சென்னை குயர் இலக்கிய விழா 2019 — வாசிப்புமேடை — அவள்

தனசக்தி

சாக்ஸோபோனிலிருந்து
வழிந்தோடும் காற்றுக்கெல்லாம்
அவளின் அக்குள் சுகந்தம்
அவளில்லாத இரவுகளுக்கெல்லாம்
இந்த அறை இப்படியாகவே
அவளை நுகர்கிறது.
முன்னந்திவேளைகள்
அழகாய் தெரிய ஆரம்பித்த
நாளன்றுதான் பள்ளிக்கூடவேதியியல்
கூடத்தில் என் பின்னலுக்கு பூ வைத்தபடியே காதோரம் லவ் யூ என்றாள்
மைதீட்டிய விழிகள் படபடக்க
விரல்களை ஆட்டி ஆட்டி அவள்
பேசும்போதெல்லாம் 
கணித பாட வகுப்பு குறித்த கவலையில்லாமல் மகிழ்ந்திருக்கிறேன்

நாங்கள் சித்திரம் தீட்டிய
அதே மஞ்சள் பூக்கள் பூக்கும் மரம்
சன்னல் வழியே காண
அரவமற்ற நதிக்கரையோர வீடு
அதன் புழக்கடையில் நந்தியார்வட்ட 
பூவாய் முளைத்திருந்தது
அவளின் உடல்

– தனசக்தி