ஜூன் 6, 2021-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் துணைத்தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராம. சீனிவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹமது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு. தீனபந்து, மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மல்லிகா சீனிவாசன், டாக்டர். ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், முனைவர். நர்த்தகி நடராஜ் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மாநில மேம்பாட்டுக்கானத் திட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக 1971-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு.
இக்குழுவின் துணைத்தலைவராகத் தற்போது பொறுப்பேற்றிருக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன் மாநிலத்தின் பொருளாதாரத்தைக் குறித்த ஆய்வுப் பணிகளில் 35 வருட அனுபவம் உடையவர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் தேர்வு மக்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக பகுதிநேர உறுப்பினராக முனைவர் நர்த்தகி நடராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பால்புதுமையினர் மக்களிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.
பரதநாட்டியக் கலைஞரான முனைவர். நர்த்தகி நடராஜ் இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருதினைப் பெற்ற முதல் திருநங்கை ஆவார். அதோடு மட்டுமல்லாமல் நிருத்யசூடாமணி விருது, சங்கீத நாடக அகாடெமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றுளார். பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.
பதினோரு வயதில் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட நர்த்தகி நடராஜ் சிறு சிறு வேலைகள் செய்து பள்ளிப்படிப்பை முடித்தார். நடனத்தில் ஈடுபாடு கொண்ட அவர் ஒருவருடகால முயற்சிக்குப்பிறகு கிட்டப்ப பிள்ளையிடம் தனது தோழி சக்தியுடன் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் பாணி நடனத்தில் பிரபலமான கிட்டப்ப பிள்ளையிடம் பதினைந்து வருடங்கள் நடனம் கற்றுத் தேர்ந்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் சிலகாலம் துணைப் பேராசிரியராக நர்த்தகி பணிபுரிந்திருக்கிறார்.
உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் நர்த்தகி நடராஜ் சங்க இலக்கியப் பாடல்களோடு பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதியார் பாடல்களுக்கும் நாட்டியம் ஆடுவதில் புகழ்பெற்றவர்.
வெள்ளியம்பலம் அறக்கட்டளை மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கும் முனைவர் நர்த்தகி நடராஜ் மாநில வளர்ச்சிக்குழுவின் பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மாநில வளர்ச்சிக்குழுவின் உறுப்பினராக முனைவர் நர்த்தகி நடராஜை நியமித்ததன் மூலம் மாநில வளர்ச்சி என்பது பால்புதுமையினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியது என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்படுவதாகவும் பால்புதுமையினரின் கோரிக்கைகளை இன்னும் எளிதாக அரசின் முன் வைக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.