சூப்பர் டீலக்ஸ்: நானும் சாட்சி

 

ஒரிஜினல் இமேஜ்: Freepik

உலக சினிமா எல்லாம் தெரியாது. படங்கள் பார்க்கப் பிடிக்கும். ஆனால் தேடித்தேடி பார்க்கும் அளவுக்கு எல்லாம் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தேர்ந்தெடுத்தே படங்கள் பார்க்கிறேன். அந்தப் படங்களில் பால்புதுமையினர் கதாபாத்திரங்கள் இருப்பதாகச் சொன்னால், அதை மற்றவர்கள் பாராட்டினால் முடிந்தவரைப் பார்க்க முயற்சி செய்கிறேன். ஆனாலும் அவ்வப்போது அருவி மாதிரியான படுகுழிகளில் விழுவதுமுண்டு. தொடர்ந்து வந்த பாசிட்டிவான விமர்சனங்களுக்கு பிறகு “சூப்பர் டீலக்ஸ்” படம் பார்க்க முடிவு செய்தேன். நல்ல திரைப்படம்.

பால்புதுமையினர் கதாபாத்திரம் இருப்பதாகச் சொல்லப்படும் படங்களைப் பார்ப்பதற்கு எப்போதும் ஒரு அச்சம் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் மோசமாகக் காட்சிப் படுத்தப் பட்டிருக்கக் கூடாது.. அந்தக் கதாபாத்திரம் வரும்போது பின்னணி இசையோ அல்லது வசனங்களோ அந்தப் பாத்திரத்தை கொச்சைப் படுத்தக் கூடாது. பார்வையாளர்கள் சிரிக்கும்படியோ கிண்டல் செய்யும்படியோ எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பாக அந்த கதாபாத்திரம் பரிதாபத்துக்காக பயன்படுத்தப் பட்டிருக்கக் கூடாது. அந்தக் கதாபாத்திரத்தின் மேல் உடல் சார்ந்த வன்முறைகள் ஏதும் நடக்கக் கூடாது. இவை எல்லாம் இருந்தாலும் கலங்கக் கூடாது என்கிற முன்தயாரிப்புகளோடே அப்படத்திற்கு செல்ல முடிகிறது. ஆனால் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே மேற்சொன்ன எல்லாமே நடப்பதால் திருநங்கை ஷில்பாவுக்கு நடக்கும் துர்சம்பவங்கள் எதுவும் தனியாகத் துருத்திக் கொண்டு தெரியவில்லை.

ஷில்பா:

ஷில்பா கதாபாத்திரம் பற்றி பல உரையாடல்கள் நடந்தவண்ணம் இருந்தது. அப்பாத்திரத்தை விஜய் சேதுபதி செய்வதாகத் தெரிந்ததும் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இயக்குநரின் நோக்கமும் அதுவாகவே இருக்கலாம். ஆனால் எனக்கு ஆரம்பம் முதலே பதட்டமாக இருந்தது. முன் அனுபவங்கள் அப்படி. ஆனால் விஜய் சேதுபதி வழக்கம்போல் மிகச் சிறப்பாகவே தனது வேலையைச் செய்திருக்கிறார்.

சில கேள்விகள்:

1. எனக்கு சில திருநங்கைகளைத் தெரியும். அவர்களைப் பார்த்த விதத்தில் விஜய் சேதுபதி சிறப்பாக நடிக்கவில்லை தானே?

உங்களுக்கு தெரிந்த திருநங்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு பாலினம் சார்ந்த ஆராய்ச்சிகளை நீங்கள் நடத்தமுடியாது. ஒருவரிடம் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிலான ஏதோ ஒன்று இருந்தால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்வேன் என்பது உங்களது போபியா. ஒருவர் எப்படி இருத்தாலும் அவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறாரோ அவரை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நியதி. விஜய் சேதுபதி இன்னமும் சிறப்பாக நடித்திருக்கலாம் எனும் போதே நீங்கள் திருநங்கைகள் பற்றிய முன்முடிவுகளோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

2. ஒருவர் கல்யாணம் செய்து குழந்தை பெற்று பிறகு திருநங்கை ஆக முடியுமா?

ஷில்பா தனது பாலினத்தை திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டு பிறகு உணர்ந்திருக்கலாம். அல்லது ஷில்பா தனது பாலினத்தை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் சமுதாயம், குடும்பம் போன்ற சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்து பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். அதை தாங்க முடியாமல் சென்றிருக்கலாம். மேலும் விரிவாக இது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அமேசான் பிரைமில் “டிரான்ஸ்பேரண்ட்” பார்க்கலாம்.

3. இந்தப்படத்தில் பிரச்சினைகளே இல்லையா?

இருக்கிறது.

அப்படத்தில் வரும் அனைவரும் சமுதாயத்தால் தவறென்று பார்க்கப்படும் ஏதோ ஒன்றை செய்திருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் அதைப்பற்றிய சரி தவறு என்கிற உரையாடல் இல்லை. அவர்கள் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதுவே இயல்பு. ஆனால் ஷில்பா மட்டும் தான் எப்போதோ செய்ததை எண்ணி புலம்பும் போது “நான் பாத்ததுலயே நீ தான் பெரிய பாவி” என சொல்லும் இடம் மட்டும் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. லீலாவுக்கோ வேம்புவுக்கோ நன்னடத்தை சான்றிதழ்கள் தேவைப்படாதது போலவே ஷில்பாவுக்கும் தேவை இல்லை என்றே தோன்றியது.

அடுத்து ஷில்பா கதாபாத்திரத்தைப் பற்றிய உரையாடல்களில் எல்லாம் ஷில்பா அறுவைசிகிச்சை செய்ததைப் பற்றி பேசுகிறார்கள். இது எல்லா படங்களிலும் நடக்கிறது. அறுவை சிகிச்சை தான் ஒருவரை திருநர் ஆக்கும் என்பதெல்லாம் இல்லை. உடலையும் தாண்டி தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்பதே. எனவே அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டுமல்ல தன்னை மனதால் பெண்ணாக உணரும் ஒவ்வொருவரும் பெண்ணே. தன்னை ஆணாக உணரும் ஒவ்வொருவரும் ஆணே.

ராசுக்குட்டியிடம் இப்டியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு இருந்தா நான் எதும் பண்ணி இருக்க மாட்டேனே எனும் இடம் மகன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகத் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டுமே தவிர அது எதுவும் ஷில்பாவின் கட்டுப்பாட்டில் இல்லை.

அடுத்து நடக்க வேண்டிய உரையாடல்கள்:

“சூப்பர் டீலக்ஸ்” ஒரு நல்ல திரைப்படம் என்பதை தாண்டியும் அடுத்தடுத்த உரையாடல்கள் நடக்க வேண்டும்.

விஜய் சேதுபதி ஒரு அருமையான நடிகர். இந்தத் திரைப்படம் ஒரு அருமையானத் திரைப்படம். அதே சமயம் ஷில்பா கதாபாத்திரம் விஜய் சேதுபதி செய்திருக்க வேண்டுமா என்றால் அதைத் தவிர்த்திருக்கலாம். அந்தக் கதாபாத்திரம் ஒரு திருநங்கைக்கு வழங்கப் பட்டிருக்கலாம். திரும்பத் திரும்ப ஆண்கள் ஏன் திருநங்கை கதாபாத்திரத்துக்கு தேவைப் பட வேண்டும்?

அது நடிப்பு தானே, ஒரு கலைஞராக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பவர்களுக்கு, அப்படியானால் இதுவரை ஏன் ஒரு திருநங்கை கதாநாயகியாக நடிக்கவில்லை? உதாரணமாக வேம்புவாகவோ, ஜோதியாகவோ அல்லது லீலாவாகவோ ஏன் ஒரு திருநங்கை நடிக்க முடியவில்லை? முகிலாக, இடி அமீனாக, காஜியாக ஏன் ஒரு திருநம்பி நடிக்க முடியவில்லை என்ற உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும்போது அந்த நடிப்பை மதிப்பீடு செய்யும் நாம், திருநங்கை என முடிவு செய்து வைத்திருக்கும் பிம்பத்துடன் “விஜய் சேதுபதி நடித்த ஷில்பா” எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறாள் என்பதை வைத்தே மதிப்பிடுகிறோம். இதுவே ஒரு திருநங்கை நடிக்கும் போது அந்தப் பிரச்சினை இருக்காது.

மேலும் ஆண் நடிகர்கள் திருநங்கையாக நடித்துவிட்டு அடுத்தடுத்து ஆண்களாக நடிக்கும்போது அது கலைத்துவிட முடிகிற வேடமே எனும் எண்ணமும் ஏற்பட வாய்ப்புளது.

அடுத்து ஷில்பா தொடர்ந்து ஜோதியுடனும், ராசுக்குட்டியுடனும் வாழு முடிவு செய்திருக்கும் வாழ்க்கையைப் பற்றியும் பேசவேண்டும். ராசுக்குட்டியும் ஜோதியும் ஷில்பாவை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியே. ஆனால் அதற்காக ஷில்பா அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கும்.

எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர் தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டபோது அவரைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அவர் தனது மனைவியிடம் தனது பாலினத்தைப் பற்றி பேசியபோது அவரது மனைவி தனது பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனக் கூறினார். ஆனால் அவரது வீட்டில் அவர் எங்கும் செல்லாமல் ஆணாக இருந்தால் மட்டுமே சொத்தை தரமுடியும் என்று கூறிவிட்டனர். மனைவி மற்றும் மகன் ஒருபுறமும், பெற்றோர் மறுபுறமும் மிரட்டிக்கொண்டிருக்க வீடு மற்றும் உறவினர்களிடம் ஆண்போல நடித்துக் கொண்டு மிக ரகசியமாக எப்போதாவது புடவை அணிந்து கொண்டு, பூ வைத்து நகை போட்டு தனது சக திருநங்கை தோழிகளுடன் சேர்ந்து எஸ் ஜானகி பாடல்களை அற்புதமாகப் பாடும் அவரை ஆறு வருடங்களுக்கு முன்னால் நான் சந்திக்கும் போது அவருக்கு வயது ஐம்பத்து இரண்டு. இதே போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்த நாட்களில் ஷில்பாவுக்கு நடக்காமல் இருக்குமா என்பதான உரையாடல்கள் அங்கு நடைபெற வேண்டும்.

மற்றபடிக்கு இது ஒரு சிறந்த படமே. எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். பகத் பாசிலின் ஒரு ஆராதகனாக அவனது போட்டோவையே என்னால் மணிக்கணக்காக பார்க்க முடியும். அவ்வளவு பெரிய ஸ்கிரீனிலா பார்க்க முடியாது?

எல்லாரும் நடிப்பில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தபோது ரம்யா கிருஷ்ணனுக்கு ஸ்கோப்பே இல்லியா? என யோசித்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனை காட்சியில் எல்லாரையும் வாரி சுருட்டி வாயில் போட்டு விட்டு அசால்டாகப் போனார்.

~*~*~

3 thoughts on “சூப்பர் டீலக்ஸ்: நானும் சாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *