அனன்யா குமாரி அலெக்ஸின் மரணமும் போராட்டங்களும்

அனன்யா குமாரி அலெக்ஸ் இன்ஸ்டாகிராமிலிருந்து

ஜூலை 20, 2021 அன்று அனன்யாவின் உடல் அவர் வாழ்ந்து வந்த அடுக்ககத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தற்கொலையால் இறந்து போயிருக்க வேண்டும்  என்று கூறப்படுகிறது. அனன்யாவின் பெயர் ஊடகங்களில் அடிபடுவது இது முதன்முறையல்ல. அவர் கேரளத்தின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி மற்றும் கேரள சட்டமந்றத்தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை. 2021 கேரளா சட்டமன்றத் தேர்தலில் போது வெங்கரா தொகுதியில் போட்டியிட்டார். மருத்துவர்களின் அலட்சியம் தான் அவருடைய இறப்பிற்குக் காரணம் என்று கேரளத்தின் குயர் அமைப்புகள் சாடுகின்றன. அனன்யாவிற்குப் பால் மாற்று அறுவை சிகிச்சையை (Gender Affirmation Surgery) நடத்திய மருத்துவர் அர்ஜுன் அசோகனின் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிகள் நடக்கின்றன. அந்த மருத்துவமனை வாசலில் திருநர் உட்பட்ட பால்புதுமையினர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி, அனன்யாவின் துணைவர் ஜிஜூவின் உடலும் இறந்த நிலையில் அவர் நண்பரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தற்கொலையால் இறந்திருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.   

அனன்யாவின் இறப்புச் செய்தி குறித்து திருநர் நண்பர்களிடம் உரையாடியபோது அழுகையுடனும் ஆத்திரத்துடன் அத்தனை கதைகளைப் பகிர்ந்தனர். பால் மாற்று அறுவை சிகிச்சைக்காக (Gender Affirmation Surgery) தாய்லாந்து செல்வது, முறையான வசதிகள் இன்றி சிறு சிறு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது, தையல் கிழிந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி இன்றி கையில் காசு, உதவிக்கு ஒரு ஆள் கூட இல்லாமல் செல்வது, திருநங்கை என ஒவ்வொரு இடத்திலும் புறக்கணிக்கப்படுவது, தவறாக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையை சரி செய்ய மீண்டும் மீண்டும் பல அறுவை சிகிச்சைகள் செய்வது என அவர்கள் பகிர்ந்தவை திருநர் சமூக மக்களின் அடிப்படை உரிமைகள் இங்கு எந்தவித மதிப்பும் இன்றி குழியில் தள்ளப்படுவதை எடுத்துக்காட்டின. அவர்கள் கேட்ட இன்னொரு கேள்வி – ஒரு திருநங்கை தற்கொலையால் இறப்பது இது தான் முதல் முறையா? என் தோழி இறந்தபோது, என் மகள் இறந்தபோது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? ஊடகங்களில் பரிச்சயமான, பொது சமூகத்தால் அழகு என கருதப்படுபவர்கள் இறந்தால் மட்டுமே அது உங்கள் கவனத்திற்கு வரும் இல்லையா? இந்த கேள்விகள் அனைத்தும் இதைத் தான் கேட்கின்றன – பால் மாற்று அறுவை சிகிச்சை (Gender Affirmation Surgery) திருநர் சமூக மக்களின் உயிர் காக்கும் சிகிச்சையாக இருக்கும்போது, அதில் ஏன் இவ்வளவு அலட்சியம்? சரியான பால் விகுதியிட்டு (Pronouns)திருநர், பால்புதுமையினரை அழைப்பது குயர் சமூகத்தினரின் தற்கொலை விகிதத்தைக் குறைக்கும் என்று அயல்நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இங்கு திருநர், பால்புதுமையினர் மக்கள் தற்கொலையால் இறப்பதன் எண்ணிக்கை, விகிதங்கள் போன்ற தரவுகள் கூட இல்லை. இந்த அலட்சியம் தான் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சையிலும் பிரதிபலிக்கிறது.

அனன்யா குமாரி அலெக்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு கொச்சியில் இருக்கும் ரெனய் மெடிசிட்டி என்னும் மருத்துவமனையில் பால் மாற்று அறுவை சிகிச்சை (Gender Affirmation Surgery) எடுத்துக்கொண்டார். ஒரு வருடம் ஆகியும் கூட அவருக்கு உடல் உபாதைகள், வலிகள் இருந்து வந்துள்ளன. சிறுநீர் கழிக்கக் கூட கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அவருடைய நேர்காணல் ஒன்றில் “வெகு நேரம் நின்றாலோ தும்மல் வந்தாலோ சிரித்தாலோ பல் விளக்கினாலோ கூட எனக்குக் கடும் வலி ஏற்படுகிறது. மூச்சு விடுவதிலும் சிரமம் உள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு மத்தியில் இந்த சிகிச்சையைப் பேராவலுடன் எடுத்துக்கொண்டேன். ஆனால், என்னுடைய அந்தரங்கப் பகுதி இப்போது கத்தியால் இரக்கமின்றி கூறுபோடப்பட்டது போல் இருக்கிறது” என்று கூறியிருந்தார். அனன்யா தனது சிகிச்சை சார்ந்த ஆவணங்களை பல முறை கேட்டும் மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. இரண்டு முறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போன அனன்யாவை மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பிவிட்டது என்று அனன்யாவின் தந்தை அலெக்சாண்டர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

திருநர் சமூகத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு கனவு. உடல், உள்ளம் சார்ந்த மன உளைச்சலுக்கு (Gender dysphoria, பாலின அடையாள முரண்பாடு) தன்னுடைய பொருந்தா உடலில் சிக்கிக்கொண்டிருக்கும் வேதனைக்கு மருந்தாக உதவி செய்வதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம். அவ்வளவு எளிதில் இந்த அறுவை சிகிச்சையை எடுத்துகொள்ள முடியாது. ஒரு வருடத்திற்கு உளவியல் ஆலோசனை (தற்போது தமிழகத்தில் இந்த காலத்தை மூன்று மாதங்களாகக் குறைத்திருப்பது சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது), அந்த பரிசோதனையின் முடிவில் அறுவை சிகிச்சை, தொடர்ந்து ஹார்மோன் சிகிச்சை என்று வருடக் கணக்கில் நீளும் சிகிச்சை இது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை, தனியார் மருத்துவமனைகளில் இரண்டு முதல் எட்டு இலட்சம் வரை அறுவை சிகிச்சைக்கு மட்டும் செலவாகிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பத்திற்கேற்ப சூழலுக்கேற்ப சங்கிலித் தொடராக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வது, எந்த அறுவை சிகிச்சை வேண்டும் என்று தேர்வு செய்வது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பம், உரிமை சார்ந்தது, சிகிச்சையைத் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்தால் அவர்கள் ‘முழுமையான’ திருநர் ஆகிவிடுவதில்லை, சிகிச்சை வேண்டாம் என்று சொன்ன காரணத்தால் எந்த திருநரும் திருநர் ஆகாமல் போய்விடப்போவதில்லை, ஒருவர் தான் திருநர்/ஆண்/பெண், தன்னுடைய பால் விகுதி இது என்று சொன்ன பின்னர் அவரின் உடல், உடை, குரல் சார்ந்து அவர் திருநர் இல்லை என்றோ, அவர் இந்த குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்தவர்தான் என்றோ, அவர் ஒருநாளும் மாற முடியாது என்று அவரின் வழங்கப்பட்ட பெயரிட்டு (வீட்டில் வைத்த பெயர், Dead name) அவரை அழைக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அதனால் தான் திருநர் மக்களுக்கு இந்த அறுவை சிகிச்சை என்பது பல வருட கனவாக இருக்கிறது. இதற்குப் பணம் சேர்ப்பதற்கு தான் பலரும் தவியாய்த் தவிக்கிறார்கள். எளிதில் கிடைக்காமல் இருக்கும் இந்த சிகிச்சை திருநர் சமூக மக்களை முறையான, பாதுகாப்பான இடங்களில் இருந்து தள்ளிவிடுகிறது. தவறாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு திருப்பி காசு சேரும் வரை வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறகு மறுபடி அறுத்து, தைத்து… இப்படித் தான் திருநர் மக்களின் உடல்நலம் இங்கு அணுகப்படுகிறது.

அனன்யாவின் தற்கொலையோ அவருக்கு செய்யப்பட்ட கேடான சிகிச்சையோ திருநர் சமூகத்தில் புதிது கிடையாது. ஆனால் இது போன்று எத்தனை சாவுகளை (எத்தனை சாவுகள் என்ற தரவுகளும் கிடையாது), முறைகேடான சிகிச்சையின் வலிகளை அவர்கள் சுமந்து கொண்டிருக்கவேண்டும்? நால்சா தீர்ப்பு வழங்கிய சுயமாக தீர்மானிக்கும் உரிமையை (Self identification rights) தற்போது வெளிவந்திருக்கும் திருத்தம் மறுத்திருக்கிறது. தான் யார் என்று சொல்வதற்கான அடிப்படை உரிமையைக் கூட மறுக்கும் அரசிடம் இந்த அறுவை சிகிச்சைக்கான முறையான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கு போய் எழுப்புவது? 

பொது சமூகத்திடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டு விஷயங்கள் தான் – பால் விகுதியை (Pronouns) மதியுங்கள், உங்களை சுற்றிலும் இருக்கும், நடக்கும் திருநர் சமூகத்திற்கு எதிரான (Transphobic) விஷயங்களை எதிர்த்து நில்லுங்கள், சரி செய்யுங்கள். இந்த போராட்டத்தில், திருநர் மக்கள், பால்புதுமையினருடன் உடன் நில்லுங்கள்.