நந்தியார்வட்டம்

~ கிரீஷ்

நந்தியார்வட்டம் படக்கதையை படிக்க…

ரயில்வே தண்டவாளத்தின் இந்தப்பக்கம் வீடுகள் நிறைந்தும் அந்தப் பக்கம் குறைவான வீடுகளுமாக இருந்தன. டேனியலின் வீடு ரயில்வே தண்டவாளத்தின் அந்தப் பக்கம் இருந்தது. புதியதாக வீடுகள் கட்டத் தொடங்கி இருந்த அந்த இடத்தில் டேனியலின் வீட்டோடு சேர்த்து பத்து பன்னிரெண்டு வீடுகளும் ஒரு குருசடியும் இருந்தன. டேனியலின் வீட்டுக்கு பின்னால் பெரிய செங்குளமும் அதன் பின்னால் ஒரு மலையும் இருந்தது.

டேனியல் திடீரென்று ஒருநாள் அவன் படித்துக் கொண்டிருந்த டியூசனில் வந்து சேர்ந்தான். அவனது டியூசன் ஒன்றும் அவ்வளவு பெரியதாக இருக்காது. பழங்கால கேரள பாணி வீடொன்றின் திண்ணையிலும் வீட்டினுள்ளும் அண்ணன் தங்கை இருவர் டியூஷன் எடுத்துக் கொண்டு இருந்தனர். தங்கையின் டியூஷன் வீட்டினுள் பெண்களுக்கும் அண்ணனின் டியூஷன் ஆண்களுக்கு திண்ணையிலும் நடக்கும். ஆண்களுக்கு வீட்டினுள் செல்ல அனுமதி இருக்கவில்லை. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவனுக்கு படிப்பில் அவ்வளவு விருப்பம் எல்லாம் இல்லை. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் பார்த்துக் கொள்ளலாம் எனும் முடிவில் இருந்தான். எப்படியாவது பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் அளவிற்கு படித்தால் போதும் என நினைத்திருந்தான்.

ஒருநாள் டியூசனில் வழக்கம்போல் அவனுக்கு தூக்கமாக வந்தது. அவன் திண்ணையில் விழுந்து கிடந்த நந்தியார் வட்டப் பூக்களை சேகரித்து புத்தகத்தில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது டேனியல் அவன் அப்பாவோடு உள்ளே வந்தான். தெப்பக்குளத்தருகே இருக்கும் நந்தவனத்தில் ஒரு கண்டன் சாஸ்தா கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் எண்ணை தேய்த்து தேய்த்து பளபளப்பாக ஒரு கருங்கல் சிலை இருக்கும். அந்த நிறத்தில் டேனியல் இருந்தான். அவன் வாழ்க்கையில் இதுவரை அத்தனை பளபளப்பான கருப்பைப் பார்த்ததே இல்லை. டேனியல் நீளமான ஒரு பெர்முடாஸ் அணிந்திருந்தான். ஆனால் அவன் உயரத்திற்கு அது முட்டி வரை மட்டுமே இருந்தது. தலைமுடி நல்ல சுருளாக இருந்தது. அதே போல கால்களிலும் நல்ல சுருள் சுருளாக முடி இருந்தது. அவன் தனது கால்களைத் தன்னை அறியாமல் தடவிப் பார்த்துக் கொண்டான். முடி எதுவும் இல்லாமல் வழவழப்பாக மெலிந்திருந்த கால்கள் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. டேனியலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

டேனியலின் அப்பா டியூசன் சாரிடம் பேசிவிட்டு சென்று விட்டார். அவன் அமர்ந்திருந்த பெஞ்சில் அவன் அருகே டேனியல் வந்து அமர்ந்திருந்தான். டேனியலிடம் பாட சம்மந்தமாக பேசலாம் என அவனுக்கு தோன்றியது. ஆனால் மெட்ரிகுலேஷனில் படிக்கும் டேனியலுக்கும் தமிழ் மீடியத்தில் படிக்கும் அவனுக்கும் படிப்பில் எதுவும் பேச இருக்கும் எனத் தோன்றவில்லை. டேனியல் மற்ற எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.

டேனியல் வந்த பிறகு அவனுக்கு டியூசன் செல்வது என்பதே பதட்டமாக இருந்தது. ஏதோ ஒரு துணியை மாட்டிக்கொண்டு டியூசன் சென்று கொண்டிருந்த அவன் டேனியல் வந்த பிறகு நல்ல நல்ல உடைகளை அடம் பிடித்து அணியத் தொடங்கினான். திருமணம், பண்டிகை போன்ற விசேஷங்களுக்கு அணிய வேண்டிய ஆடைகளை டியூசனுக்கு அணிவது பற்றி அம்மா திட்டிக் கொண்டே இருந்தார். அது பற்றி அவன் கண்டு கொள்ளவே இல்லை.

டியூசன் சாரின் தங்கை ஒரு நாள் டேனியலைக் கூப்பிட்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது முப்பதைத் தாண்டியும் திருமணம் ஆகி இருக்கவில்லை. டியூசன் சாரின் வீடு கட்டும் போது அவரின் தாத்தா ஒரு பாம்புப்புற்றை இடித்து விட்டதாகவும், அதன் பிறகு அந்த குடும்பத்தில் யாருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்ததில்லை என ஊருக்குள் ஒரு கதை இருந்தது. டியூசன் சாருக்கும் கல்யாணம் ஆகி இருக்கவில்லை.

டியூசன் சாரின் தங்கை பேசிய அடுத்த நாள் முதல் டேனியல் டியூசன் வரும் போது மூன்று ஆம்பல் பூக்களைக் கொண்டுவரத் தொடங்கினான். டியூசன் வீட்டு வாசலில் வைக்கும் விளக்குக்கு பக்கத்தில் புதியதாக ஒரு உருளி முளைத்தது. அதில் நீர் நிரப்பி டேனியல் கொண்டுவரும் ஆம்பல் பூக்களை மிதக்க விட்டனர். டேனியல் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டேனியலிடம் பேச விரும்பி டியூசன் முடிந்து கிளம்பிய ஒரு நாள் பேசினான்.

“தெனசரி பூ எங்க இருந்து கொண்டுவர்ற?”

“எங்க வீட்டுப் பின்னாடி செங்குளம் இருக்குல்ல. அங்க இருந்து பறிச்சுட்டு வர்றேன்”

“நீயே போய் பறிப்பியா?”

“ஆமா”

“எனக்கும் ஒருநாள் ஒண்ணு பறிச்சுட்டு வருவியா?”

தனது சைக்கிளின் பூட்டைத் திறந்து கொண்டே அவனைப் பார்த்து டேனியல் சிரித்தான். சிரிக்கும் போது டேனியலின் கண்கள் பெரியதாக இருந்தது.

“மாட்டேன்” என சிரித்தபடி டேனியல் பதில் சொன்னான். அதன்பிறகு என்ன பேச என்று தெரியவில்லை. திரும்பி நடக்கத் தொடங்கினான்.

“சைக்கிள்ல வர்றியா? வீட்டுல விட்டுடறேன்” டேனியலின் குரல் பின்னால் கேட்டது.

“என் வீடு அடிபம்பு பாலத்துக்கிட்ட தான் இருக்கு. நடந்து போயிடுவேன்” மெதுவாகச் சொன்னான்.

டேனியல் அவனைத் தாண்டி சைக்கிளில் போனான். போகும்போது “ஒரு மாசம் கழிச்சு இப்பயாது பேச தோணிச்சே” என காதருகில் சொல்லிவிட்டு போனான். அவன் பதிலேதும் சொல்லவில்லை.

அடுத்தடுத்த நாட்களும் அவன் டேனியலுடன் எதுவும் பேசவில்லை. டியூசனுக்கு வரும் ஆம்பல் பூக்களை மட்டும் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து கிறுஸ்துமஸ் விடுமுறைவிடப் பட்டிருந்தது. அவனுக்கு டேனியலைப் பார்க்க முடியாதது வெப்ராளமாக இருந்தது. ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறக்கும் போது தான் பார்க்க முடியும். எதுவும் செய்யாமல் வெட்டியாக இருந்தான். அவன் வளர்த்து வந்த கப்பீசுக்கு ரவை கூட போடுவதில்லை. ஒருநாள் காலையில் பால்பண்ணையிலிருந்து பால் வாங்கிவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தான். அடிபம்பு பாலத்தருகே டேனியல் சைக்கிளில் நின்று கொண்டிருந்ததை அவனால் நம்ப முடியவில்லை. அருகில் சென்றதும் டேனியல் சிரித்தான். டேனியலுக்கு மட்டும் வாய் சிரிக்கும் போது கண்களும் எப்படித்தான் சிரிக்கிறதோ தெரியவில்லை.

“என்ன இங்க நின்னுகிட்டு இருக்க?”

“டியூசன்ல பூ குடுக்க வந்தேன். குடுத்துட்டு போகும் போது நீ வர்றத பாத்தேன். அதான் நின்னேன்” சிரித்துக் கொண்டே இருந்தான்.

டேனியலைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

“செரி நான் கிளம்புறேன். அப்பா கடைக்கு சீக்கிரம் கொண்டு பால் குடுக்கணும்”

“அதுக்குப் பிறகு என்ன பண்ணுவ?”

“இன்னிக்கு பெருசா வேலை ஏதும் இல்ல”

“செரி. நான் குடில் வைக்க சுக்குநாறி புல்லு பறிக்கணும். மலைக்கு போறேன். கூட வாரியா?”

அவனுக்கு வெகுநாட்களாக அந்த மலைக்கு செல்ல வேண்டும் போல் இருந்தது. ஊரிலிருக்கும் உருப்படாத இளைஞர்கள் குடிக்கவும் சிகிரெட் பிடிக்கவும் செல்லும் அந்த மலைக்கு அவன் போவது வீட்டுக்கு தெரிந்தால் கொலையே நடக்கும். ஆனால் டேனியல் கேட்கும்போது மறுக்க முடியவில்லை.

“செரி. நான் பாலக் குடுத்துட்டு வர்றேன்”

விளையாடப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்து டேனியலின் சைக்கிளின் முன்னால் ஏறினான். டேனியலின் உயரத்திற்கு அந்த சைக்கிளும் சிறியதாக இருந்தது. வளைவுகளில் திரும்பும்போது டேனியலின் கைகளுக்குள் அடங்கிவிட்டது போல் தோன்றியது.

டேனியலின் வீட்டில் சென்று சைக்கிளை நிறுத்திவிட்டு கத்தியும், சாக்கும், ஒரு தூக்கு வாளியில் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டு இருவரும் நடக்கத் தொடங்கினர். டேனியல் எதை எதையோ கேட்டுக் கொண்டும் இவனை கிண்டல் செய்து கொண்டும் வந்து கொண்டிருந்தான். இவன் பெரிதாக எதுவும் பதில் எல்லாம் சொல்லவில்லை. அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஏனோ பயமாக இருந்தது. அந்த மலை தூரத்தில் இருந்து பார்த்த அளவிற்கு பக்கத்தில் இல்லை. பாறைகள் மட்டுமே இருந்தன. காலை பத்து மணிக்குமே சூடாக இருந்தது. பாதி தூரம் ஏறிய பிறகு ஒரு இடத்தில் சுக்குநாறிப் புற்கள் நிறைய வளர்ந்திருந்தது. அந்த இடமே வாசனையாக இருந்தது. டேனியல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாக்குக்குள் போடத் தொடங்கினான். அவன் சாக்கைப் பிடித்துக் கொண்டே டேனியலின் பின்னால் நடந்தான். ஒரு சாக்கு புல்லை வெட்டி முடிக்க மத்தியானம் ஆகி வீட்டு இருந்தது. நல்ல சோர்வாக இருந்தது. சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு அவர்கள் திரும்பி நடந்தனர்.

வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் வைத்து விட்டு டேனியல் கேட்டான்.

“நீச்சல் தெரியுமா உனக்கு?”

“தெரியாதே. ஏன்?”

“தெரியும்னா குளத்துல குளிக்கலாம்னு தான்”

“இல்ல. நீ வேணும்னா குளி”

“செரி. ஆனா நீயும் வர்றியா?”

இருவரும் குளத்துக்கு சென்றபோது குளம் காலியாக இருந்தது. செங்குளம் பகுதிக்கு துணி வெளுக்க வருபவர்களும் மதியத்துக்கு முன்பு கிளம்பி விடுவர். வாதை உலவும் சமயம் என யாரும் மதியம் வருவதில்லை. டேனியலுக்கு எது பற்றியும் பயம் இருக்கவில்லை. கழுத்தில் இருந்த குருசு எல்லா வாதைகளில் இருந்தும் காப்பாற்றும் என டேனியல் நம்பினான். டேனியல் இருந்ததால் அவனும் பயப்படவில்லை.

டேனியல் சட்டையைக் கழற்றி விட்டு பெர்முடாசுடன் தண்ணீரில் குதித்து நீந்தத் தொடங்கினான். பதினைந்து வயதில் டேனியலுக்கு எப்படி உடம்பு முழுக்க இவ்வளவு முடி எனத் தெரியவில்லை. அவனுக்கு இன்னமும் மீசை கூட சரியாக முளைக்கவில்லை.

டேனியல் குளிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் உனக்கு நீச்சல் சொல்லித் தரவா?”

“அதெல்லாம் வேண்டாம். எனக்கு பயம்”

“நான் முங்கு நீச்சல் அடிப்பேன் தெரியுமா?”

“அதெல்லாம் பண்ணாத. எனக்கு பயமா இருக்கு. குளிச்சுட்டு வா. நான் கிளம்பணும்”

“நீ எல்லாத்துக்கும் எதுக்கு தான் பயப்படுறியோ தெரியல” என்றவாறு குளித்து விட்டு வந்தான். டவலை வைத்து தலைதுடைத்துக் கொண்டே நடந்தான். வழியில் ஏதேதோ பேசிக் கொண்டே நடந்தனர். திடீரென எதையோ யோசித்தவனாக டேனியல் நின்றான்.

“ஒரு நிமிஷம் இருக்கியா? நான் என் பனியன குளத்துக்கிட்டயே வச்சுட்டேன். போய் எடுத்துட்டு வர்றேன்” பதிலுக்குக் கூட காத்திருக்காமல் டேனியல் ஓடினான்.

அந்த சமயத்தில் கரி அள்ளிக் கொண்டு கூட்ஸ் வண்டி ஒன்று அவனைக் கடந்து போனது. அவன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டியின் சத்தம் குறைந்ததும் பின்னாலிருந்து “கண்ண மூடு. ஒண்ட ஒண்ணு காட்டணும்” என்ற சத்தம் கேட்டது..

அவன் கண்களை மூடி நின்றான்.

“இப்போ தொற?”

கண்களைத் திறந்தவன் முன்பு கைகள் நிறைய ஊதாவும், நீலமும் கலந்த ஆம்பல் பூக்களை நீட்டியபடி டேனியல் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் வழக்கம் போல் சிரித்துக் கொண்டிருந்தன. ஆம்பல் பூக்களில் இருந்து நந்தியார்வட்டப் பூக்களின் வாசனை வந்து கொண்டிருந்தது.

~*~*~