் ஆட்டிசத்தைக் (Autism) கண்டறியும் பரிசோதனையை (Diagnosis) எடுத்துக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. அடல்ட் (Adult) நரம்பியல் பன்முகத்தன்மை பற்றிய புரிதல் இல்லாததும் ஒரு காரணம். அப்போது என் தங்கைக்குத் திருமணம் ஆகவிருந்தது. அதன்பின் அவள் வெளிநாடு சென்றுவிடுவாள் என எனக்குத்தெரியும், குடும்பத்தில் என் அடையாளத்தை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்ட முதல் நபர் அவள்தான் எனவே தனிப்பட்ட முறையில் அது என்னைத் திணறடிக்க கூடிய ஒரு காலமாக அமைந்தது. அதே சமயம், தற்செயலாக அந்தத் திருமணத்தில் நடந்த நிகழ்வுகளே என்னை ஆட்டிசம் பரிசோதனையை எடுத்துக்கொள்ளத் தூண்டியது. நான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை மற்றும் இளமைப் பருவத்திலிருந்த எனது விசித்திரம் எனச் சொல்லப்பட்ட குணாதிசயங்களை அங்கீகரிப்பது, கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மற்றும் வெற்றிடங்களை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் நிரப்புவது எனக்கு ஒரு புதிய சுதந்தரத்தைக் கொடுத்தது. சிறுவயதிலும், வளர்ந்த பிறகு குறிப்பாக வேலையிடங்களிலும் மற்றவர்களின் கட்டமைப்பில் என்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் எனது குணாதிசயங்களை மறைக்க முகமூடி போட்டுக்கொண்டேன் என உணர்ந்தது ஆச்சரியமூட்டியது.
இணையதளத்தின் வாயிலாக நரம்பியல் பன்முகத் தன்மை கொண்ட பால்புது நபர்களுடன் இணைந்தேன் அவர்களுடன் உரையாடியது கண்ணைத் திறக்கும் அனுபவமாக இருந்தது. என்னுடன் பழகுபவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளவும் புலம்பவும் இடமளிக்கக் கற்றுக்கொண்டேன், இது பால்புது சமூகத்தைப் பற்றிய எனது பார்வைகளையும் கருத்துக்களையும் மாற்ற உதவியது. எல்லோராலும் என்னுடைய நரம்பியல் பண்புகளைப் புரிந்து கொள்ளவும் அதற்கு இணங்கி நடக்கவும் இயலாது என்பதையும் அறிந்தேன். ஏனெனில் பால்புது நபராக இருப்பதனாலேயேஒரு சார்பாக (Bias) இருக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. எனக்கும் ஒருசார்பு நிலைப்பாடு இருக்கிறது. சிகிச்சையில் அதை செயல்படுத்துகிறேன் என்பதால் இல்லை என்று ஆகிவிடாது.
சிலமாதங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் குழுவில் இருவருக்கு இடையே ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு அது ஒரு வாக்குவாதமாக மாறியது. எல்லோரும் உரையாடினோம். ஆனால் ஒரு கட்டத்தில் ஒருவர் வெளியேறி கடைசியில் ஏழுபேர் இருந்த குழு ஆறாக ஆகிவிட்டது. இது ஒரு பெரியத் தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தியது. நமக்குள் இருக்கும் வித்தியாசங்களைத் தாண்டி நம் சமூக அடையாளம், நம்மை ஒற்றுமையாக இருக்கத் தூண்டுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் இது சுட்டிக்காட்டியது. இது நிச்சயம் நுணுக்கமான ஒன்று. ஏனெனில் இந்தப் பிரிவு நம்மிடம் இடைவெளியை ஏற்படுத்தும். ஒருவருடன் மனக்கசப்பு என்றால் எல்லோரையும் அவர் இழக்க நேரிடுகிறது. ஏதோ ஒருவிதத்தில் எல்லாமே பழையபடி இல்லை என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும்.
டேட்டிங் செயலி பயன்படுத்தும்போதெல்லாம் இவை பெரும்பாலும் பாலீர்ப்பு உடையவர்களுக்கு (Allosexuals) மட்டுமே என்று ஒரு நிலையான நினைவூட்டல் இருந்துகொண்டே இருந்தது. உடலுறவை (Sex) விரும்பவில்லை என்பதற்காகச் சிலபேர் என்னை விசித்திரமானவர் (Weird) என்று அப்பட்டமாகச் சொன்ன உரையாடல்களும் நடந்துள்ளன. பாலீர்ப்பு உடையவர்களுடன் இணைந்து வாழ்வதற்காக என் எல்லைகளையோ (Boundaries) விருப்பங்களையோ மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என்பது நான் கற்றுக்கொண்ட ஒன்று. உங்கள் வாழ்க்கையை ஒரு காதல் அல்லது காமம் சார்ந்த துணை தான் முழுமையடையச் செய்யும் என்ற பெருமைப்படுத்தப்பட்ட யோசனையை நான் தனிப்பட்ட முறையில் நம்பவில்லை. மேலும் காமம் அல்லது காதல் சார்ந்து நிறுவப்பட்ட உறவையும் நான் நாடவில்லை.
மனநலம் தொடர்பான ஒரு விவாதத்தின் போது நெருங்கிய நண்பர் ஒருவர் அவர்களின் பாலின அடையாள முரண்பாட்டு நெருக்கடி பற்றி பேசினார். உடல் டிஸ்மார்பியாவுக்கு (Dysmorphia) பருவம் அடைந்ததிலிருந்து (Puberty) நான் ஆளானதை இது நினைவுபடுத்தியது சிகிச்சையில் அதைப் பற்றி விரிவாகப் பேசினேன். மேலும் ஒரு குறிப்பிட்ட உடல்உறுப்புடன் தான் இந்த முரண்பாடு இருப்பதை மீண்டும் உணர்ந்தேன். எனது பாலின அடையாளத்தைக் கண்டறியும் ஆற்றலும் நேரமும் என்னிடம் இல்லை என்று முடிவு செய்தேன் அதனால் ஒரு பைண்டர் (Binder) பெறுவதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடலின் அமைதியற்ற நிலையை (Dysphoria) தணிக்கப் பார்த்தேன்.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நான் பல மைல்கற்களைக் கடந்துள்ளேன் – நான் சுய விழிப்புணர்வுடன் இருக்கிறேன், தொடர்ந்து சமூகத்துடன் தொடர்புகளை உருவாக்கி, வளர்ந்து வரும் ஸ்பெக்ட்ரம் மற்றும் அடையாளங்களை பற்றிக் கற்றுக்கொள்கிறேன். ஒரு நரம்பியல் பன்முகத்தன்மை கொண்ட நபராக நான் பல முத்திரைகளை (labels) வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒழுங்கமைக்கப்பட்டதாக உணர்கிறேன், சமூகச் சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது உரையாடலைத் தொடங்க எனக்கு இது உதவுகிறது.
எனது அடையாளங்களை மறைக்க என்னையே அறியாமல் நான் போட்டுக்கொண்ட முகமூடி, தொற்றுக்கு முந்தைய உலகத்தின் ‘நெறிமுறைகளுக்குள்’ என்னைப் பொருத்திக்கொள்ளும். நாம் ஒரு புதிய இயல்பில் வாழ்கிறோம். முகக்கவசம் தான் இப்போது அவசியம். பின்னோக்கிச் செல்வது சாத்தியமாகாது.
என் தங்கையின் கணவரை அவர்கள் இருவரின் பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்குத் தெரியும். தங்கையிடம் நான் என் அடையாளத்தை வெளிப்படுத்திய சில மாதம் கழித்து அவரிடம் அவள் இதைச் சொல்லியிருக்கிறாள். அவரும் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டது எனக்குப் பிடித்திருந்தது. பைண்டர் வாங்கி வருமாறு அவரிடம் கேட்டிருந்தேன் உடனே ஆர்டர் செய்தார். ஆவலோடுக் காத்திருந்தேன். பைண்டர் வந்து சேர்ந்ததும் அதை அணிந்து, அதனால் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததும் ஒரு புத்துணர்ச்சி வந்தது.
இந்தக் கட்டுரையை எழுதப்போகிறேன் எனத் தங்கையிடம் சொன்னேன் அப்போது என் அம்மா எதைப்பற்றி என்று கேட்டார். நான் சமாளித்தேன். என்னவென்று சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து முடிவுரை பற்றி யோசிக்கும்போது எதேச்சையாக அவர் மறுபடியும் கேட்டார். உடனே நான் அவரிடம் முதல்முறை என் அடையாளம் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா எனக் கேட்டுவிட்டு அவர் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இனி அதை மறைக்க விரும்பவில்லை என்றும் சொல்லிவிட்டேன். என் எல்லா அடையாளங்களையும் விளக்கினேன். இந்த கட்டுரை எதைப்பற்றி என்பதையும் தெரிவித்தேன். ஆமோதிக்கும்படி அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுக்கவில்லை, அந்த வெளிப்படுத்துதலே, நல்ல உரையாடல்களை துவக்கிவைத்தது. அதுவரைக்கும் மகிழ்ச்சி தான்.