திருநர் உரிமைகளுக்காக செயல்படும் ‘டிரான்ஸ் ரைட்ஸ் நவ்’ குழுவின் நிறுவனரும், சமூக செயற்பாட்டளருமான கிரேஸ் பானுவிற்கு தமிழ்நாடு அரசின் “சிறந்த மாற்றுப்பாலினத்தவருக்கான விருது” தமிழ்நாடு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களால் 75-வது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டது. திருநர்கள் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது தமிழ்நாடு அரசால் இந்த வருடம் (2021) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடியில் பிறந்த கிரேஸ் பானு ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். 75- வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு அரசு சிறந்த திருநர்களுக்காக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த விருதினைத் தனக்கு அளித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ள அவர், திருநர் சமூகத்திற்காக வழங்கப்படும் இந்த விருதினைப் பெறும் முதல் நபராக தான் இருப்பதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். பல காலமாக திருநர் சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் அரசியல் இடப்பங்கீட்டுக்காக கோரிக்கைகளை எழுப்பிவரும் தனக்கும், திருநர் மக்களுக்கும் இந்த விருது ஒரு அங்கீகாரமாக இருக்கும் எனவும் கிரேஸ் பானு கூறியுள்ளார். இந்த விருதினைத் தன்னை புறம் தள்ளிய பெற்றோருக்கும், திருநங்கை தாய் முன்னா நாயக் அவர்களுக்கும், திருநர் மீதான வெறுப்பு, பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் அனைத்து இளம் திருநர்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரேஸ் பானுவிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கும் இந்த விருது பால்புதுமையினருக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் அதே நேரத்தில் விருதுச் சான்றிதழில் “மூன்றால் பாலினம்” (Third Gender) என்ற பாகுபாட்டை விதைக்கும் பதம் உபயோகிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. Third Gender என்ற பதத்தை மாற்றக் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்றுக்கொண்டு விரைவில் அரசாணை வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும், வழங்கப்பட்ட சான்றிதழில் மாற்றித்தருவதாக உறுதியளித்ததாகவும் கிரேஸ் பானு தெரிவித்தார். இந்த விருதினைப் பெறுவதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட திருநங்கை எனும் பதத்தையும் அதனைத் தழுவி வந்த திருநம்பி எனும் பதத்தையும், இருவரையும் சேர்த்து குறிக்க திருநர் எனும் பதத்தையும் உபயோகிப்பதே சரியாக இருக்கும் என்பது தான் பெரும்பாலான பால்புதுமையினரின் கருத்தாக இருக்கிறது.
திருநர் செயற்பாட்டாளர்களை அங்கீகரித்து விருதுகள் வழங்குவது பாராட்டுக்குரியது என்றாலும் “சிறந்த ஆண்”, “சிறந்த பெண்” என்று பாலினம் சார்ந்து விருதுகள் வழங்கப்படுவது நடைமுறையில் இல்லாத நிலையில் “சிறந்த திருநங்கை” என்கிற பெயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதும் பொருத்தமானதாக இல்லை. இனிவரும் காலங்களில் இந்த முரண்கள் சரிசெய்யப்பட்டு சரியான முறையில் திருநர்களுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படும் என பால்புதுமையினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.