LGBTQIA+ நபர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்

ஜூன் 7,  திங்கட்கிழமை, பால்புதுமையினரின் (LGBTQIA+) உரிமைகள் குறித்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டார். அதில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டப் பால்புதுமையினர் வீட்டைவிட்டு வெளியேறும்போது, அவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தால் நடத்தப்படும் விசாரணையில் பால்புதுமையினரைத்  துன்புறுத்தக்கூடாது, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை காவல்துறையால் அளிக்கப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்களை நீதிபதி வழங்கினார். இந்த உத்தரவை அளிப்பதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் பால்புதுமையினர் சமூக மக்களிடமும் உளவியல் நிபுணர்களிடமும் உரையாடி பால்புதுமையினர் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையும் நீதிபதி மேற்கொண்டார்.

ஜூன் 7-ம் தேதி வழங்கப்பட்ட இந்த உத்தரவில்,  பால்புதுமையினர் மற்றும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் அவற்றின் தொடர்பு எண்கள் அடங்கியப் பட்டியலை வெளியிடுமாறு ஒன்றிய அரசின் சமூகநலத்துறை அமைச்சகத்தை நீதிபதி அறிவுறுத்தினார். பால்புதுமையினரை ‘குணப்படுத்துவதாகவும்’ அவர்களின் பாலீர்ப்பை மாற்றுவதற்காகவும் செய்யப்படுகிற எல்லா சிகிச்சைகளையும் (Conversion therapy) தடைசெய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த ஒருபாலீர்ப்பு கொண்ட இரு பெண்களின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. பெண்களின் பாலீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் இரண்டு பெண்களும் காணாமல் போய்விட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். அவர்களைக் கண்டுபிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தக் காரணத்துக்காக பால்புதுமையினர் செயற்பாட்டாளர் ஒருவரும், பால்புதுமையினர் சமூகத்தைச் சார்ந்த மற்றொருவரும் காவல்துறையின் துன்புறுத்தலுக்கு ஆளாயினர். இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் காவல்துறையின் துன்புறுத்தலை நிறுத்தக் கோரியும், தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு பெற்றுத்தரக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கில் விசாரணையில், பால்புதுமையினர் சந்திக்கும் பிரச்சினைகளைக் கையாளும் அனுபவமுடைய அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலை ஒன்றிய அரசின் சமூகநலத்துறை அமைச்சகம் வெளியிடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. “அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலில் அவர்களது தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அவர்கள் வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தப் பட்டியல் சமூகநலத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். தேவைப்படும்போது இந்தத் தகவல்கள் திருத்தப்படவும் வேண்டும். இந்த ஆணை வழங்கப்பட்ட எட்டு வாரத்துக்குள் மேற்கூறியத் தகவல்களை வெளியிட வேண்டும். பிரச்சினைகளை சந்திக்கும் பால்புதுமையினர் இந்த அரசு சாரா நிறுவனங்களை அணுகி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறது. தங்களிடம் பாதுகாப்பு கேட்டு வரும் நபர்கள் குறித்தத் தகவலை அரசு சாரா நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கவேண்டும். வருடத்துக்கு இரண்டுமுறை சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் குறைந்தகால வசிப்பிடங்கள், அங்கன்வாடித் தங்குமிடங்கள் மற்றும் திருநர்களுக்கானத் தங்குமிடங்களைப் பால்புதுமையினர் சமூகத்தில் தேவைப்படும் அனைவரும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு மாற்றங்களை 12 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

காவல்துறையினர், சிறைத்துறை அதிகாரிகள், மாநில மாவட்ட சட்ட சேவை ஆணையர்கள், நீதித்துறை அதிகாரிகள், உடல்நல மற்றும் மனநல மருத்துவர்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களோடு பெற்றோர்களுக்கும் பால்புதுமையினர் பற்றியப் புரிதலை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

பால்புதுமையினரைப் பற்றிய முன்முடிவுகளைக் களைவதற்கும், அவர்களை மையநீரோட்டத்துக்குக் கொண்டுவருவதற்குமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ‘குணப்படுத்துவதாகக்’ கூறிக்கொண்டு ஒருபாலீர்ப்பு கொண்டவர்களை எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களாக மாற்றவும், திருநர்களை ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்துடன் ஒத்துவாழச் செய்யவும் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளையும் தடைசெய்யவேண்டும். அத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளும் நபர்கள் அல்லது நிபுணர்களைப் பற்றியத் தகவல்கள் கிடைத்தால் அவர்கள் பயிற்சி செய்வதைத் தடைசெய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பாகுபாட்டை அறியாமை மூலம் நியாயப்படுத்த முடியாது

ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே ஒருபாலீர்ப்பு உறவுகளைப் பற்றி புரிந்து கொள்வதற்காக மனநல ஆலோசகரின் உதவியை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கோரியிருந்தார்.

“பால்புதுமையினரைப் பற்றி முழுதும் புரிந்துகொள்ளாத பெரும்பான்மையான ஆட்களில் நானும் ஒருவன் என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அறியாமையைச் சொல்லி எந்த பாகுபாட்டையும் நியாயப்படுத்த முடியாது. எனவே தான் எல்லா விதத்திலும் நியாயத்தை வழங்குவதற்கானப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். என்னுடைய முன்முடிவுகள், கருத்துக்களை ஒதுக்கிவைத்து  பால்புதுமையினர் சமூகத்தை சமூகநீதியை நோக்கி வழிநடத்துவதற்காக அவர்களைப் பற்றிக் கற்றுக்கொண்டேன்”

“மற்ற வழக்குகளைப் போல் இல்லாமல் இந்த வழக்கு, நீதிமன்றத்துக்கு ஒரு வாய்ப்பு என்பதோடு சேர்ந்து அனைவரையும் உள்ளடக்கி வழமை, சமூக அறநெறி மற்றும் கலாச்சாரத்தின் பெயரில் நடக்கும் பாகுபாடுகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கும் பொறுப்பை அளித்திருக்கிறது.”

“மனுதாரர்களை நேரடியாக சந்தித்து உரையாடிய பிறகு நான் (நாம்) தான் அவர்களைப் பற்றி புரிந்து, அவர்களை ஏற்றுக்கொண்டு வாழவேண்டுமே தவிர அவர்களை நமக்காகவும் நமது சமுதாய ஒழுக்கங்களுக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் மாறி வாழ நிர்ப்பந்திக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

மாற்றம் சமூகத்திலும் சட்டங்களிலும் வேண்டும்

திங்கட்கிழமை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய உத்தரவில் “சட்டம் இவர்களை அங்கீகரிக்காதது பிரச்சினையில்லை. சமூகத்தின் ஒப்புதல் கிடைக்காதது தான் உண்மையான பிரச்சினை. இந்த ஒரே காரணத்திற்காகவே சமூகத்தில் மாற்றம் நிகழவேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். இதோடு சேர்த்து சட்டப்பூர்வமான ஒரு அங்கீகாரமும் இருக்கும்போது சமூகத்தால் ஒருபால் திருமணங்கள் மேல் இருக்கும் பிம்பத்தில் பெரிய அளவிலான மாற்றம் நிகழும்” என்றும் எழுதியுள்ளார்.

இந்த முக்கியமானப் பிரச்சினையில் மாநில அரசும் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்த நீதிமன்றம்  “இப்போதைய தலைமுறை இதுகுறித்து அதிகம் பேசத் தொடங்கி இருக்கிறது. பால்புதுமையினர் சமூகம் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு தீர்வை மிகத் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றும் கூறி இருக்கிறது. பால்புதுமையினரைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. “அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் வரைக்கும் பால்புதுமையினரைப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் விட்டு வைத்திருக்கமுடியாது. சட்டப் பாதுகாப்பினை உறுதிசெய்வது வரைக்குமான இடைவெளியை நிரப்ப இந்த வழிகாட்டுதல்கள் உதவும்” என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.

ஒரு நபரைக் காணவில்லை என யாராவது புகார் செய்தால், காணாமல் போனதாகச் சொல்லப்படும் நபர் பால்புதுமையினர் சமூகத்தைச் சார்ந்த பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர் என்று தெரிய வந்தால் காவல்துறை அவர்களைத் துன்புறுத்தாமல் அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைக்கவேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு, மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் இந்த இடைக்கால வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக் கட்டுரை: In historic order, Madras HC gives guidelines against discrimination of LGBTQI+ people by Bharathi SP 

முழு தீர்ப்பினை படிக்க