அப்பாஸ் (26) மற்றும் அஜித் (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரும் கடந்த எட்டு மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த அஜித்தின் குடும்பம் அவரது பாலீர்ப்பை மாற்ற போலி சிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும் சித்தரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. காவல்துறையினரிடம் இது பற்றிப் பேச அப்பாஸ் முனைந்தபோது, அவரை காவல்துறையினர் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்பாஸை அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜூன் ஆறாம் தேதி அப்பாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல்செய்தார். இதன் பேணுதிறன் (maintainability) ஜூன் 22ம் தேதி விசாரிக்கப்பட்டதையடுத்து ஜூன் 29ம் தேதி இந்த மனு துரிதவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. வழக்கு விசாரணையின்போது வாதியின் வழக்குரையுரிமையை விசாரித்த நீதிபதிகள் பி.என்.ப்ரகாஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோர், “திருமணம்போன்ற எதுவும் இல்லாத நிலையில், அவரை நண்பர் என்று குறிப்பிடுகிறீர்கள், உங்களது வழக்குரையுரிமை என்ன?” என்று கேள்விஎழுப்பினர்.
மேலும் அப்பாஸின் வழக்குரை உரிமை (Locus standi) பற்றி விசாரித்தனர். அஜித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அப்பாஸ் இருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தனர், அதுவும் பின்பற்றப்பட்டது.
அப்பாஸின் வழக்கறிஞர்கள் ஜி.சத்யா மற்றும் சஞ்சேஷ் மகாலிங்கம் தந்த பதில் திருப்திகரமாக இருக்கவே, ஆட்கொணர்வு மனுவை அங்கீகரித்து, அஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒருபாலீர்ப்பு கொண்ட நபர் ஒருவர் தன்னுடைய இணையருக்காகத் தாக்கல் செய்தமனுவை ஏற்றுக்கொண்டதன் மூலம், இதற்கான வழக்குரையுரிமையை நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
அஜித் ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. “அடைத்துவைக்கப்பட்டதாக சொன்ன நபர் எங்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நாங்கள் பேசினோம், அவரை அவரது தாய் சட்டவிரோதமாக அடைத்து வைக்கவில்லை என்று நம்பிக்கை வந்ததால் ஆட்கொணர்வு மனு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது” என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அப்பாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் ஜி.சத்யா மற்றும் சஞ்சேஷ் மகாலிங்கம் ஆகியோர் பேசும்போது, “ஒரு பால் ஈர்ப்புகொண்ட ஒருவர் தந்த மனுவின் அடிப்படையில் அவரது இணையரை ஆஜராகும்படி உத்தரவிட்டதில், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்ற வழக்குரையுரிமையை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இணையர் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்படும் போது அவரை ஆஜர்படுத்தக்கோரியும் வழக்காடும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சுயமரியாதை மாதத்தின்போது வெளியிடப்பட்டிருக்கிறது” என்று கூறினர்.
மேலும் வழக்கறிஞர்கள் இதுபற்றிப் பேசும்போது, “ஆஜர்படுத்தப்பட்ட நபர் தன்னுடைய இணையரை சந்திப்பதற்குத் தடைஇருக்காது என்றும் நம்புகிறோம். மனநல மருத்துவமனைகளில் சேர்க்கபட்டு அவரது பாலீர்ப்பு தன்மை மாற்ற முனையும் போலிசிகிச்சைகளுக்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், அதற்கான முயற்சிகளும் இருக்காது என்று நம்பலாம்” என்று தெரிவித்தனர்.
மூலம்: தி நியூஸ் மினிட்