அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடையும் பாலின சமத்துவமும்

Source: Gawker

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் “அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை” பற்றி சில பருத்துகள்:

  1. பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்கான நிறம், லோகோ போன்றவற்றை தேர்ந்தெடுத்து அதற்குட்பட்டு மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க உடைகளைத் தைத்துக்கொள்ள அனுமதிப்பது தான் “Gender neutral uniform ஆக இருக்க முடியுமே தவிர ஒரே உடையை அனைவரும் அணிய வேண்டும் என்று திணிப்பதே பாலின சமத்துவத்துக்கு எதிரான செயல் தான்.
  2. பேண்ட் அணிவது அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்கிற காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு உடை என்பது அணிந்து கொள்ள வசதியாக இருக்கிறது என்பதோடு சேர்ந்து அந்த உடையை அணிந்துகொள்ளும் நபரின் Gender expression உடன் தொடர்புடையது. விருப்பமான உடையை அணிய அனுமதிப்பதே அனைத்துக்குமான தீர்வாக இருக்கும்
  3. இது ஆண்களுக்கான உடை, இது பெண்களுக்கான உடை என்று இருப்பதை மாற்றி யார் வேண்டுமானாலும் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விட்டு அதுநாள் வரைக்கும் ஆண்களுக்கான சீருடையாக இருந்த ஒரு உடையை இனிமேல் பெண்களும் இதைத்தான் அணிய வேண்டும் என்று சொல்லுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
  4. கேரள ஆரம்பப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட உடைகளை கூர்ந்து கவனித்தால் புரியும், அனைவருக்கும் அரை நிக்கர் என்பது போன்ற தோற்றத்தில் இருந்தாலும் ஆண் குழந்தைகளின் சீருடைகள் முட்டிக்கு மேலும் பெண் குழந்தைகளுன் சீருடைகள் முட்டிக்கு கீழுமாகவே இருக்கின்றன. பிறகு எப்படி அதை அனைவருக்கும் பொதுவான உடை என்று சொல்ல முடியும்?
  5. உடைகளில் பாலினப்பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்ற நோக்கம் சரியாக இருக்கலாம். ஆனால் ஆண்களின் உடையாக பார்க்கப்படும் ஒன்றை பெண்கள் அணியும் போது அது “Gender neutral” உடையாகவும் அதே சமயம் பெண்களின் உடையை ஆண்களோ அல்லது ஆண் என்று சமுதாயத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்களோ அணியும்போது அது கேலிக்குள்ளாக்கப் படுகிறது. அது “Misogony & Trans misogony” தானே? அதைப்பற்றியும் பேச வேண்டாமா?
  6. பொதுவாகவே gender பற்றிய பேச்சுக்களோ அறிவுப்புகளோ வரும்போது ஆண் பெண் என்ற இருபாலரைச் சார்ந்தே உரையாடல்கள் நடக்கின்றன. எந்த பாலினத்தோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத குழந்தைகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? அதைப்பற்றி யோசிக்காமல் எப்படி சமத்துவத்தை கொண்டு வர முடியும்?
  7. இந்த முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கதே. நிறைய பெண் குழந்தைகள் இந்த உடைகள் வசதியாக இருப்பதாக சொல்வதும் மகிழ்ச்சியான விஷயமே. ஆனால் இந்த விவாதங்கள் தொடர்ந்து நடப்பதன் மூலமாகவே “அனைவருக்கும் ஒரே உடை” என்பதைத் தாண்டி “தங்களுக்கு விருப்பமான, தாங்கள் வெளிப்படுத்த விரும்புகிற Gender expression- உடன் தொடர்புபடுத்திக் கொள்கிற உடைகளை அணிகிற சுதந்திரம்” எனும் இடத்தை நோக்கி நம்மால் நகர முடியும்.