இருபாலீர்ப்பு – வீடு சேர்வதும் வீடற்று இருப்பதும்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய பாலியல்பைக் குறித்து எழுதுவது எனக்கு சிரமமான காரியமாக இருந்து வந்திருக்கிறது. எழுதுவதைத் தொழிலாக கொண்ட எனக்கு இது எரிச்சலூட்டும் விஷயமாகத்தான் இருந்தது. ஆனால் இந்த இடர்பாடு சமூகம் வளர்க்கும் பயத்தால் விளைந்தது அல்ல. இந்த தயக்கமும் குழப்பமும் இருபாலீர்ப்பு பால்புதுமையினராக ஒவ்வொரு நாளும் வாழும் ஆழங்களில் இருந்தும் அது சேர்க்கும் அர்த்தங்களில் இருந்தும் உருவாகின்றன. பல நேரங்களில் நான் அந்த ஆழத்தில் தொலைந்து விடுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் இருபாலீர்ப்பு கொண்ட நபராக இருப்பது என்பது, திசை மாறிக்கொண்டே இருக்கும் நீரோட்டத்தில் மிதந்து கொண்டிருப்பது, எல்லைகள் தொலைக்கப்பட்ட வெளிகளில் தொலைக்கப்பட்ட எல்லைகளையும் தாண்டுவது. ஆகையால், என்னுடைய அடையாளம் என்பதுதான் என்ன என்று எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி நிறுத்த முடியாததாக இருக்கிறது. ‘என்னுடைய இந்த உணர்வுதான் என்னுடைய பாலியல்பு’ என்று ஒரு உண்மையைப் பற்றிக் கொள்ளும்போது, அந்த உண்மை வேறு வடிவம் எடுத்துக்கொள்கிறது. இந்த அனுபவங்கள் புனைவுகளுக்கு உதவியாக இருந்தாலும், என்னுடைய உணர்வுகளை எனக்கு நானே விளக்குவது கடினமாக இருந்து வந்திருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், நான் என்னை இருபாலீர்ப்பு கொண்ட பால்புதுமையினராக அடையாளப்படுத்திக்கொண்டு வந்துள்ளேன். என்னுடைய நெருக்கமான நண்பர்களுக்கு இது தெரியும். ஆனால், இருபாலீர்ப்பு என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? ஆம், ஆணாக மற்றும் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இரு பாலினத்தைச் சேர்ந்த நபர்களின் மீது ஈர்ப்பு ஏற்படும் என்ற பொதுவான கருத்தை அது சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த கருத்து, இருபாலீர்ப்பு வாழ்பனுபவத்தின் மேற்பரப்பை மெலிதாகத் தொட்டுச் செல்லும் அளவுக்கான அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. இருபாலீர்ப்பை உணரும் உடல்கள் பன்மைத்துவத்துடன் மிளிர்கின்றன, எங்களது மனங்கள் எல்லைகளற்று விரிந்திருக்கின்றன. ஒவ்வொரு இருபாலீர்ப்பு கொண்ட நபருடைய அனுபவமும் தனித்துவமானவை. நாங்கள் பால்புதுமையின காதல் என்னும் வண்ணங்கள் தெறிக்கும் ஆழிக்குள் மனத்தடைகள் இன்றிப் பயணிக்கிறோம். அப்படியெனில், எங்களது பாலியல்பு என்பது ஓடும் நீரின் பண்பைக் கொண்டிருக்கிறது.

இருபாலீர்ப்பு அர்த்தப்படுத்துவதற்கு சிக்கலானது

ஒரு பெண்ணாக ஒருநாள் நான் ஒரு பெண் மீதான ஈர்ப்பை உணர்கிறேன், மறுநாள் நேற்றைய தினத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பெண்ணாக ஒரு ஆண் மீதான ஈர்ப்பை உணர்கிறேன். பாலின வெளிப்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் சிலநேரங்களில் பெண்தன்மை என்று குறிக்கப்படும் பாலின வெளிப்பாட்டின் கீழ் நான் தங்குகிறேன், சில நேரங்களில் ஆண்தன்மை என்று குறிக்கப்படும் பாலின வெளிப்பாட்டின் கீழ் தங்கிச் செல்கிறேன், தன்பாலீர்ப்பு மற்றும் எதிர்பாலீர்ப்பு உறவுகளில் என்னுடைய அடையாளங்கள் இப்படித்தான் மாறிக்கொள்கின்றன. எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் மீதும் ஈர்ப்பை உணராத நாட்களும் அவற்றுள் உண்டு. நீர்த்தன்மையான இந்த பாலியல்பு அழகானது, சுயத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கான அத்துணை திறப்புகளையும் உள்ளடக்கியது. ஆனால், புரிந்துகொள்ள முடிகின்ற ஈர்ப்பு சார்ந்த எண்ணங்களுக்கும் மனதின் கைகளில் பிடிபடாமல் சுற்றுகின்றன ஈர்ப்பு சார்ந்த எண்ணங்களுக்கும் இடையேயான ஓயாத உரையாடல்கள் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, எதிர்பாலீர்ப்பு மற்றும் தன்பாலீர்ப்பு கொண்ட நபர்களை விட இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள் மனஉளைச்சல் மற்றும் மனப்பதட்டம் உருவாவதற்கான சூழ்நிலைகளுக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.

இந்த நிச்சயமற்ற தன்மை விளைவிக்கும் வேதனையை முடிக்கவேண்டி, ஏதேனும் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி நானே என்னை நிர்பந்தித்திருக்கிறேன். உண்மையில், என்னுடைய பதின்பருவத்தின் பெரும்பாலான நாட்களில் நான் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்து விட்டதாக நம்பியிருக்கிறேன். அப்போது நான் ஒரு தன்பாலீர்ப்பு கொண்ட பெண் என நினைத்திருந்தேன். என்னுடைய முதல் காதல்பெருக்கு உணர்வு ஒரு பெண்ணுடன் ஏற்பட்டதுதான். நான் ஆணாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மீதும் ஈர்ப்புவயப்படுகிறேன் என்பது எனக்கு பிற்பாடுதான் தெரிந்தது. ஆனால் இந்த உண்மை புரிந்த பின்னர், எனக்கென ஒரு நிலையான அடையாளம் இல்லாத உணர்வு தொடர்ந்து இருந்தது. என்னை ஒரு தன்பாலீர்ப்பு கொண்ட பெண்ணாக நான் உணரும்போது, என்னுடைய எதிர்பாலீர்ப்பு அடையாளத்தை நான் ஒதுக்கித் தள்ளுகிறேன் என்ற உணர்வு இருந்தது, அதே போலதான் நான் எதிர்பாலீர்ப்பு கொண்ட பெண்ணாக உணரும் போதும். ஆகையால், நான் எந்த அடையாளத்தை அந்த நேரத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்ள நேரிட்டாலும் நான் என்னைத் தவறாக வழிநடத்துகிறேன் என்றே எண்ணி வந்திருக்கிறேன்.

ஒரு சுயத்தை இன்னொரு சுயத்திடம் விளக்குவது கடினமாக இருக்கிறது, ஏனெனில் அனைத்துமே கலவையான உணர்வுக் குவியல்களின் தொகுப்பாகவும், மாறக்கூடிய வடிவங்களாகவும் இருக்கின்றன. சில நேரங்களில், இருபாலீர்ப்பு கொண்ட நபர்களை நான் இருத்தலியல் தத்துவவாதிகளாக நினைத்துப் பார்ப்பது உண்டு. நாங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலிருந்து மற்றொன்றுக்கு நகரும்போது எங்களுக்கு நாங்களே புது அர்த்தங்களை உருவாக்குகிறோம், ஒவ்வொரு நொடிகளையும் வாழும் அனுபவத்தைப் பெறும்போதும் வாழக் கிடைக்காத சாத்தியங்களை நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. ஒரு வகையில் பார்த்தால் இது சார்ட்ராவின் இருத்தல் மற்றும் ஒன்றுமில்லாமை கோட்பாடு (நாம் ஒருவரின் இருத்தலை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் நமக்குள் இருக்கும் மற்றொருவரின் இருப்பை மறுக்கிறோம்) போல இருக்கிறது. ஆனால் இரண்டின் இருப்பையும் நிராகரிக்க முடியாது, ஒன்று ஈர்ப்பு நிகழும் தளத்தில் அந்த நேரத்தில் இருந்தால், மற்றொன்று மூளையின் இன்னொரு பகுதியில் இருக்கத்தான் செய்கிறது. இவை இரண்டும் முழுமையின் இரு கூறுகள். இருபாலீர்ப்பை பொறுத்தவரை இதுவும் உண்மைதான்.

வீடு சேர்வதும் வீடற்று இருப்பதும்

இருபாலீர்ப்பு வாழ்வை வாழ்வது நிழல்களுக்குள் குடியிருப்பது போல, கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட சாம்பல் வெளியில் இருப்பது போல. எங்களுக்கு எதிர்பாலீர்ப்பு உலகில் இடமிருப்பது போல இருக்கும், ஆனாலும் இருக்காது. பால்புதுமையின உலகில் இடமிருப்பது போல இருக்கும், ஆனாலும் இருக்காது. ஏனெனில், எங்களது ஈர்ப்புணர்வுகளில் பாதி இயல்பானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால் மிச்சம் இயல்புக்கு மாறுபட்டவையாகத்தான் கருதப்படுகின்றன. நாங்கள் எங்கும் சந்தேகத்திற்கு உரியவர்களாகக் குறிக்கப்பட்டிருக்கிறோம். இருபாலீர்ப்பு கொண்ட நபர்களான நாங்கள் இதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினால், நாங்கள் பாதி புரட்சி தான் செய்கிறோம் என்று கூறினால், அது எங்களைக் குறித்து என்ன மாதிரியான பார்வையை உருவாக்குகிறது? சிலர் இது ஒரு வசதியான அடையாளம் என்று கருதலாம். ஆம், சிலவற்றின் அடிப்படையில் இது வசதியான அடையாளம் என்று கூற முடியும்தான். ஆனால், ‘இருபாலீர்ப்பு அடையாளத்தைக் கொண்டிருப்பதனால் கிடைக்கும் சலுகைகள்’ என்ற பேச்சின் பெரும்பாலான கூற்றுகள் பொய். எதிர்பாலீர்ப்பு கொண்ட நபராக அடையாளப்படுத்தப்படும் வாய்ப்பைப் பெற்றிருப்பது இருபாலீர்ப்புக்கே உரிய மனக்குழப்பங்களையோ போராட்டங்களையோ அழிக்கப் போவதில்லை. இரண்டு உலகங்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டிருப்பது – ஒன்றில் இருப்பதும், அதே நேரத்தில் மற்றொன்றில் இல்லாமல் இருப்பதும், ஒரே நேரத்தில் இரண்டிலும் இருப்பதும் எளிதானதல்ல.

என்னைப் போன்ற இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள், தங்களது முதல் பாவத்தின் எதிர்வினைகளை எதிர்கொண்ட பின்னர், மறுபடியும் ஒருமுறை எல்லைகளைத் தாண்டிய பாவத்திற்கான இரண்டாவது எதிர்வினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருபாலீர்ப்பு மறுப்பு பல வடிவங்களில் எங்களை வந்தடைகிறது – அது எங்களை அவமானத்திற்கு உட்படுத்துகிறது, எங்களைப் பயங்கொள்ளப்பட வேண்டியவர்களாக சித்தரிக்கிறது, நாங்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று நம்புகிறது. ஏனென்றால், பலரும் இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள் நிலையானவர்கள் அல்ல என்றும் அவர்கள் நடிக்கிறார்கள் என்றும் நினைக்கின்றனர். ஏதேனும் ஒரு பக்கத்தை எங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை எனில், நாங்கள் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எங்களது சுயத்தின் எந்த பகுதி உண்மையானதுஎன்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள்?

இத்தனை வருடங்களில் பலர் என்னுடைய முடிவுகளைக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னுடைய வேதனைகள் உண்மையல்ல, என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன் என்று உரைத்திருக்கிறார்கள். என்னுடைய இந்த அடையாளம் தற்காலிகமானது என உறுதியாக நம்பியிருக்கிறார்கள். அவர்களது அறிவின் எல்லைகளோ அறியாமைகளோ எனது உண்மைகளை வரையறுக்கப் போவதில்லை, ஏனெனில் நான் யார் என்பது எல்லா நொடிகளிலும் எனக்குத் தெரிந்திருந்தது. இருபாலீர்ப்பாளராக இருப்பது நானாக இருப்பதற்கான சுதந்திரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது, என்னுடைய அடையாளத்தின் ஒவ்வொரு நகர்வையும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது, என்னுடைய வீடு எங்கே இருக்கிறது என்று இங்கும், அங்கும், எல்லா ஈர்ப்பு உலகங்களிலும் தேடும் தேடலை வழிநடத்துகிறது. ஒரு இருபாலீர்ப்பு கொண்ட பால்புதுமையினராக வாழ்வது என்னை மேலும் மேலும் மலர்வித்துக்கொண்டே இருக்கிறது, அந்த மலர்வு அழகானது.

இங்கு உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது

சமூகம் ஈர்ப்பின் ஆசைகளைப் பாலினத்துவப்படுத்தி அதைக் கேள்விக்குட்படுத்த முடியாதவையாக நிலைப்படுத்தவும் செய்திருக்கிறது. சிலவற்றை இயல்பு என்றும் சிலவற்றை மாறுபாடு எனவும் பட்டியலிட்டிருக்கிறது. நாம் அனைவருமே முரண்பாடுகளின் வெவ்வேறு தோற்ற வெளிப்பாடுகள்தான், தொடர்ச்சியாக நமது சுயத்திற்கான புதிய வடிவங்களைக் கண்டிபிடித்துக் கொண்டிருப்பவர்கள்தான். யாருக்குத் தான் அவர்கள் யார் என்ற கேள்விக்கான விடை முழுமையாகத் தெரியும்? எல்லோரும் நம்மை ஆய்வுக்குட்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். மேற்பரப்பில் நாம் ஒரு பாதையைத் தெரிவு செய்துகொண்டோம் என நாம் நினைக்கிறோம், நாம் யார் என்பதைப் புரிந்துகொண்டோம் என நினைக்கிறோம், ஆனால் ஆழம் வேறு பற்பல திட்டங்களை எப்போதும் வைத்திருக்கிறது. ஒரு நன்னாளில் அது நமது உடல்களை இதுவரை நமது சிந்தனைக்குள் நுழையவே நுழைந்திராத இடங்களில் இருந்து மகிழ்வைப் பெறத் தூண்டலாம், நமது மனங்களைப் பகுத்தறிவுக்கு உட்பட்டு சுயத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்களைக் கற்பனை செய்ய உத்வேகப்படுத்தலாம். கேள்வி என்னவெனில், அந்த ஆழத்துள் குதிப்பதற்கான முடிவை எடுத்து, தடை செய்யப்பட்டதால் அறிந்துகொள்ள முடியாமல் போனவைகளை ஆராய நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான். மறுபடி இன்னொரு முறையும் குதித்து ஆராய வேண்டியிருந்தால் அதற்குத்  தயாராக இருக்கிறோமா? இருபாலீர்ப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் இந்த கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறார்கள்.

என் அடையாளத்தைப் பற்றிய முழு தெளிவு எனக்கு இல்லை என்ற விஷயத்தை நான் திறந்த மனதுடன் அணுகுவது எனக்கு மகிழ்வை அளிக்கிறது. எனது தெளிவின்மைகளிலும் திசைமாற்றிக் கொண்டே இருக்கும் எனது ஆசைகளிலும் நான் பெருமை அடைகிறேன். ஏனெனில் நிறுத்தங்களோ வரம்புகளோ இன்றி அன்பு செய்வதற்கான வழியை இது எனக்குக் காட்டியிருக்கிறது, எனது விதிமுறைகளில் எனது வாழ்க்கையை வாழ வழிகாட்டி இருக்கிறது. எனது உடலின் எல்லைகளைத் தாண்டுவதற்கும் என் இதயத்தின் ஆழத்தில் என்னை உணர்வதற்கும் என்னுடைய பாலியல்பு என்னை அனுமதித்திருக்கிறது. இந்த வெவ்வேறு வாழ்வுகளை நான் வாழ்ந்திருக்கிறேன், இந்த உண்மையின் வெவ்வேறு வடிவங்களை உணர்ந்திருக்கிறேன். அது ஆணுடனோ பெண்ணுடனோ என்னுடனோ, இந்த ஒவ்வொரு அனுபவமும்உண்மையானது, அந்த உண்மையின் அளவு ஒன்றில் கூடியோ இன்னொன்றில் குறைந்தோ இல்லை. இது எனக்குக் கிடைத்த பரிசு, அதை நான் கொண்டாடுகிறேன்.

இன்று, நான் திருமணமான இருபாலீர்ப்பு கொண்ட அம்மா. ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டது எனது பாலினப்புதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை (வைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்)அதே போல நான் தாயாகியிருப்பது எதிர்பாலீர்ப்பு உணர்வை நிலைப்படுத்தவும் இல்லை. நான் இன்றும் ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலின வெளிப்பாடுகளுக்கு இடையில் உற்சாகமாக வலம் வந்துகொண்டுதான் இருக்கிறேன், முழுக்க முழுக்க முரண்பட்டு இருக்கும் வகைகளில் என்னை நானே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன். அந்த தெளிவற்ற உணர்வும் என்னை விட்டுச் செல்லவில்லை. இது மட்டும்தான் மாறாத ஒரே உண்மை. என்னை நானாக ஏற்றுக்கொள்கின்ற இணையர் எனக்குக் கிடைத்ததற்காக ஒவ்வொரு நாளையும் நான் நன்றியுணர்வுடன் எதிர்கொள்கிறேன். நாளின் முடிவில் எனக்குப் புலனாவது ஒன்றே ஒன்றுதான், அன்பு என்பது அன்பு, அன்பு என்ற உணர்விற்குள் அன்பற்றோ இயல்பற்றோ எதுவும் நுழைந்து விடப் போவதில்லை.