அருவி எனும் எதிர்பாலீர்ப்புகொண்ட தேவதையும் அருவியால் வஞ்சிக்கப்படும் எமிலியும்

Image: Indiaglitz

நான்கு வருடங்கள் இருக்கும், என்ஜிஓக்கள் மூலம் புரட்சி ஏற்பட்டு பால்புதுமையினர் வாழ்க்கையில் ஒளி ஏற்பட்டுவிடும் என நம்பித்திரிந்து கொண்டிருந்த காலமது. தமிழ்நாட்டில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்டமாவட்டங்களில் உள்ள என்ஜிஓக்களில் ஓர்பாலீர்ப்புகொண்ட ஆண்கள்(என்ஜிஓக்களின் மொழியில் ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்கள் — MSM) மற்றும் திருநங்கைகளைப்பற்றி ஒருவருடத்திற்கு ஆய்வுசெய்து களப்பணி மேற்கொண்டிருந்தேன். களப்பணி ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் நலவாழ்வுக்கானது என்கிற போர்வையில் இருந்தாலும் முழுக்க முழுக்க எச்ஐவி / எயிட்ஸ் பணிகளைப்பற்றிய கேள்விகளைக்கொண்ட ஆய்வு. எனது களப்பணியில் புரிந்துகொண்டது அந்த ஒடுக்கப்பட்ட மக்களை பயமுறுத்தி தங்களுக்கு கீழாகவைத்துக்கொள்ள என் ஜி ஓக்கள் எச்ஐவி/ எயிட்ஸை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றன என்று. அந்த ஒருவருடமும் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்த ஒரு வார்த்தை எச்ஐவி / எயிட்ஸ்.

எச்ஐவி / எயிட்ஸ் பற்றிப்பேசுவது, அதற்கான பரிசோதனைகள் எடுத்துக்கொள்வது என்பது உண்ணுவது உறங்குவது போன்று அந்தமக்களின் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தது.

அதன்பிறகு புரட்சிக்கான வேறுவழிகளைத்தேடி நகர்ந்தபிறகு மறுபடியும் எச்ஐவி/ எயிட்ஸ் என்கிற வார்த்தைகளை அதிகஅளவில் அருவி படத்திலேயே கேட்க முடிந்தது.

பாலியல்வன்புணர்வு செய்தவர்களையும் மன்னித்து “சாகுறதுக்குள்ள உங்களைப்பாக்கணும்போல இருக்கு” என வீடியோ எடுத்து அனுப்பும் அருவியின் படுபயங்கரமானுடத்தைப்பற்றிச்சொல்ல எந்த கருத்தும் இல்லை. தினமொரு பாலியல்வன்முறையைப்பற்றி கேள்விப்படும் மாற்றுப்பாலீர்ப்பு கொண்ட ஒருநபருக்கு அருவி கற்பிக்கும் மானுடத்தின்மேலான பொறாமையாகக்கூட அது இருக்கலாம்.

ஆனால் அருவி திரைப்படத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாட அருவியின் தேவதைத் தன்மையை உணர அருவியும் மற்றவர்களும் உபயோகித்துத் தூக்கியெறியும் எமிலியைப் பற்றி யாருக்கும் எந்தக்கவலையும் இல்லை.

அருவிக்கு ஒரு அன்பான அப்பா, அம்மா, தம்பி என நல்ல குடும்பம். குடும்பமாக குடிக்கின்ற மலையாளக் கிறுத்தவ தோழி. அருவியும் யாருடனும் உடலுறவு கொள்ளாத ஒரு பவித்திரமான எதிர்பாலீர்ப்பு கொண்ட பெண். எனவே அருவிக்கு எச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட அரிதிலும் மிக அரிதான ஒரு காரணம் தேவைப்படுகிறது. அருவி எந்த அளவிற்கு நல்லவளெனில் அவள் மது அருந்துவதும் கஞ்சா புகைப்பதும் கூட தனக்கு எச் ஐ வி இருப்பது தெரிந்தபிறகுதான்.

ஆனால் எமிலி யாரென்றோ, எமிலிக்கான முன்கதை என்னவென்றோ, எமிலி எப்படி எச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டாள் என்பதைப்பற்றியோ விளக்கத்தேவையில்லை. ஏனெனில் எமிலி ஒரு திருநங்கை. எமிலிக்கு பாலியல்தொழில் செய்ததன் மூலமாகவே எச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டிருக்கமுடியும். மிகவும் எளிதான அனைவராலும் யூகிக்கமுடிகிற ஒரு காரணம்.

அந்த எமிலியும் அருவியும் ஒரு என்ஜிஓவில் சந்திக்கிறார்கள். ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர முடிவெடுத்து ஒரு அறையில் ஒன்றாக இருந்து வேலைக்கு செல்கிறார்கள்.

அருவிக்கு உடலுறவு மூலமாகத்தான் எச் ஐ வி தொற்று ஏற்பட்டிருக்கும் என நினைத்து வீட்டைவிட்டுத் துரத்திய தந்தைக்காக முதலாளியுடன் உடலுறவு கொண்டு ஒருலட்சம் சம்பாதிக்கிறாள் அருவி. அதுதெரிந்தபிறகும் அருவியை எந்தக்கேள்விக்கும் ஆளாக்காமல் ஏற்றுக்கொள்கிறாள் எமிலி.

அந்த எமிலியிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்முற பற்றிக்கூறி உதவி கேட்கிறாள் அருவி. அருவிக்கு உதவுவதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்கிறாள் எமிலி. அங்கு கேலி கிண்டல்களுக்குப்பிறகு எமிலியின் உதவியோடு அருவி நிகழ்ச்சியில் பேசுகிறாள். தன்னை பலாத்காரம் செய்தவர்களை மன்னிக்கிறாள். நிகழ்ச்சி இயக்குனரை துப்பாக்கியால் சுடுகிறாள். சிறுசிறுவிளையாட்டுகள் விளையாடுகிறாள். இறுதியில் எமிலியுடன் போலீசில் சரணடைகிறாள்.

அருவிக்கு நியாயம் கிடைக்க உதவ நினைக்கும் எமிலி சம்மந்தமே இல்லாமல் இந்த தொடர்நிகழ்வில் அடிவாங்குகிறாள். பயந்து ஒடுங்குகிறாள். இறுதியில் தீவிரவாதி எனும் பெயரோடு கைதாகிறாள். தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவர்களைக்கூட மன்னிக்கும் அருவி எனும் தேவதை எமிலியைப்பற்றி எந்தக்கவலையும் படவில்லை.

சிறையில் வைக்க முடியாமல் முகாமில் வைக்கப்படும் அருவி உடல்நிலை மோசமடைகிறது. எமிலி அருவியின் பழைய துரோகங்கள் எதையும் நினைக்காமல் அருவிக்கு உதவுகிறாள். திடீரென ஒருநாள் அந்த அறை மூச்சுமுட்டுகிறதென்ற காரணத்தோடு அருவி முகாமிலிருந்து தப்பித்துச்செல்கிறாள். அப்போதும் அவள் தன்னால் குற்றவாளியாக்கப்பட்டு தன்னுடன் முகாமிலிருந்த எமிலியின் நிலமையைப்பற்றி யோசிக்கவில்லை.

கடைசியாக அருவியுடன் தொடர்புடைய அனைவரும் (அருவியை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் உட்பட) அருவியை சந்திக்கச்செல்கின்றனர். அப்போது தன்னை தனது பிறந்தநாளன்று “நீ தப்பு பண்ணலன்னா நான் சந்தேகப்பட்டப்பவே தூக்குமாட்டிட்டு தொங்கி இருப்ப. இனி இந்த வீட்ல இருக்காத. போய்டு” எனச்சொன்ன அப்பாவை நோக்கி அழுதபடியே அருவி நகர்கிறாள். அருவியால் வஞ்சிக்கப்பட்ட எமிலி அப்போதும் ஓரமாகவே நிற்கிறாள். 

 — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — –

எமிலி அந்தத்தொலைக்காட்சி நிகழ்ச்சி உதவி இயக்குனரை சந்திக்கும் போது “இத எப்டிண்ணா மூணுபேரு பண்ணினாங்க?” என ஒரு சின்னப்பையன் கேட்பான். திரையரங்குகளில் அனைவரும் சிரிக்கும்போது இவங்க எல்லாம் திருந்தவே மாட்டங்களோ எனத்தோன்றியது. ஆனால் திரும்பத்திரும்ப அந்த வசனம் படத்தில் வரும்போது தான் நிஜமாகவே அந்தக்காட்சியை நகைச்சுவைக்கு பயன்படுத்தி இருப்பது புரிந்தது.

ஒரு திருநங்கையைப் படம் முழுவதும் நடிக்கவைப்பதன் மூலமாகவோ அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்குவதன்மூலமாகவோ புரட்சிப்படங்கள் எடுத்துவிடமுடியாது. “அத எப்டிண்ணா மூணுபேர பண்ணினாங்க?” என்கிறக்கேள்வியை எடுத்துக்கொண்ட திருநங்கைகளிடமோ, பெண்தன்மை மிகுந்த ஆண்களிடமோ ஒரு நேர்மையான உரையாடலை நிகழ்த்தும்போது மட்டுமே புரியும் அவர்களை எப்படி எப்படி பண்ணினார்கள் என. அதன்பிறகு இப்படிப்பட்ட நகைச்சுவைக்காட்சிகளை எடுக்கத்தோன்றியிருக்காது.

இந்த மொத்தப்படத்திலும் எச் ஐ வி/ எயிட்ஸ் காட்டப்பட்டிருக்கும் விதமும் அதிர்ச்சியாக இருக்கிறது. காலம் காலமாக எச் ஐ வி / எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதென்பது நடந்துவரும் நிலையில் இந்தத்திரைப்படமும் எச் ஐ வி எய்ட்ஸை பயங்கரமான கொடூரமான நோயாகவே காட்டுகிறது.

ஆனால் ஓர்பாலீர்ப்புகொண்ட ஆண்களுக்கும் ஈர்பாலீர்ப்புகொண்ட ஆண்களுக்குமே எச் ஐ வி / எயிட்ஸ் அதிகம் பரவுகிறது என்கிற என் ஜி ஓ மற்றும் அரசாங்கத்தின் எயிட்ஸ் தடுப்பு நிறுவனங்களின் கட்டுக்கதைகள் செய்தித்தாளில் வந்ததை எமிலி வரும் காட்சியில் சுவரில் ஒட்டுமளவிற்கு ஆய்வு செய்ய முடிந்த படக்குழு எச்ஐவிக்கும் எயிட்ஸுக்குமான வித்தியாசம் பற்றியோ அல்லது எச் ஐவி பரவும் விதம் பற்றியோ எந்த ஒரு சிறிய அளவிலான ஆய்வும் செய்யவில்லை. ஊர்களில் எச் ஐவி/எயிட்ஸ் பற்றி பேசப்படும் கிசுகிசுக்களே திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் வரும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படம் மாற்றுப்பாலீர்ப்பு கொண்ட — மாற்றுப் பாலின மக்களை கதாபாத்திரமாகக் காட்ட முயலும்போது உங்களையும் ஒரு கதாபாத்திரமாக காண்பிக்கிறோம். நாங்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் தெரியுமா? என்கிற தொனியிலேயே எடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவற்றிற்கான எதிர்வினைகள் தேவைப்படுவதில்லை.

மானுடத்தின் மகத்துவம் பேசி அனைவரையும் கதறிக்கதறி அழவைக்கும் அருவி மாதிரியான திரைப்படங்களைக் கொண்டாடி அறிவுஜீவிகள் அதை ஒரு ஆகச்சிறந்த படமாக மாற்றிவிடுவதால் அருவியின் ஆபத்தான அரசியலுக்கான எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

இக்கட்டுரை ஆசிரியரால் டிசம்பர் 2017ல் வலைபதிவேற்றப்பட்டது.

~*~*~