சேலத்தைச் சேர்ந்த அக்ஷிதா, சுயநினைவற்ற நிலையில் தன் வீட்டில் கண்டெடுக்கப்பட்டார், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். அவரது தாய் உமாதேவிக்கு இந்தத் தாக்குதல் முன்பே தெரிந்திருந்தது.
சேலத்தைச் சேர்ந்த ஒரு இளம் திருநங்கை, டிசம்பர் 13ம் தேதி தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போது சுயநினைவை இழக்கும்வரை கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இரத்தம் குறைந்து அவரது எலும்புகள் உடைந்தன. தாக்குதல் நடந்த மறுநாள் அவர் இறந்தார். இப்போது, தாக்குதலை நடத்தியது அக்ஷிதாவின் தாய் பி.உமாதேவி என்றும், மகள் திருநங்கையாக இருப்பது பிடிக்காமல் அவரைக் கொலை செய்யவே உமாதேவி இதைத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. இளம் திருநங்கையான அக்ஷிதாவைத் திட்டமிட்டுக் கொன்றதற்காக அவரது தாய் உமாதேவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இ.பி.கோ 302ன் கீழ் அவர்கள்மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களது குடும்பத்தினர்மூலமாகத் திருநர்கள் சந்திக்கும் வன்முறையின்மீது இந்த சம்பவம் மீண்டும் ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. தனியாகவும் சுதந்திரமாகவும் வசிக்கவும் திருநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டரீதியாகவும் அரசு செயல்பாடுகளிலும் இருக்கும் போதாமைகளையும் இந்த நிகழ்வு மீண்டும் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. தங்களது வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தினரைத் தவிர்க்க விரும்பும் திருநர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத பட்சத்தில், அவர்கள் வசிப்பதற்குப் பாதுகாப்பான இடங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. வன்முறை, அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் திருநர்களைப் பொறுத்தவரை, மற்ற திருநர்களோடு வசிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை. குறிப்பாக, வீட்டை விட்டு வெளியேறிய திருநர் 18 வயதுக்கும் குறைவானவர் என்று குடும்பங்கள் தெரிவித்துவிட்டால், அவருக்குப் புகலிடம் அளித்த திருநர் சமூகம் சட்ட ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி வருகிறது.
தனது வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு திருநர் சமூகத்துடன் அக்ஷிதா வசிக்கத் தொடங்கினார். இதுகுறித்து காவல்துறையினரிடம் உமாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டதில், அக்ஷிதா நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அந்த சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் அக்ஷிதா பற்றிய உமாதேவியின் புகார் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
2021ம் ஆண்டு ஜூலை மாதம், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் 45 வயதான உமாதேவி “மகனைக் காணவில்லை” என்று புகார் அளித்தார். பரவலான ஒரு தேடலுக்குப் பிறகு காவல்துறையினர் அக்ஷிதா பெங்களூருவில் இருப்பதாகக் கண்டறிந்தனர். இந்தப் புகாரை விசாரித்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், “அக்ஷிதா வீட்டுக்கு வர விரும்பவில்லை. அம்மா உட்பட குடும்ப உறுப்பினர்கள் தன்னை வித்தியாசமாக நடத்துகிறார்கள் என்று கூறினார்” என்கிறார்.
“அக்ஷிதா 18 வயதைக் கடந்தவர் என்பதால் அவர் தனியாக வசிக்கலாம். ஆனால் அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் நாங்கள் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருந்தோம் என்பதால் அக்ஷிதாவை சேலத்துக்கு அழைத்து வந்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தினோம். அவர் மேஜர் என்பதால் தனது குடும்பத்தினருடன் அக்ஷிதா வசிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்றும், விரும்பிய இடத்தில் வசிக்கலாம் என்றும் அவர் தீர்ப்பளித்தார். உமாதேவியுடன் வசிக்க விரும்பாத 19 வயது அக்ஷிதா பெங்களூருக்கு மீண்டும் கிளம்பிவிட்டார்” என்கிறார் சிவக்குமார்.
சுற்றியிருந்தவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசியதால் எப்படியாவது அக்ஷிதாவை வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு சிகிச்சையளித்து மாற்றிவிடவேண்டும் என்று உமாதேவி விரும்பியிருக்கிறார். அக்ஷிதாவின் பாலின அடையாளத்தை ஏற்றுக்கொள்ள முடியாத உமாதேவி, அவரை விழுப்புரத்திற்கு அழைத்து சென்று ஹார்மோன் சிகிச்சை கொடுக்க விரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“உமாதேவி பலமுறை பேசிப்பார்த்தும் சேலத்துக்கு வருவதற்கு அக்ஷிதா ஒத்துக்கொள்ளவில்லை. தன்னையாவது வந்து பார்த்துவிட்டு செல்லுமாறு உணர்வுபூர்வமாக உமாதேவி கேட்டுக்கொண்டதில் அக்ஷிதா சேலத்துக்கு வந்திருக்கிறார். தீபாவளிக்கு சேலம் வந்த அக்ஷிதா, சில வாரங்கள் அங்கு தங்கியிருக்கிறார். அங்கு அக்ஷிதா வெளியில் செல்வதும் தங்குவதும் இரவில் தாமதமாக வீடு திரும்புவதுமாக இருக்கவே, மற்றவர்கள் என்ன சொல்வார்கள், சமூகத்தின் எதிர்வினையும் புரணிகளும் எப்படி இருக்கும் என்பது பற்றி உமாதேவிக்கு பயம் வந்துவிட்டது” என்கிறார் சிவக்குமார்.
46 வயதான வெங்கடேஷ் என்பவரை இது சம்பந்தமாக உமாதேவி அணுகியிருக்கிறார். அவர் மீன்கடை மற்றும் உணவு விடுதி நடத்திவருபவர். இந்த விவகாரத்தில் தனக்கு உதவுவதற்காக, அக்ஷிதாவை அங்கேயே இருத்திக்கொள்ள யோசனை தருவதற்குத் தனது நண்பர் காமராஜ் (40) என்பவரை வெங்கடேஷ் அணுகியிருக்கிறார். அக்ஷிதா பயந்து வீட்டை விட்டு வெளியேறாதபடி அவரை மிரட்டுமாறும் தாக்குமாறும் உமாதேவி இவர்களைக் கேட்டுக்கொண்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. டிசம்பர் 13ம் தேதி திங்கட்கிழமையன்று ஜகீர் அம்மாபாளையத்தில் உமாதேவி மற்றும் அக்ஷிதா வீட்டுக்குள் மூன்று பேர் நுழைந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த அக்ஷிதாவைத் தாக்கியிருக்கிறார்கள்.
“மேற்கூரைத் தொழிலில் இருப்பவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இயங்குபவருமான காமராஜ் மூன்று பேரைக் கூலிப்படையாக ஏவியிருக்கிறார். சஞ்சய், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இந்த மூன்று நபர்களும் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அக்ஷிதாவின் முகத்தில் ஒருவர் போர்வையைப் போட்டு மூடிவிட, மற்ற இருவரும் அவரது கை கால்களில் தாக்கி எலும்பு முறிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என்கிறார் சிவக்குமார்.
இந்தத் தாக்குதலை முன்பே அறிந்திருந்த உமாதேவி சற்றுநேரத்தில் வீட்டிற்கு வந்து சுயநினைவின்றிக் கிடந்த மகளை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அக்ஷிதாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 14ம் தேதி இற்ந்தார்.
குடும்பங்களின் திருநர் வெறுப்பு
நியூஸ் மினிட்டிடம் பேசிய திருநர் செயற்பாட்டாளர் க்ரேஸ் பானு, திருநர்கள் அடிக்கடி கொல்லப்படுகின்றனர் என்றும், அக்ஷிதாவைப் போன்றவர்களின் இறப்பு, திருநர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போதுமான சட்டங்கள் மற்றும் அரசு தலையீடு இல்லாததால் நடக்கிறது என்று கூறினார்.
“எங்களைப் பாதுகாக்க திருநர் பாதுகாப்பு சட்டம் 2019 என்ற ஒரே ஒரு சட்டம்தான் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக மட்டும் எத்தனை சட்டங்கள் இருக்கிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள். 18 வயதை கடந்த ஒரு திருநர் வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் குறுக்கீடு இல்லாமல் அவரால் அதை செய்துவிட முடியுமா? அக்ஷிதாவுக்கு 19 வயது, ஆனாலும் வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துவரப்பட்டு, ஒரு மாஜிஸ்ட்ரேட் உத்தரவுக்குப் பின்புதான் சுதந்திரமாக வாழ அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது” என்கிற க்ரேஸ், அதீத இழிவு மற்றும் திருநர் வெறுப்பு சமூகத்தில் புரையோடிப்போயிருப்பதால் தங்களது திருநர் பிள்ளைகளைத் தாக்கிக் கொல்லும் அளவுக்குப் பெற்றோர்கள் போய்விடுகிறார்கள் என்கிறார்.
“இரண்டு மாதங்கள்க்கு முன்பு, தனது பாலினத்தை உணர்ந்துகொண்டதால் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு 17 வயது திருநங்கை வீட்டை விட்டு வெளியேறினார். மதுரையில் உள்ள திருநர்களுடன் அவர் வசிக்கத் தொடங்கினார். அவரைப் பெற்றோர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அவரை நாங்கள் கண்டுபிடித்தபோது, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்துவருமாறு காவல்துறை எங்களிடம் கூறியது. காவல்நிலையத்தில் அவரைப் பார்த்த அவரது பெற்றோர்கள், வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொன்றுவிடவேண்டும் என்றனர். அவர்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த சமூகத்திற்கும் அந்தத் திருநங்கை அவமானத்தைத்ட் தேடித் தந்துவிட்டார் என்று அவர்கள் சொல்லிக்கொண்டேயிருந்தனர்” என்கிற க்ரேஸ், சாதிப்பெருமை, சமூக இழிவு பற்றிய மனம், திருநர் வெறுப்பு ஆகியவை எல்லாம் பல சூழல்களில் இணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்கினார். நீதிமன்றங்களில் நடக்கும் நீண்ட வழக்குகளால் இளைய திருநர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் கூறினார்.
திருநர் சிறுவர்கள் மற்றும் பதின்வயதினர்
18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் தங்களைத் திருநர்களாக அடையாளப் படுத்தும்பொழுது, அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கவோ, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பிற சிறுவர்களுடன் காப்பகத்தில் சேர்க்கப்படவோ சட்டம் இரண்டுவிதமான வாய்ப்புகளைத் திருகிறது. குடும்பத்தினருடன் அவர்கள் வசிக்கும்பட்சத்தில் சிகிச்சையளித்து இதை சரிசெய்வதற்குக் குடும்பத்தினர் முயற்சி செய்யலாம், அது அவர்களுக்கு மன உளைச்சலையும் ஆறாத காயத்தையும் ஏற்படுத்தும்.
“2020ம் ஆண்டில்தான் பெங்களூருவில் திருநர் சிறுவர்களுக்கான தனி காப்பகம் பற்றிய விவாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது. பதின்பருவத் திருநர்களுக்கான தனிப்பட்ட காப்பகங்கள் நம்மிடம் கிடையாது. ஆகவே பாதுகாப்பும் ஆதரவும் தேவைப்படும் பதின்பருவத் திருநர்கள் குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் முன்பு நிறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ள காப்பகங்களில் இந்தப் பதின்பருவத் திருநர்களை அவர்களால் பொருத்திப் பார்க்க முடியாது. ஒருவேளை அந்தக் காப்பகங்களில் அவர்கள் சேர்க்கப்பட்டாலும் அங்கு மனம் மற்றும் உடல் ரீதியான சீண்டலுக்கும் திருநர் வெறுப்புக்கும் அவர்கள் ஆளாக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் க்ரேஸ் பானு.
The News Minute-ல் முதலில் வெளியிடப்பட்டது. உங்கள் ஆதரவை தெரிவிக்க: https://www.thenewsminute.com/supportus