பால்புதுமையினர் பற்றி கொள்கைக்குழு கூட்டத்தில் உரையாடல்

தமிழ்நாடு அரசின் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு மாநில வளர்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும்.

பேராசிரியர் ஜெயரஞ்சன் துணைத்தலைவராக இருக்கும் இந்தக் குழுவின் சார்பாக மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய கூட்டங்களும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜூலை 27, 2021 அன்று, கொள்கைக் குழுவின் உறுப்பினரான முனைவர். நர்த்தகி நடராஜ் அவர்களுடன் மற்ற உறுப்பினர்கள் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கின்றனர். பால்புதுமையினர் (LGBTQIA+) பற்றியும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் நடந்த இந்த உரையாடலில் கொள்கைக்குழு உறுப்பினர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கியதாகவும், பால்புதுமையினர் சமூக மக்களின் கருத்துக்களை கேட்டுப்பெற வேண்டியது மிகவும் அவசியம் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒத்துக்கொண்டதாகவும் குழுவின் உறுப்பினரும், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கலை இலக்கியத் துறையில் இருப்பவர்களுடனான உரையாடலைத் தொடர்ந்து மாநகரம் முழுவதையும் ஓவியங்கள், மற்றும் கலைப்படைப்புகள் மூலம் வண்ணமயமாக்க வேண்டும் என்று கொள்கைக்குழு உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா ட்வீட்டரில் தெரிவித்திருந்தார். பால்புதுமையினர் சமூகத்திலும் நல்ல ஓவியர்களும், கலைஞர்களும் உண்டு, அவர்களையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அதற்கு தன் ஆதரவையும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்குழுவில் பால்புதுமையினர் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் உரையாடல்கள் நடப்பது முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.