Queer Literature in Tamil

மொழிபெயர்ப்பு: ஆசிஃபா

தன்னைப் போல் அல்லாத பிறரையும் அவர்களின் கதைகளையும் ஒதுக்கிக் கொண்டே வரும் சமுதாயம்தான் இது. ‘இயல்பு’ என்ற தங்களின் வரையறைக்குள் அடங்காதவைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் வழக்கமாக இருந்துவருகிறது. உலக அளவில், குயர் மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும், அவர்கள் கதைகளாய்ச் சொல்லும் படைப்புகள் பல இருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்தில். Sister Outsider, The Color Purple, Call Me By Your Name என்று கிளாசிக்ஸ் பட்டியலே இருக்கிறது. இந்திய அளவில், குறிப்பாக தமிழில், LGBTQIA சார்ந்த புத்தகங்களை ஒரு நபரால் தேடிப் படித்துவிட முடிவது சாதாரண விஷயமில்லை. கிராமப்புறங்களில், மூன்றாம் நிலை நகரங்களில் அப்புத்தகங்கள் கிடைப்பதுகூட இல்லை. ஒரு கடையில் ஆர்டர் செய்யலாம் என்று போனாலும், மேலும் கீழும் பார்த்துவிட்டுத்தான் புத்தகத்தை வாங்கித் தருவார்கள். இப்படியான நிலையில், இந்து மேகஸினில் வெளியான ருத் டிசௌசா பிரபுவின் இந்த கட்டுரை முக்கியமானதாக எனக்குத் தெரிகிறது.

குயர் படைப்புகளை எழுதுவதில், வெளியிடுவதில், விற்பனை செய்வதில் என்று ஒவ்வொரு நிலையிலும் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, மொழிபெயர்ப்பதில். குயர் வாழ்க்கைகளைப் பற்றிய குறைந்தபட்ச தெளிவும், புரிதலும் இருந்தால்தான் மொழிபெயர்ப்பில் ஆழம் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இப்படி, இலக்கிய வெளியில் பேசப்பட வேண்டிய சில விஷயங்களை இந்த கட்டுரை பேசுகிறது., மௌலியின் நேர்காணலின் முழுவடிவத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:

கடந்த தசாப்தத்தில் பிராந்திய மொழிகளில் LGBTQIA இலக்கியத்தின் பரிணாமம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

முதலில், ‘பிராந்திய’ மொழி என்று சொல்வதை நான் தவிர்க்கிறேன். அனைத்து மொழிகளுமே, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே வரையறுக்கப்பட்டிருக்கிறது அல்லது ஒரு பிராந்தியத்தில் இருந்துதான் தோன்றியிருக்கிறது. சில மொழிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளுடன் ஒப்பிட்டு, பிற மொழிகளை ‘பிராந்திய’ மொழிகள் என்று குறிப்பிடுவதன் மூலமாக, ‘பிராந்திய’ மொழிகளின் முக்கியத்துவம் பறிக்கப்படுகிறது. எனவே, ஆங்கிலம் அல்லாத இந்திய மொழிகளைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என்ற என் புரிதலின் அடிப்படையில் நான் இக்கேள்விக்கு பதிலளிக்கிறேன். என் விஷயத்தில், குறிப்பாக தமிழைப் பற்றிச் சொல்கிறேன்.

இந்தியாவில் அவ்வளவாக பால்புது இலக்கியம் ( ஆங்கிலத்தில் குயர் இலக்கியம் என்று சொல்லப்படுகிறது) இல்லை; ஏன், ஆங்கிலத்திலுள்ள இந்திய பால்புதுமை இலக்கியம் கூட எளிதாகக் கிடைக்காது. அப்படியே நமக்குக் கிடைப்பவையும், குறிப்பிட்ட அனுபவங்களுக்கு உட்பட்டே இருக்கிறதே தவிர, நம் நாட்டில் இருக்கும் குயர் மக்கள் வாழ்க்கையின் மாறுபட்ட அனுபவங்களை பிரதிபலிப்பதாக அவை இல்லை. தமிழில் பால்புது இலக்கியத்தைப் பொறுத்தவரை, நம் வாழ்க்கை பற்றிய புத்தகங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் அனைத்தும் குயர் நபர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அநேகமான புத்தகங்கள் எங்களாலேயே வெளியிடப்பட்டது (self-published). அதன் பின்னர், சில புத்தகங்கள் பிரபலமான பதிப்பாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்தியாவின் குயர் இயக்கத்தைப் போலவே, தங்கள் வாழ்க்கையை இலக்கியத்தின் மூலம் பதிவு செய்ததன் மூலமாக ஒரு வழியை உருவாக்கியது திருநங்கையினர் (trans-women) சமுதாயம்தான். எனக்குத் தெரிந்தவரையில், தமிழில் ஒரே ஒரு ‘வெளிப்படையாக ஒப்புக்கொண்ட’ (out) ஓர்பாலீர்ப்புகொண்ட ஆண் (கேய் / gay) எழுத்தாளர்தான் இருக்கிறார். குயர் மக்களைத் தவிர, 1960களில் கி.ரா போன்ற எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் இருக்கின்றன. குயர்/பால்புதுமையினராக அல்லாத எழுத்தாளர்களின் படைப்புகளில், வெகுசிலவைதான் நேர்மறையாக அல்லது பரிவுணர்வுடன் (empathetic) இருக்கின்றன. அவற்றைத் தவிர, ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தவோ அல்லது தங்களுடைய “எழுதும் திறனை” வெளிப்படுத்தவோ மட்டும்தான் எழுத்தாளர்களால் குயர் அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராஜேஷ்குமார், லக்ஷ்மி சரவணகுமார் போன்றவர்கள், அதிர்ச்சிக்காகவும், எதிர்மறையாகக் காட்டுவதற்காகும் குயர் கதாபாத்திரங்களை பயன்படுத்தும் மோசமான தமிழ் எழுத்தாளர்களின் எடுத்துக்காட்டுகள்.

கடந்த தசாப்தத்தில் குயர் செயல்பாட்டின் மொழி மற்றும் குயர் பேச்சுவழக்கு (discourse) ஆகியன பெரிதும் மாறிவிட்டன. இன்று வெளியாகும் இலக்கியத்தில் அந்த வித்தியாசத்தைப் பார்க்க முடியும். மேலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுடன் ஒப்பிடும்போது, இன்று குயர் மக்களின் சிக்கல்களைச் சுற்றி கணிசமான அளவு விவாதம் நடைபெறுவதால், குயர் அல்லாத வாசகர்களிடமும் குயர் இலக்கியத்தை வாசிப்பதற்கான ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், இது பரவலாக நிகழும் விஷயமல்ல. குயர் இலக்கியத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இப்படியான நிலையில், கேய் சமுதாயத்தினருக்கான (gay community) அதிகமான புத்தகங்கள் மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் என்ன?

இன்று நாம் வாழும் சமூகத்தையும், வாழ்க்கைகளையும் இலக்கியம் பிரதிபலிக்கிறது. குயர் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணமாக இருப்பதில் அவை மிக முக்கியமானவை. கேய் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய உரையாடல்களில் பெரும்பாலானவை நகர்புறத்தை சார்தவையாகவே (urban spaces) இருக்கிறது, அதுவும் குறிப்பாக ‘மேல்’ சாதியைச் சேர்ந்த கேய் ஆண்கள், அதிலும் முக்கியமாக ஆங்கிலம் பேசும் மக்கள். மேலும், தன்னை ஒரு லெஸ்பியன் (lesbian), ஈரராகவோ (bisexual) அல்லது கேயாகவோ (gay) அடையாளப்படுத்திக்கொள்வது என்பது நகர்ப்புற நிகழ்வு என்ற தவறான புரிதலையும் இது ஏற்படுத்துகிறது. ஆனால், LGBTQIA உரிமைகளுக்காகப் பேசும் எங்களில் பலரும், தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் அல்லது கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள்தான். எங்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஐடியல்’-ஆன ஒரு கேய் என்று தாங்கள் நினைப்பவர்களைத் தேடும் ஊடகம் கூட, தொழிலாளிகள் அல்லது தலித்-பகுஜன் கேய் நபர்களின் குரல்களை ஒதுக்கிவிடுகின்றன. நகரம் எங்களுக்கு உதவுகிறது, மேலும், இந்நகரம் தரும் அநாமதேயம் எங்களுக்கும் மேலும் குரல் கொடுத்து, எங்களை மேலும் புலப்படுத்துகிறது.

இந்த நகர்ப்புறங்களுக்கு வெளியில் (நகர்ப்புறங்களுக்கு உள்ளேயும்), LGBTQ உரிமைகள் தொடர்பான உரையாடல் பரவுதல் என்பது மக்களின் மொழியில் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல், குயர் நபர்களின் வாழ்க்கைகளை நேர்மறையாக பிரதிநிதித்துவப்படுத்துவதும், அது தொடர்பான இலக்கியங்களும் வளங்களும், தமிழ் மட்டுமே பேசும் குயர் நபர்களுக்கு ஒருவித நம்பிக்கை கொடுக்கிறது (validate).

இன்று நம்மிடையே, தங்கள் படைப்புகளை தமிழில் வெளியிட விரும்பும் சில கேய் நபர்கள் இருக்கிறார்கள்; பதிப்பாளர்கள் இப்போதும் எங்கள் வாழ்க்கையைப் பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள், எனவே தமிழ் இலக்கியத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மொழி அல்லது கதையாக இல்லாததால், எங்கள் கதைகளை அவர்கள் இலக்கியமாகப் பார்ப்பதில்லை.

இத்தகைய இலக்கியங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன, பிராந்திய மொழிகளில் பொருத்தமான படைப்புகளுடன் ஏன் பல எழுத்தாளர்கள் வெளி வருவதில்லை என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாக தம் உரிமைகளுக்காக சமுதாயம் இவ்வளவு கடினமாக வேலை செய்யும் போது? இல்லையென்றால், இவ்வகை இலக்கிய உலகில் பல படைப்புகள் வெளியாகின்றன என்று நினைக்கிறீர்களா?

உங்களிடம் ஒன்று கேட்கிறேன், இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எத்தனை குயர் எழுத்தாளர்களை உங்களுக்குத் தெரியும்? உங்களால் பத்து நபர்களைச் சொல்ல முடிந்தால், பத்து தமிழ் குயர் எழுத்தாளர்களை என்னால் சொல்ல முடியும். நான் முன்பு சொல்லியது போல, நம் நாட்டில் குயர் இலக்கிய பற்றாக்குறை இருக்கிறது. அதற்கான காரணம், ஆங்கிலத்திலும் ஆங்கிலம் அல்லாத இந்திய மொழிகளிலுமான எங்கள் படைப்புகளை வெளியிட பெரிய வெளியீட்டாளர்கள் தயாராக இல்லை. குயர் வாழ்க்கை பற்றிய குறைந்தபட்ச தெளிவுகூட இல்லாதவர்கள்தான் எடிட்டர்களாக உள்ளனர். குயர் வாழ்க்கை பற்றிய தெளிவு இல்லாத ஒரு நபரால் எப்படி இந்த இலக்கியத்துடனோ, எழுத்தாளருடனோ பணிபுரிய முடியும், எப்படி படைப்புகளை சரிபார்க்க முடியும்? என்னுடைய கேள்வி, இந்தியாவில் உள்ள வெளியீடுகள் எப்போது குயர் நபர்களை உள்ளடக்கியதாக மாறப்போகின்றன? இந்நிலையிலும், இலக்கியத்திலுள்ள குயர் வாழ்க்கைகளின் ‘இயல்புத்தன்மை’ (normativity) மற்றும் ‘தவறான பிரதிநித்துவம்’ (misrepresentation) ஆகியவற்றை சிலர் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் இக்காரணத்திற்காகத்தான் தொடங்கப்பட்டது. ஏனென்றால், இங்கிருக்கும் பதிப்பகங்களும் இலக்கிய வெளியும், எங்கள் கதைகளை அவை இருக்கும் பெட்டிக்குள்ளேயே அடைத்து வைக்க முற்படுகின்றன என்று நாங்கள் உணர்தோம்.

LGBTQIA இலக்கியம் எப்பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அவ்வணுகுமுறை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

‘ஸ்ட்ரெய்ட்’ இலக்கியம் என்னவெல்லாம் செய்கிறதோ, அதை செய்ய வேண்டும்.

குயர் இலக்கியம், இலக்கியம்தான். இந்த உலகமே cis-het* மையமாக இருப்பதாலும், இலக்கிய வெளியில் cis-het இலக்கியமே ஆதிக்கம் செலுத்துவதாலும்தான் ஒரு இலக்கியத்தை நான் பால்புது இலக்கியம் என்று சொல்லுவேன். இந்த ஆதிக்கத்தைச் சீர்செய்யவே, LGBTQIA நபர்களால் எழுதப்பட்ட இலக்கியம் பால்புது இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், குயர் நபர்கள் உருவாக்கும் இலக்கியங்களில் நாம் அனுபவிக்கக் கூடிய பல விஷயங்களும் cis-het நபர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் விஷயங்களும் இருக்கின்றன.

* cis-het (cisgender-heterosexual) திருநர் அல்லாத எதிர்பாலீர்ப்பு கொண்ட நபர்

இவ்வகையான இலக்கியத்தை ஊக்குவிக்க, குயர் சென்னை க்ரானிக்கிள்ஸ் நிறுவனங்களிடம் இருந்தும், பொதுவான வாசகர்களிடம் இருந்தும் எவ்வகையான ஊக்குவிப்பு தேவைப்படுகிறது?

நிதி. நாங்கள் தினமும் செய்யும் வேலையின் மூலம் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டே குயர் சென்னை க்ரானிக்கிள்ஸ் நிலைத்திருக்கிறது. இந்தியாவில் முதல் குயர் இலக்கிய திருவிழாவான, 2018ஆம் ஆண்டு நடந்த சென்னை குயர் இலக்கிய திருவிழா, கூட்டு நிதி (crowd funding) மூலமாகவே ஒருங்கிணைக்கப்பட்டது. செப்டம்பரில் நிகழவுள்ள இந்தாண்டின் குயர் திருவிழாகூட இப்படித்தான் நிகழவுள்ளது.

புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய பங்கு புத்தக அரங்குகளுடையது என்று சொல்வேன். அதிர்ஷ்டவசமாக, குயர் இலக்கியத்தை வைத்துள்ள சில புத்தக அங்காடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை பெரும்பாலும் முற்போக்கான வெளிகள், மேலும் எங்களுக்கு உதவக்கூடியவை.

உங்கள் வேலையில் எதிர்மறையான பின்னடைவை சந்தித்து இருக்கிறீர்களா? குறிப்பிட்டு ஏதாவது நிகழ்வு மற்றும் அதை எப்படிச் சமாளித்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

நான் முன்பு சொன்னதைப் போலவே, குயர் நபர்களின் வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரியாது. சில நேரங்களில், குயர் நபர்களின் இருப்பே மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, எங்களின் கதைகளும், நாங்கள் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். குயர் இலக்கியங்களைத் தேடிப் படிப்பவர்கள் முக்கியமானவர்கள் (niche). எனவே நான் பெரிய அளவிலான பின்னடைவைச் சந்தித்தது இல்லை. ஆனால் அது என்றாவது நிகழும் என்று எனக்குத் தெரியும், யாரவது வெறி பிடித்தவர்கள் (bigot) சண்டை போட வந்தால் நிகழும். அவை தவிர, விமர்சனம் அல்லது கருத்துப் பகிர்வு என்ற பெயரில் தினமும் குயர் வெறுப்பைச் (queerphobia) சந்திக்கிறேன்.

சென்னையில் ஒரு வெளிநாட்டு கலாச்சார அமைப்பின் கலை மற்றும் கலாச்சாரத் துறையை கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணுடனான சந்திப்பில் இருந்தேன். “குயர்” என்ற சொல்லுடன் தான் உடன்படவில்லை என்று அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார், மேலும் எங்கள் பதிப்பகம் ஏன் “குயர் சென்னை க்ரோனிகல்ஸ்” என்று அழைக்கப்படுகிறது என்பது தனக்குப் புரியவில்லை என்றும் கூறிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு cis-het பெண். குயர் மக்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என்று சொன்ன அவர். எங்களை அழைத்து, அவர் சொன்ன முதல் விஷயமே, எங்கள் பிராண்ட் பெயரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுதான். அப்போது என்னுடைய கேள்வி, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமா அல்லது அவர்களுடன் ஈடுபட வேண்டாமா என்பதுதான். நான் இரண்டாவதைத் தேர்வு செய்தேன்.

மொழியின் சவால் இதில் ஏதேனும் பங்கு வகிக்கிறதா? காரணம், நம் நாட்டில் பல மொழிகள் இருக்கின்றன, ஒவ்வொரு மொழியிலும் தங்கள் படைப்புகளுடன் முன்வரும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் போதுமான அளவு இல்லை. இப்படியிருக்க, மொழிபெயர்ப்பு ஏதேனும் பங்குவகிக்கிறதா, அல்லது வகிக்க வேண்டுமா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆனால், ஆங்கில இலக்கிய வெளி மற்றும் பதிப்பாளர்கள் பிரபல எழுத்தாளர்களை மட்டும் தேர்வு செய்யாமல், மொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்களை அடையாளம் காண இப்போது இருப்பதைவிடச் சிறந்த வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது குயர் இலக்கியத்திற்கு மட்டும் நான் சொல்லவில்லை. பல்வேறு மாறுபட்ட கதைகளை ஒன்றாகக் கொண்டுவர மொழிபெயர்ப்பு உதவுகிறது என்று நான் நம்புகிறேன். ‘பிரதான’ (mainstream) இலக்கிய வெளி எப்படிச் செயல்படுகிறதோ அப்படியே.

இவ்வகை இலக்கியத்தை ஊக்குவிப்பதிலும், பல வாசகர்களைச் சென்றடைவதிலும் மின் தளங்களின் பங்கு என்ன? அடுத்தடுத்த நிலைகளில் இவற்றின் பங்கு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சாதாரணமாகவே, குயர் இயக்கத்தில் இணையதளம் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இணையத்தை வைத்துதான் பல குயர் நபர்களும் ஒவ்வொருவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், குயர் தொடர்பான விஷயங்கள் இருக்கும் வலைப்பூ பதிவுகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். குயர் எழுத்தாளர்களை அடையாளம் காண இது பெரிதும் உதவுகிறது. தற்போதைய நிலையில், குயர் இலக்கியத்தை வழங்கக்கூடிய வெளி மிகவும் குறைவு. இணையதளம் இந்த வெற்றிடத்தை நிரப்புகிறது. இந்தக் குறைபாட்டைச் சீர் செய்யவே குயர் இலக்கியத் திருவிழா ஒருங்கிணைக்கப்பட்டது. வரும் ஆண்டுகளில், எங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், பல குயர் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைக் கண்டுபிடிக்கவும் இணையதளம் நிச்சயமாக உதவும் என்று நான் நம்புகிறேன்.

— –

* cis-het (cisgender-heterosexual) திருநர் அல்லாத எதிர்பாலீர்ப்பு கொண்ட நபர்

~*~

In English: Queer Literature in Tamil and other Indian Languages